Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மறுத்த அமைச்சர்கள்... அடம்பிடித்த எம்எல்ஏ-க்கள்!' - அமைச்சரவை மாற்றத்தின் கடைசிக் காட்சிகள்

தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டதுக்குப்பின் பல பரமபதங்கள் ஒளிந்திருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. நீண்ட நேர ஆலோசனைக்குப்பிறகே அமைச்சரவை மாற்றத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இசைவு தெரிவித்தார் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அ.தி.மு.க-வில் அதிகாரபூர்வ அணிகள் இணைப்பு இன்று நடந்து முடிந்துவிட்டது. பதவி கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். சிரித்த முகத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சித் தலைமை அலுவலகத்தில் கைகுலுக்கிக் கொண்டனர். அணிகள் இணைப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவியோடு நிதித்துறை, வீட்டு வசதி உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடவே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் அவர் வகிக்கப் போகிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மாஃபா.பாண்டியராஜனுக்குத் தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூன்று கேபினட் பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டு பேருக்கு மட்டுமே பதவியை ஒதுக்கீடு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமிக்குத் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அறிவித்தனர். 'சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' ஆகிய இரண்டு முக்கியக் கோரிக்கைகளை மட்டுமே, பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். விசாரணைக் கமிஷனுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், பொதுக் குழு கூடி சசிகலாவை முறைப்படி நீக்க உள்ளது.

அமைச்சரவை மாற்றம் குறித்து அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "அணிகள் இணையும்போது, யார் யாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். மறைமுகப் பேச்சுவார்த்தையில், 'செம்மலைக்கு அமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். முதலில் தலையாட்டிய கொங்கு டீம், பின்னர் ' அமைச்சரவையில் புதிதாக யாரையும் நீக்க முடியாது. அப்படிச் செய்தால் மேலும் சிலர் பதவியைக் கேட்பார்கள். இதனால் ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பம் ஏற்படும்' எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, ' மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக் கல்வித்துறை இலாகா ஒதுக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த செங்கோட்டையனோ, ' நான் விட்டுக் கொடுக்கிறேன். ஆனால், எனக்குப் பொதுப்பணித்துறை ஒதுக்க வேண்டும்' என இயல்பாக கேட்டிருக்கிறார். இந்தப் பதிலை முதல்வர் தரப்பு எதிர்பார்க்கவில்லை. இதன்பின்னர், மாஃபா பாண்டியராஜனை சமாதானப்படுத்தி, தமிழ் வளர்ச்சித்துறையை வழங்கியுள்ளனர். கூடவே, சேவூர் ராமச்சந்திரனிடமிருந்த தொல்லியல் துறையையும் மா.ஃபாவுக்கு ஒதுக்கியுள்ளனர். ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும் ஓ.பன்னீர்செல்வம் வசம் வந்துவிட்டது. தினகரனோடு நெருக்கம் காட்டிவந்த கொங்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் பதவி பறிக்கப்படும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், அவரிடமிருந்த வீட்டு வசதித்துறை பறிக்கப்பட்டு, கால்நடை துறை இலாகாவை ஒதுக்கியுள்ளனர்.

பெங்களூரு சிறையில் சசிகலாவை அடிக்கடி சந்தித்து வந்த கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியிடமிருந்த இலாகா பறிக்கப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக்கப்பட்டுள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்குக் கனிமம் மற்றும் சுரங்கத்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சம்பத்திடமிருந்து இந்த இரண்டு முக்கிய இலாகாக்களும் பறிக்கப்படுவதற்கு, மாவட்ட அரசியல்தான் காரணம். அமைச்சரவை மாற்றம் குறித்து பல வாரங்களாக முதல்வர் ஆலோசித்து வந்தார். ஒவ்வொரு முறையும் எடுக்கப்பட்ட முடிவுகள் மாறிக் கொண்டே வந்தன. குறிப்பிட்ட சில அமைச்சர்கள், 'எங்கள் துறையில் கை வைத்தால் நடப்பதே வேறு' என எச்சரிக்கை தொனியில் பேசி வந்தனர். இதன் விளைவாக சிலரது பதவிகள் தப்பிவிட்டன. இன்று எப்படியும் அமைச்சர் பதவி வந்து சேரும் என எதிர்பார்த்த சில எம்எல்ஏ-க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்குக் கட்சிப் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் கொங்கு அணி உறுதியளித்துள்ளது. தினகரனோடு நட்பு பாராட்டும் தளவாய் சுந்தரத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி பறிக்கப்பட்டு, மனோஜ் பாண்டியன் வசம் ஒப்படைக்கப்படலாம் என்ற தகவலும் வலம் வருகிறது. அடுத்ததாக, முறைப்படி சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்படவுள்ளது. இதை எதிர்கொள்வது குறித்து தினகரன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்" என்றார் விரிவாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close