Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்கத் தயார்!' - தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்த நஸ்ரியா

லவாரிய உறுப்பினர் அட்டை வழங்காமல் 3 ஆண்டுகளாகக் காலம் கடத்தும் சமூக நலத்துறையைக் கண்டித்து தீக்குளிக்கப் போவதாக திருநங்கை கூறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருநங்கை நஸ்ரியா



பரமக்குடியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் உடலில் ஏற்பட்ட மாறுதலையடுத்து 2013-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். திருநங்கையாக மாறிய அவர் தனது பெயரையும் நஸ்ரியா என மாற்றி கொண்டார். ப்ளஸ் டூ வரை படித்துள்ள நஸ்ரியா அஞ்சல் வழியாக இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தமிழகக் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நஸ்ரியா கடந்த மாதம் 31-ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்க சென்றார். ஆனால், 'திருநங்கைக்கான சான்றிதழ் இல்லை' எனக் கூறி அவரை உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வருகிறது.

இதைத் தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த நஸ்ரியா திருநங்கைக்கான சான்றிதழை வழங்காமல் சமூக நலத்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாக தாமதம் செய்வதாகவும், இன்று தனக்குச் சான்றிதழ் வழங்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கிருந்த சமூக நலத்துறை அலுவலர்கள் நஸ்ரியாவை சமாதானம் செய்து தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நஸ்ரியா, ''எனக்கு சிறு வயது முதலே பெண் சாயல் இருந்து வந்தது. எனது பருவ வயதில் எனக்குள் பெண் தன்மை அதிகமாகக் காணப்பட்டது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினேன். எனது பெயரையும் நஸ்ரியா என மாற்றி கொண்டேன். இதன் பின் 2014 ஜனவரியில் நான் திருநங்கைக்கான நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்தேன். இந்நிலையில் அண்ணன் தம்பி உறவு முறை கொண்ட ஆண்களிடம்கூட நான் பேசுவதை வெளியாட்கள் தவறாகப் பார்த்தனர். இதனால் திருநங்கைகளுக்காக இயங்கும் அமைப்புகளுடன் சேர்ந்து வாழ்ந்தேன். அப்போது பிச்சைகேட்டு செல்லும் போதெல்லாம் 'உனக்குத்தான் கால் கை நல்லாயிருக்கே ஏன் பிச்சை எடுக்கிறாய்? ஏதாவது வேலைக்குப் போக வேண்டியதுதானே. உன்னைப் போன்றவர்கள் பிச்சை எடுப்பதிலும், விபசாரம் செய்வதிலும் ஏன் ஈடுபடுகிறீர்கள்?' எனக் கேலி பேசினர்.

ஆனால் வேலை கேட்டு செல்லும் எங்களுக்கு வேலை கொடுக்க யாரும் முன் வருவதில்லை. இந்நிலையில் திருநங்கைகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கியிருப்பதை அறிந்து காவலர் வேலைக்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தில் திருநங்கை எனக் குறிப்பிட்டிருந்தேன். இதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் என்னைத் தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வில் தேர்ச்சியடைந்த நான் அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வுக்குச் சென்றபோது அனுமதிக்க மறுத்து விட்டனர். இது குறித்து விளக்கம் கேட்டதற்கு 'நீ திருநங்கை என்பதற்கான சான்றிதழ் இல்லை' எனக்  காரணம் கூறினர். உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் திருநங்கை என்பதற்கான சோதனை செய்யப்பட்டு மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர். இந்தச் சான்றுடன் உடல் தகுதித் தேர்வுக்குச் சென்ற போதும் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. 

இதை எதிர்த்தும், காவலர் பணிக்கான இடத்தில் ஒன்றினை எனக்கு ஒதுக்கி வைக்க உத்தரவிடக் கோரியும் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மாவட்ட சமூக நலத்துறையினரின் திருநங்கைகளுக்கான நல வாரிய உறுப்பினர் அட்டை தேவையுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த உறுப்பினர் அட்டையினை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நான் திருநங்கை என்பதைப் பொது வெளியில் வெட்கத்தை விட்டு நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். அந்த அளவுக்கு நான் மன வேதனைப்பட்டுள்ளேன். இன்று எனக்குத் திருநங்கைக்கான நலவாரிய உறுப்பினர் அட்டையினை வழங்காவிட்டால் இங்கேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்" என்றார். திருநங்கையின் இந்தத் திடீர் அறிவிப்பால் சமூக நலத்துறை அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close