Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ. நிலைப்பாட்டுக்கு எதிராக தமிழக அரசு! ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ராமதாஸ் புகார்

ராஜீவ் கொலை வழக்கில், 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஜெயலலிதா அரசின் நிலையாக நீடித்தது என்று கூறிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,ஏழு பேரின் விடுதலைகுறித்த வழக்கில், தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலைசெய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இச்சிக்கலில், ஜெயலலிதாவின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர், பல்வேறு கட்டங்களில் விடுதலைசெய்யப்பட்டுவிட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் மட்டுமே ஆயுள் தண்டனை அனுபவித்துவருகின்றனர். இவர்களில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனை 2,000-வது ஆண்டுகளின் தொடக்கத்திலேயே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் தங்களை விடுதலை செய்யக் கோரி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இன்னும் நிலுவையில் உள்ள அந்த வழக்கில்தான் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது. இதேவழக்கில், கடந்த சில நாள்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவிலும் இதே நிலைப்பாட்டைத்தான் தமிழக உள்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால், அப்போது தாக்கல்செய்யப்பட்டது 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மனு என்றும், அதற்குப் பதிலாக புதிய மனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் அரசு கூறியிருந்தது. இதனால் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலைசெய்ய மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும், அதனால் இவர்களின் விடுதலையைத் தாங்களும் எதிர்ப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இது மிகவும் அபத்தமான, ஆபத்தான வாதம் ஆகும். ராஜீவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எழுவரும் 23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்திருந்ததால், அவர்களை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஜெயலலிதா, அதுகுறித்த மத்திய அரசின் கருத்தைக் கேட்டார். ஆனால், கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏழு தமிழர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. அதனால்தான், ஏழு தமிழரும் இன்னும் விடுதலையாக முடியவில்லை. ஆனாலும், ஏழு தமிழரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதே ஜெயலலிதா அரசின் நிலையாக நீடித்தது.

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலைகுறித்த வழக்கிலும் இதே நிலைப்பாட்டைத்தான் தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். மாறாக, தமிழர்களின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிப்பதால், நாங்களும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று கூறுவதன் மூலம் மத்திய ஆட்சியாளர்களின் தமிழகத் தரகர்களாக அ.தி.மு.க அரசு மாறிவருகிறது என்பதையே காட்டுகிறது. தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் மத்திய அரசின் வழக்கம். அதை எதிர்ப்பதுதான் தமிழக அரசின் வழக்கமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை, இரு தமிழர்களையும் விடுதலைசெய்யத் தயார் என்று தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்து, அதை உயர் நீதிமன்றம் ஏற்காமல், மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்று அவர்களை விடுதலைசெய்ய முடியாது என்று தீர்ப்பளித்திருந்தால்கூட நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நமக்கு துணையாக இருந்திருக்கிறது என்ற நிம்மதியாவது தமிழக மக்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றில் ஜெயலலிதா அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை பன்னீர்செல்வம் அரசும், பழனிசாமி அரசும் எவ்வாறு மேற்கொண்டனவோ, அதே மாற்றம்தான் ஏழு தமிழர் விடுதலை விவகாரத்திலும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்தால், அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராஜீவ் கொலைக்குக் காரணமான வெடிகுண்டைத் தயாரித்தது தான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், இலைமறை காய்மறையாகத்  தெரியவந்துள்ள சில தகவல்கள், ராஜீவ் கொலை வழக்கின் அடித்தளத்தையே சிதைக்கக்கூடியவையாகும். ஆனால், இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல், தமிழர்கள் விடுதலைக்கு எதிராக  மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்கமுடியாது. ஏழு தமிழர் விடுதலைகுறித்த வழக்கில், தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஏழு தமிழர் விடுதலை வழக்கை விரைவுபடுத்தி, சாதகமான தீர்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close