Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்படி இருந்த மெரினா இப்படி ஆனது தெரியுமா? சென்னை தினம் சிறப்புப் பதிவு #Chennai378

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்

ங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஆளுனராக இருந்த Sir Mountstuart Elphinstone Grant Duff  என்பவர், நேப்பியர் பாலம் தாண்டி கடற்கரை வழியே பயணிக்கும் போது, அந்தப் பகுதியில் இருந்த தென்னந்தோப்புகள், அலைகள் விளையாடும் அழகிய கடற்கரை பகுதியால் ஈர்க்கப்பட்டார். கடற்கரைப் பகுதியைச் சீரமைத்துப் பொழுதுபோக்கு இடமாக மாற்ற முயற்சி எடுத்தவர் அவர்தான். மெரினா கடற்கரை என்றும் அவர் பெயர்  வைத்தார். 

அதிசய உலகம்

Sir Mountstuart Elphinstone Grant Duff  தன்னுடைய NOTES OF AN INDIAN JOURNEY என்ற புத்தகத்தில் இதுபற்றிக்  குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள கடற்கரையில் 12 மணி நேரம் செலவழித்தால், அது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கோட்டை, கதீட்ரல் சர்ச் ஆகியவற்றை கடந்து செல்லும் போது, பிற இந்திய நகரங்களை விட பிரமாண்ட கட்டடங்களைக் கொண்டநகரமாக சென்னை இருக்கிறது என்றுப் சொல்லி இருக்கிறார்.

மெரினா 1879-ம் ஆண்டு சென்னை கடற்கரைக்கு வந்த அவர், களிமண் திட்டுக்களை பார்த்தார். மேடு பள்ளங்களாக இருந்தன. இதனால், அந்த கடற்கரைப் பகுதியைச் சீரமைத்தார். நேப்பியர் பாலத்தில் இருந்து சாந்தோம் வரை பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்காக சாலை அமைத்தார். மலர் படுகைகள் அமைத்து இயற்கை எழிலை அதிகரித்தார்.கழிவறை, பொழுதுபோக்குவசதிகள் எல்லாம் கொண்டதாக கடற்கரையை மாற்றினார்.  மின் விளக்குகளும் அமைத்தார். இதனால், இரவு நேரத்தில் ஒரு அதிசய உலகத்துக்குள் நுழைந்தது போல மெரினா கடற்கரை திகழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

மெரினா பெயர் வந்த விதம்

தாம் எதற்காக மெரினா என்று பெயர் வைத்தேன் என்பதற்கு Grant Duff ஒரு தகவலை அவர் பதிவு செய்துள்ளார். "மெட்ராஸ் நகரத்தால் நாம் பெரும் அளவில் பயன் அடைந்திருக்கிறோம். அலங்கோலமாக இருந்த கடற்கரையை சீரமைத்து, அழகிய கடற்கரை பகுதியாக மாற்றி அமைத்திருக்கிறேன். இப்போது இந்தப் பகுதியைப் பார்க்கும் போது அழகான பழைய சிசிலியன் நகர் எனக்கு நினைவுக்கு வருகிறது. எனவே, இந்த கடற்கரைக்கு 1884-ல் மெரினா என்று பெயர் வைத்தேன்" என்று சொல்லி இருக்கிறார்.   இதன் பின்னர்தான் மெரினா கடற்கரை என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றது.

திலகர் திடல்

சுதந்திரப் போராட்ட காலத்தில் மெரினா கடற்கரையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதி ஆகியோர் பங்கேற்ற  பொதுக்கூட்டங்கள்  மெரினாவில் நடைபெற்றன.  இந்த இடத்துக்கு திலகர் திடல் என 1908-ம் ஆண்டு சுப்ரமணிய சிவா பெயர் வைத்தார்.  திலகர் திடலுக்கு அடையாளமாக இப்போது நினைவு கல் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

திலகர் திடல்

சீரணி அரங்கம்

சுதந்திரத்துக்குப் பின்னர் மெரினா கடற்கரை பல மாற்றங்களை கண்டது.  நீச்சல்குளம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, பெரியார் சிலை என மொத்தம் 17 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க ஒன்றாக சீரணி அரங்கம் கட்டப்பட்டதைச்  சொல்லலாம். அண்ணா முதல்வராக இருந்தபோது 1970-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் சீரணி அரங்கத்தை அமைத்தார்.  அந்த அரங்கில் பின்னாளில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகளின் சார்பில் பொது கூட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி நள்ளிரவு சீரணி அரங்கத்தை அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்தனர்.

சீரணி அரங்கம் "சீரணி அரங்கம் இருக்கும் பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது என்று பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததால், அரசு உத்தரவின் பேரில் சீரணி அரங்கம் இடிக்கப்படுகிறது" என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் விளக்கம் சொன்னார்கள். சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அப்போதே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காணும் பொங்கல்

சென்னை மெரினா கடற்கரையில் ஆண்டுதோறும் ஜனவரி 17-ம் தேதி காணும் பொங்கலின்போது மாட்டு வண்டிகளில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு காணும் பொங்கல் தினத்தன்றும் லட்சகணக்கானோர் மெரினாவில் கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக வரும் காணும் பொங்கலில் உறவினர்கள், நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் உற்சாகமாக சென்னை மக்கள் பொழுதைக் கழிப்பார்கள்.

சுனாமி பேரலைகள்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வங்க கடலோரம் இருந்த சென்னை, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுனாமி அலைகள் எழுந்து கடற்கரைப் பகுதியை மூழ்கடித்தன. அன்றைய தினம் மெரினா கடற்கரையில் காலை வேலையில் நடைபயிற்சி மேற்கொண்டிந்தவர்கள் பலர் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டனர். மெரினாவின் உட்புற சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. மெரினா வரலாற்றில் அழியாத சோகத்தை சுனாமி அலைகள் விட்டுச் சென்றன.

சுனாமி

ஜல்லிக்கட்டுப் போராட்டம்

மெரினாவில் சமகாலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரலாற்று பதிவாக ஆகியிருக்கிறது. லட்சகணக்கானோர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மெரினாவில் கூடினர். ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் தினமும் லட்சகணக்கான மக்கள் பங்கேற்றனர். மெரினா எழுச்சி, எருது எழுச்சி என்றெல்லாம் இந்தப் போராட்டம் குறித்து பேசப்பட்டது. இளைஞர்கள் முன்னெடுத்த இந்த சமகாலப் போராட்டத்துக்கு  மெரினா சாட்சியாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close