Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைத் தொழிலாளர்களை மீட்க புது வழிகாட்டும் ‘குழந்தை நலக்குழு’! #StopChildLabour

குழந்தை

‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பது பழக்கப்பட்ட வாக்கியம். கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும் என்று சொல்கிற இதே சமூகத்தில்தான் எங்கெங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 

வளரும் நாடான இந்தியாவில் இன்றும் ஒருவேளைச் சோற்றுக்கு கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் புத்தகம் சுமக்க வேண்டிய கைகள், குடும்பத்தைக் சுமக்கும் நிலையில் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் காலத்தில்தான் குழந்தைத் திருமணமும் நடக்கின்றன. பாலியல் தொல்லைகளை தினம் தினம் சந்திக்கின்றன. தமிழக அரசு ஆதரவற்ற குழந்தைகளையும், ஆபத்திலிருக்கும் குழந்தைகளையும் காப்பாற்றிப் பேணுவதற்கு 'குழந்தைகள் நலக் குழு' என்ற அமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துள்ளது. அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என அறிய, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 'குழந்தைகள் நலக் குழு' அமைப்புக்குச் சென்றேன். 

குழு உறுப்பினர்களில் ஒருவரான மேரி பன்னீர்செல்வம், ''குழந்தைகள் நலக் குழு என்பது, சமூகப் பாதுகாப்புத் துறை கீழ் வருகிறது. ஒரு குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதற்கான உறுப்பினர்களை 'சோஷியல் டிவன்ஸ் டிபார்ட்மென்ட்' தேர்வுசெய்கிறது. அரசுப் பணியிலிருக்கும் சமூக ஆர்வலர்களைத் தேர்வுசெய்வார்கள். குழந்தைத் தொழிலாளர்களை மட்டுமன்றி, சமுதாயத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளையும், ஆபத்தில் இருக்கும் குழந்தைகளையும் காப்பாற்றி மறுவாழ்வு வழங்குவது இந்த அமைப்பின் முக்கியப் பணி. 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கட்டாயக் கல்வி, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், குழந்தைத் திருமணத்துக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் உள்ளது. ஆனாலும், குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. எங்கள் பணி, இப்படிப்பட்ட குழந்தைகளை மீட்டு உரிய காப்பகத்தில் சேர்த்துப் பாதுகாப்பதே. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் போன வருடம் நானூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளையும், இந்த வருடம் இதுவரை 141 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளோம். 

குழந்தை

நிறையக் குழந்தைகள் அனாதையாவதற்கும் தவறான வழியில் செல்வதற்கும் அவர்களின் பெற்றோர்களே காரணமாக அமைகின்றனர். பெற்றோரின் விவகாரத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அப்பா அல்லது அம்மா இருக்கும் குழந்தை, பெற்றோர்களின் தகாத உறவு ஆகியவை குழந்தைகளின் மனதைப் பெரிதும் பாதிக்கின்றன. அது, அவர்களை வீட்டைவிட்டு வெளியேறச் செய்து சமூகவிரோதிகளிடம் சிக்கவைக்கிறது. நாங்கள் மீட்டுவரும் குழந்தைகளில் பெரும்பாலானோர் இதுபோன்ற பிரச்னைகளையே சொல்கின்றனர். பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு பள்ளிக்கூடத்தில் சேர்த்தால், அவர்களின் பெற்றோர் வந்து, 'எங்கள் வழக்கப்படி பிச்சைதான் எடுக்க வேண்டும்' என வாதிடுகிறார்கள். குழந்தைகளின் வாழ்கையைத் தங்களின் கலாசாரம் என்கிற பெயரில் சீரழிக்கின்றனர். நமது நாட்டில் காணப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருடர்களில் பாதிக்கு மேற்பட்டோர் 12 வயதுக்குக் கீழ் உள்ள வடநாட்டுக் குழந்தைகளே'' என்கிறார். 

குழந்தைகள் நலக் குழுவின் மற்றொரு உறுப்பினரான மேரி பெனா, ''இதில், பெண் குழந்தைகளே அதிகம் பாதிப்படைகின்றன. காதல் என்ற போர்வையில், தவறான ஆண்களின் ஆசைக்கு இணங்கி வாழ்க்கையைத் தொலைக்கும் சிறுமிகளும் அதிகம். பெற்றோரின் அக்கறையின்மையும் விழிப்புஉணர்வு இல்லாமையுமே இதற்குக் காரணம். நாங்கள் முடிந்தவரை மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தன்னார்வலர்களுடன் இணைந்து, பள்ளி மற்றும் ஊர்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுவுடன் சேர்ந்து மக்களிடம் உரையாடுகிறோம். ஆசிரியர், செவிலியர், மருத்துவர் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம். எங்களால் மீட்கப்படும் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பும், பிறகு தொழிற்கல்வியும் கொடுக்கிறோம். பன்னிரண்டு வயதுக்குள் உள்ள குழந்தைகளை தற்காலிக காப்பகத்தில் சேர்க்கிறோம். பிறகு, தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்து, அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கவைக்கிறோம். ஆபத்தில் இருக்கும் குழந்தைகளைக் காக்க 'சைல்டு லைன் ரெஸ்கியூ' என்ற அமைப்பு உள்ளது. 1098 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு இதுபோன்ற குழந்தைகள் பற்றி தகவல் அளிக்கலாம். பொதுமக்கள் இதுபோன்ற குழந்தைகளைக் கண்டால் எங்களைத் தொடர்புகொள்ளலாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் நடத்தை மற்றும் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டும். எங்கள் குழுவில் காலியிடங்கள் அதிகம் உள்ளது. அரசாங்கம் இதைக் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால், எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் அதிகமாக தடுக்கப்பட்டு, முற்றிலும் ஒழிக்கப்படும் என்று நம்புகிறோம்'' என்கிறார். 

நாளையச் சமுதாயம் செழிக்க குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close