Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ப்ளஸ் 1 வினாத்தாளில் மாற்றம்... இனி நூற்றுக்கு நூறு சாத்தியமா?

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை, 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை, கேள்வித்தாள் வடிவமைப்பு மற்றும் நெறிமுறைகளுக்கான ஆணையை வெளியிட்டிருக்கிறது.  இந்த ஆணை, இனி நூற்றுக்குநூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குச் சவாலாக இருக்கப்போகிறது.

நூற்றுக்கு நூறு மதிப்பெண்

இரண்டு மாதங்களுக்கு முன்பு 11-ம் வகுப்புத் தேர்வை பொதுத்தேர்வாகவும், 1,200 மதிப்பெண்ணுக்கான தேர்வை 600 மதிப்பெண்ணுக்கான தேர்வாக மாற்றி அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, மதிப்பீட்டு முறை மற்றும் வினாத்தாள் வடிவமைப்புக் குறித்த அரசாணை வெளியிட்டிருக்கிறது. 

இனி, தேர்வில் வினாத்தாளில் கேள்விகள், அறிந்துகொள்ளுதல் (30%), புரிந்துகொள்ளுதல் (40%), பயன்படுத்துதல் (20%), திறனடைதல் / படைப்பாற்றலைச் சோதிக்கும் வகையில் (10%) என்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கேள்விகள் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் இருப்பதால், மாணவர்களின் மனப்பாடக் கல்வி முறையை மாற்றி அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். 

எழுத்துத் தேர்வில் 90 மதிப்பெண்ணும், அக மதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கியிருக்கிறார்கள். அக மதிப்பீட்டில் வருகைப்பதிவுக்கு மூன்று மதிப்பெண், வகுப்புத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ஐந்து மதிப்பெண், செயல்திட்டம் / களப்பணிக்கு இரண்டு மதிப்பெண் எனப் பிரித்து வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம், புத்தகத்தைப் படித்தால் மட்டும் 100 மதிப்பெண் பெற முடியாது; வருகைப்பதிவும் வகுப்புத்தேர்விலும் களப்பணியிலும் கலந்துகொண்டால் மட்டுமே முழு மதிப்பெண்ணைப் பெற முடியும். 

நூற்றுக்கு நூறு மதிப்பெண்

எழுத்துத் தேர்வில் 90 மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மொத்த மதிப்பெண்ணான 100 மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்ணையும் பெற வேண்டும். இதைப்போலவே, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில் எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்ணுக்கும், செய்முறைத் தேர்வுக்கும் 20 மதிப்பெண்ணுக்கும், அக மதிப்பீடு 10 மதிப்பெண்ணுக்கும் வழங்கப்படும். இதில் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 15 மதிப்பெண் பெற வேண்டும். செய்முறைத் தேர்விலும் கலந்துகொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டிலும் சேர்த்து மொத்த மதிப்பெண்ணாக 35 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என்றும் வரையறுத்திருக்கிறார்கள். 

மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளை எழுதுவது கட்டாயம். மேலும், இரு தாள்களிலும் சேர்த்து எழுத்துத் தேர்வில் சராசரியாகக் கணக்கிடப்படும். 90 மதிப்பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்ணையும், 100 மதிப்பெண்ணுக்குக் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். 

தொழிற்கல்வி செய்முறை பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 75 மதிப்பெண்ணில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்ணையும், அக மதிப்பீடு மற்றும் செய்முறைத் தேர்வு என அனைத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்ணையும் பெற்றிருக்க வேண்டும். 

அனைத்து பாடங்களையும் மாணவர்களின் தொடர் கற்றலை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடத்திலும் 10 மதிப்பெண் அக மதிப்பீடு வழங்கப்படுகிறது. தொழிற்கல்விப் பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்பட்டுள்ளது. 

நூற்றுக்கு நூறு மதிப்பெண்

85 சதவிதத்துக்குமேல் வருகைப்பதிவு இருப்பவர்களுக்கு மூன்று மதிப்பெண்ணும், 80 சதவிகிதத்திலிருந்து 85 சதவிகிதம் வரை வருகைப்பதிவு உள்ளவர்களுக்கு இரண்டு மதிப்பெண்ணும், 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை உள்ளவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். 

