Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்று, கள்ளுக்கடையால் கலவரம்... இன்று, அதே இடத்தில் டாஸ்மாக்! - மதுக்கடை அச்சத்தில் பொதுமக்கள்

மதுக்கடை எதிர்ப்பு

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளுக்கடையால் கலவரம் நடந்த இடத்தில், தற்போது டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க உள்ளதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே இருக்கிறது, வைராவிகிணறு கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து இடிந்தகரை நோக்கிச் செல்லும் சாலையில், புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மதுபானக் கடைக்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருவதால், அந்தப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுக்கடை அமைய இருக்கும் இடமானது, குடியிருப்புக்கு வெகு அருகில் உள்ளது.

டாஸ்மாக் அமைய இருக்கும் இடத்தின் அருகில், இரு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. அந்த இடத்தில்,  35 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளுக்கடை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, மதுபோதையில் தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை பெரும் கலவரமாக மூண்டது. இரு சமூகங்கள் மூர்க்கமாக மோதிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை உருவானது. இதனால், பெரும் இழப்புகள் ஏற்பட்டன.

கள்ளுக்கடை காரணமாக, இதேபோல இரு முறை பெரும் கலவரம் நடந்தது. தற்போது, அதே இடத்தில் மதுக்கடை அமைப்பதால்,  வைராவிக்கிணறு, இடிந்தகரை மட்டுமல்லாமல் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். அதனால், இந்த மதுக்கடையை அகற்றக்கோரி அந்தப் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இது தொடர்பாக வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், இன்று நெல்லை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

மதுக்கடை எதிர்ப்பு

மனுவில், மதுக்கடையை அமைக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அங்கு மதுக்கடை அமைந்தால், குடியிருப்புப் பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அந்தப் பகுதி வழியாக விளை நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். தோட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கும். பெண்கள் தனியாக தோட்டத்துக்குச் செல்ல முடியாத நிலை உருவாகும். அதனால், மதுக்கடை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.  

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பா.ஜ.க மாநில மகளிரணி பொதுச்செயலாளர் கனி அமுதா தலைமையில் ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர், மனு கொடுக்கப்பட்டது.  அதில், பா.ஜ.க ராதாபுரம் ஒன்றியச் செயலாளர் கேசவன், நெல்லை மாவட்டத் தலைவர் தயா சங்கர், மாநில விவசாய அணியின் பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட அமைப்புப் பொதுச்செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close