Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளைக் கண்டுகொள்ளாத அமைச்சருக்கு சிறப்பு விருது..! - கொந்தளிக்கும் விவசாயிகள்

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாமை, கடுமையான வறட்சி, தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை அண்டை மாநிலங்கள் திறந்து விடாமல் இருத்தல், விவசாயிகளுக்கு போதிய வழிகாட்டல் இல்லாமை எனப் பல காரணங்களால் விவசாயம் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்து வருகிறது. இதுபோக இருக்கும் குறைவான தண்ணீரை வைத்துப் பயிரிட்ட விவசாயிகளும் வறட்சியால் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். அதிலும் டெல்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 300 -க்கும் அதிகமான விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். இவர்களுக்குச் சரியான இழப்பீடும், விவசாய வழிகாட்டுதலும் இல்லாததுதான் காரணங்கள் என்பது விவசாய ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றினார். அப்போது பணியில் சிறந்து விளங்கிய அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் விருதுகளை வழங்கி சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர். அவர் பேசும்போது, "தமிழக அரசின் தொடர் முயற்சியால், புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 1882 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10,000 ரூபாய் 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சிறந்து விளங்கியதற்காக விவசாயத்துறை அமைச்சருக்கு விருதை அளித்துக் கெளரவித்தார். அதுதான் இப்போது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தராத அமைச்சருக்கு அத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டார் என விருது வழங்கினால் விவசாயிகள் கொந்தளிக்க மாட்டார்களா?

பயிர்க்கடன் விவசாயிகள் மானியம்

இதுபற்றித் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர், சுந்தர விமலநாதனிடம் பேசினோம். " பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, சோளம் என அனைத்துப் பொருள்களுக்கும் பயிர்க்காப்பீடு பிரீமியம் சுந்தர விமலநாதன்செலுத்தியுள்ளோம். அரசாங்கம் மத்திய அரசின் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு விவசாயிகளின் பிரீமியத்தை செலுத்தவில்லை. இதைக் கண்டித்து விவசாயிகள் கேட்டபோது, அவர்களுக்கான பிரீமியம் பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். அவர்களுக்குரிய பயிர் இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இது அரசாங்கத்தின் அலட்சியப்போக்கைக் காட்டுகிறது. பிரீமியத்தை வாங்கிக்கொண்டு அதைக் கட்டாமல் விட்டதன் விளைவால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத அமைச்சருக்குச் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பு விருது கொடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் நுகர்வோர் நீதிமன்றம் சென்றால், நிச்சயமாகத் தீர்ப்பு கிடைக்கும். ஆனால் எத்தனை விவசாயிகள் வழக்குத் தொடுத்து நிவாரணத்தைக் கேட்டுப் பெறப்போகிறார்கள். இதுதான் அதிகார வர்க்கத்தின் பலம்... இதுபற்றி 24-ம் தேதி நடைபெற இருக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  விவசாயிகள் கேள்வி எழுப்ப இருக்கின்றனர்" என்றார்.

இதுபற்றி விரிவாகப் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ராஜா சிதம்பரம், "பிரதமர் பயிர் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தமிழக அரசு அமல்படுத்தச் சொன்னது. இந்தத் திட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர்தான் தலைவர். இத்திட்டத்தை மாவட்டம் முழுவதுமாக கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இதுதவிர, புள்ளியியல் துறை, வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இணைந்து மாதம் ஒருமுறை விவசாயிகளைச் சந்திப்பது வழக்கம். முதலில் பயிர்க்காப்பீட்டில் 20 முதல் 25 கிராமங்கள் வரை பயிர் பாதிப்பைச் சந்தித்தால் மட்டுமே இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஆனால், இப்போது ஒரு கிராமம் பாதிக்கப்பட்டாலே இழப்பீட்டுத் தொகை தர வேண்டும். இவர்கள் கணக்கிற்கு பிரீமியம் தொகை வாங்குகிறார்களே தவிர, அதை முறையாகச் செயல்படுத்துவதில்லை. ஒவ்வொரு பயிருக்கும் செலுத்திய பயிர்க்காப்பீட்டு பிரீமியம் கணக்கிடப்பட்டு, ஏக்கருக்குக் குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை என வகைப்படுத்தப்பட்டுக் குறிப்பிட்ட தொகை நஷ்டஈடாக வழங்கப்படும். முதலில் தனியார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம்தான் இருந்தது. இப்போது அக்ரிகல்ச்சுரல் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா லிமிட்டெட் என்ற மத்திய அரசு நிறுவனம்தான் இன்ஷ்யூரன்ஸை வசூலிக்கிறது. இத்திட்டம் ராமநாதபுரம், திருவாரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தைத் துவக்கியபோது மாவட்ட ஆட்சித்தலைவர்களை தலைவராக அமைத்துத்தான் விளம்பரம் செய்தனர். அப்போதைய பெரம்பலூர் ஆட்சித்தலைவராக இருந்த நந்தகுமார், பிரீமியம் மட்டும் வாங்கிக் கொண்டு இத்திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதற்குக் காரணம் கேட்டால் அதிகாரிகள் சொல்ல மறுக்கிறார்கள். இதில் கொடுமையிலும் கொடுமை, இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விவசாயத்துறை அமைச்சருக்குச் சிறப்பு விருது அளிக்கிறார், முதலமைச்சர். இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதற்கு சமம். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பின்னால், இப்போது புதிதாக வந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் எனக்குத் தெரியாது என்கிறார். இதற்கெல்லாம் யார் பொறுப்பு?.. இதுபற்றி 24-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் திட்டத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து குரல் கொடுக்க இருக்கிறோம். அதற்கும் பதில் இல்லையெனில் அடுத்த மாதம் அனைத்துச் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு கடைசியாக கைக்கொடுப்பது வறட்சி நிவாரண நிதியும், பயிர்க் காப்பீட்டுத் தொகையும்தான். இந்த முறை அதுவும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இதை எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்த அமைச்சருக்குச் சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது. "ஒரு விவசாயி அழத் தொடங்கி விட்டால் நாடு விழத் தொடங்கி விட்டது என்று அர்த்தம்" என்பது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எப்போது விளங்கப்போகிறது என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close