Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..! ஜவாஹிருல்லா கருத்து

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தால் மதச் சார்பற்ற சக்திகள் மற்றும் அமைப்புளின் மூலம் அதை முஸ்லிம் அமைப்புகள் முறியடிக்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 


முத்தலாக் நடைமுறையை ஆறு மாத காலத்துக்குத் தடை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரே நேரத்தில் “மூன்று முறை மண விலக்கு செய்கிறேன்” என்று கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் விவாகரத்து முறை குறித்து இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, தீர்வுக்குப் பதிலாகக் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முத்தலாக் முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல என்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மற்றும் நீதிபதி அப்துல் நஜீர் ஆகியோர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள பல்வேறு விதிமுறைகளில் முத்தலாக் முறையை அனுமதிக்கும் விதிமுறை மட்டும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று நீதிபதிகள் லலித் மற்றும் ரோஹித் நரிமன் தெரிவித்துள்ளார்கள். முத்தலாக் விவாகரத்து முறை திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று நீதிபதி ஜோசப் குரியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  

முத்தலாக் விவாகரத்து முறை செல்லத்தக்கது அல்ல என்று ஏற்கெனவே ஷமீம் ஆரா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்தச் சூழலில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் புதிதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும். 

நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, முத்தலாக் விவாகரத்து முறை குறித்து நாடாளுமன்றம் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. இது பல்வேறு குழப்பங்களுக்கும் வழிவகுக்கும்.

நீதிமன்றத் தீர்வை மக்கள் நாடிச் செல்லும்போது தீர்வைச் சொல்லாமல் சட்டமியற்றும் அவைக்கு அதைத் திருப்பி அனுப்புவது சரியான நடவடிக்கையாக அமையாது. உச்ச நீதிமன்றத்தின் முன்னால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் வரும்போது உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் அப்பிரச்னையில் தொடர்புடையவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாகப் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்க 1997-ல் விசாகா வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

குறைந்தபட்சம் அதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றாமல் முத்தலாக் முறை குறித்து சட்டமியற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு பணித்துள்ளது தேவையற்ற வழிமுறையாகும். முத்தலாக் முறை பாவகரமானது என்றும், திருமணத்தின்போது முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யக் கூடாது என்றும் திருமண ஒப்பந்தத்தில் மணமகள் நிபந்தனையாக விதிக்கலாம் என்றும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எடுத்துரைத்து அதைப் பிரசாரம் செய்து வரும் நிலையில் இன்று வெளியாகியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்தவொரு நன்மையையும் விளைவிக்கப்போவதில்லை.

ஆனால், இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி சட்ட ஆணையம் மூலம் பொது சிவில் சட்டத்தைத் திணிக்க மோடி அரசு முயலக் கூடும் என்ற அச்சம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட தனியார் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில்கூட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பொது சிவில் சட்டம் குறித்தோ பலதார மணம் குறித்தோ விசாரிக்க மறுத்துவிட்டதையும், ஒட்டுமொத்தமாகத் தலாக் முறையையே தடை செய்ய வேண்டும் என்ற வாதம் உட்பட மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில் பல வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் மோடி அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல் முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒட்டுமொத்தமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று இன்றைய தீர்ப்பு குறிப்பிடவில்லை. மேலும், முத்தலாக் விவாகரத்து முறை தவிர இடைவெளி விட்டு தலாக் என்னும் விவாகரத்து செய்யும் சரியான நடைமுறைக்கும் இந்தத் தீர்ப்பில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி பொது சிவில் சட்டம் கொண்டு வர மோடி அரசு முனைந்தால் அதை மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் துணையுடன் முஸ்லிம்கள் வலிமையாக ஒன்று சேர்ந்து முறியடிப்பார்கள் ' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close