வகுப்பு அளவிலான உள்நிலைத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து மதிப்பெண் வழங்கப்படும். இதில் சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை ஐந்து மதிப்பெண்ணாகக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். செயல்திட்டம் / களப் பயணம் போன்றவற்றுக்கு அதிகபட்சம் இரண்டு மதிப்பெண் வழங்கப்படும். 

இதைப்போலவே, தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அக மதிப்பீடு அதிகபட்சம் 25 மதிப்பெண் வழங்கப்படும். தொழிற்கல்வி படிப்பவர்கள் மாணவர்களின் வருகைப்பதிவு 85 சதவிகிதத்துக்குமேல் இருந்தால், ஐந்து மதிப்பெண்ணும், 80 சதவிகிதத்திலிருந்து 85 சதவிகிதம் வரை இருந்தால் நான்கு மதிப்பெண்ணும், 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை இருந்தால் இரண்டு மதிப்பெண்ணும் வழங்கப்படும். உள்நிலைத் தேர்வுகளில் அதிகபட்சம் 15 மதிப்பெண். இதை, சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் 15 மதிப்பெண்ணுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். செயல்திட்டம், களப் பயணம் போன்றவற்றுக்கு அதிகபட்சம் ஐந்து மதிப்பெண். தொழிற்கல்விப் பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கு 75 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 

செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்கள் வினாத்தாள் வடிவமைப்பில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 20, இரண்டு மதிப்பெண் குறுவினாக்கள் 10, மூன்று மதிப்பெண்கொண்ட சிறுவினாக்கள் 10-ம் கேட்கப்பட்டிருக்கும். குறுவினா மற்றும் சிறுவினாக்களில் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண்கொண்ட பெருவினாக்கள் ஏழுக்கு பதிலளிக்க வேண்டும். 

நூற்றுக்கு நூறு மதிப்பெண்

செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்விகள் 15, இரண்டு மதிப்பெண் குறுவினாக்கள் ஆறு, மூன்று மதிப்பெண் கேள்விகள் ஆறு, ஐந்து மதிப்பெண்கொண்ட பெருவினாக்கள் ஐந்து என மொத்தம் எழுபது மதிப்பெண்கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு வாரமும் உரிய செய்முறைப் பாடத்துக்குரிய பிரிவு வேளையில் செய்முறைப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும். செய்முறைப் பாடவேளையில் மாணவர்கள் கருவிகளைக் கையாளுதல், விவரித்தல், பதிவுசெய்தல் உள்ளிட்ட திறன்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். தேர்ச்சிபெறுவதற்கு செய்முறைப் புறத்தேர்வில் கட்டாயமாகப் பங்கேற்றிருக்க வேண்டும். 

செய்முறைப் புறத் தேர்வில், செய்முறைப் பதிவேட்டுக்கு மூன்று மதிப்பெண், திறன் மதிப்பீட்டுக்கு இரண்டு மதிப்பெண், செய்முறை புறத்தேர்வுக்கு 15 மதிப்பெண் என மொத்தம் 20 மதிப்பெண் வழங்கப்படும். தொழிற்கல்வி பாடச் செய்முறைத் தேர்வில் செய்முறைப் பதிவேட்டுக்கு 20 மதிப்பெண், செய்முறை வகுப்புகளில் பங்கேற்பு, கருவிகளைக் கையாள்வதற்கு ஐந்து மதிப்பெண், செய்முறை புறத் தேர்வுக்கு 50 மதிப்பெண் என மொத்தம் 75 மதிப்பெண் வழங்கப்படும். 

நூற்றுக்கு நூறு மதிப்பெண்

11-ம் வகுப்பில் ஏதேனும் ஒரு தேர்வில் வெற்றிபெறவில்லை என்றாலும், 12-ம் வகுப்பில் படித்துக்கொண்டே 11-ம் வகுப்புப் பாடத்தின் தேர்வையும் எழுதவேண்டியிருக்கும். இனி 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் கடினமாக்கப்பட்டு, மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன், படைப்பாற்றல் திறன் போன்றவற்றைச் சோதிப்பதால் நூற்றுக்கு நூறு சாத்தியங்கள் குறைவு. ஆனால், இந்த முறை தகுதித் தேர்வையும் நுழைவுத்தேர்வையும் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வார்கள் என நம்புகிறது பள்ளிக்கல்வித் துறை.

இந்த மாற்றத்தின் விளைவை அறிந்துகொள்ள, இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.  காத்திருப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close