Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெற்றோர் கண்முன்னே மகள் கடத்தல்! சினிமா படத்தை விஞ்சிய சம்பவம்

கல்லூரி செல்லுவதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மகள், தாய் கண் எதிரிலேயே ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. சினிமாவை விஞ்சும் இந்த கடத்தல் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி கோவிந்தம்மாள் தெரு கருப்பசாமி கோயில் அருகே வசித்து வரும் ராஜூ-கோவிந்தம்மாள் தம்பதிக்கு ஜோதி என்ற 19 வயதுடைய மகளும் மணிகண்டன் என்ற 12 வயதுடைய மகனும் இருக்கிறார்கள். நாமக்கல்  மாவட்டம் பாச்சல் கிராமத்திலுள்ள ஞானமணி பொறியியல் கல்லூரியில் EEE முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார் ஜோதி. வழக்கம்போல் கல்லூரி செல்லுவதற்காக இன்று காலை 8.45 மணிக்கு தன் தாய் கோவிந்தம்மாளோடு சீலநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் கல்லூரி வாகனத்துக்காகக் காத்திருந்தார். அப்போது திடீரென காரில் வந்த ஒரு கும்பல், கோவிந்தம்மாளை கீழே தள்ளிவிட்டுட்டு ஜோதியை அலேக்காகத் தூக்கிச்சென்றுவிட்டது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கோவிந்தமாள் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், காதல் விவகாரத்தில் ஜோதி கடத்தப்பட்டுள்ளாரா, முன் விரோதத்தால் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி ஜோதியின் தாய் கோவிந்தம்மாள் கூறுகையில், ''என் மகள் கல்லூரி செல்லுவதற்காக சீலநாயக்கன்பட்டி பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தாள். நானும் என் மகள் கூடவே இருந்தேன். அப்போது திடீரென்று ஒரு கார் வந்து எங்க பக்கத்தில் நின்றது. அதிலிருந்து 3 பசங்க இறங்கினாங்க. அந்தப் பசங்கள நான் இதுவரை பார்த்ததில்லை. காரிலிருந்து இறங்கிய பசங்க என் மகளைத் தூக்கினாங்க. ஐயோ, அப்பான்னு... கத்திக்கிட்டு என் மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். என் கைகளை விலக்கி என்னை கீழே தள்ளி விட்டுட்டு காரில் என் மகளை ஏற்றினார்கள். காரின் கதவைப் பிடித்தேன். வண்டியை எடுத்துவிட்டார்கள். வண்டி போகப் போக பின்னாடியே ஓடிப்போய் கீழே விழுந்து மயக்கம் அடைந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட்டது. மயக்கம் தெளிந்தவுடன் அழுதுகொண்டே ஓடிப்போய் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்'' என்றார்.

ஜோதியின் சித்தப்பா வடிவேல் கூறுகையில், ''என் சகலை ராஜூ கருப்பனார் கோயில் பூசாரியாக இருந்து வருகிறது. சாமியாடி குறி சொல்லுவதில் வல்லவர். ராஜூவிடம் குறி பார்ப்பதற்காகத் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவன்தான் சீனிவாசன். இவர் சேலம் நான்கு ரோட்டில் குடியிருக்கிறார். காதல் தோல்வியால் குறி கேட்பதற்காக ராஜூவிடம் வந்துள்ளார். பிறகு ராஜூவிடம் சீனிவாசனும் நெருங்கிப் பழகினார். ராஜூ தன் சொந்த தம்பியாக நினைத்து சீனிவாசனுக்கு 8 லட்சம் செலவில் சீலநாயக்கன்பட்டியில்  கருப்பசாமி போட்டோ ஸ்டுடியோ வைத்து கொடுத்தார். நாளடைவில் சீனிவாசனின் கேரக்டர் சரியில்லாததால் ஒரு வருடத்துக்கு முன்பு கடையைக் காலி செய்ய சொல்லிவிட்டோம். தற்போது எங்களுக்கு அவன்மீதுதான் சந்தேகம் இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அவுங்க வீட்டிலும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டோம். வீடு சாத்திக் கிடக்கிறது. அவன்தான் கடத்திக்கிட்டுப் போயிருப்பான். இல்லையென்றால் ராஜூவிடம் குறி பார்ப்பதற்காக அதிக பேர் வருகிறார்கள். அந்தப் பொறாமையில் வேறு யாராவது கடத்திச் சென்றிருக்கலாம்'' என்றார்.

அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, ''ராஜூ வீட்டுக்கு சீனிவாசன் என்ற பையன் அடிக்கடி வருவான்.
3 வருடமாக ராஜூ குடும்பத்தாரும் சீனியும் நெருங்கிப் பழகி வந்தார்கள். அப்போது சீனிக்கும் ஜோதிக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது. அது தெரிந்ததும் சீனியை இனி வீட்டுக்கு வரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். இருந்தாலும் சீனியும் ஜோதியும் மறைமுகமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கடந்த 12-ம் தேதி ஜோதிக்கு 18 வயது நிரம்பி பிறந்த நாள் கொண்டாடினார்கள். 18 வயது முடிந்ததும் மேஜர் என்று தூக்கிக்கிட்டுப் போயிருப்பான். மற்றபடி யார் அந்தப் பொண்ணைக் கடத்திட்டு போகப் போகிறார்கள்'' என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close