Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேற்று கரடி.. இன்று சிறுத்தை... அச்சத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் நேற்று தனது வாழைத் தோட்டத்தில் இருந்தபோது குட்டியுடன் வந்த கரடி ஒன்று அவரைத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பாபநாசம் அருகே உள்ள பொதிகையடி கிராமத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்து அச்சுறுத்தி வருகிறது. 

கரடி சிறுத்தை அச்சுறுத்தல்

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தர்ராஜன் என்பவரது வீட்டில் இருந்த நாயையும் சந்திரன் என்பவரின் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஆட்டையும் சிறுத்தை தூக்கிச் சென்றது. அதன்பின்னர் வனத்துறையினரின் முயற்சியால் அந்த சிறுத்தை காட்டுக்குள் விரட்டப்பட்டது. இதனால் சில வாரங்கள் மக்கள் நிம்மதியாக இருந்தனர். 

இந்த நிலையில், பொதிகையடி வடக்குத் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற மில் தொழிலாளியான சுந்தரம் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் நேற்று முதல் காணாமல் போனது. இதனால் அவர் பல இடங்களிலும் நாயைத் தேடி வந்தார். அப்போது காட்டுப் பகுதியில் ரத்தம் உறைந்து கிடந்தது. அதைச் சுற்றிலும் உள்ள பகுதியில் பார்த்தபோது, நாயின் எலும்புகள் மற்றும் உடலின் சில பாகங்கள் சிதறிக் கிடந்தன. 

இதைக் கண்ட பொதிகையடி கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நாயை சிறுத்தை அடித்து தூக்கிச் சென்றது உறுதியாகி இருப்பதால், விவசாயப் பணிகளுக்காக காட்டுப் பகுதிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அச்சுறுத்தும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close