Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீரியல் நடிகர் பிரதீப் தற்கொலையின் பின்னணி என்ன?

பிரதீப்

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த பிரதீப், ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்பது தற்போது வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கு போதாத நேரம் போலும். மாதந்தோறும் ஒரு சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன், சென்னையில் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கெனவே திருமணமானவர் கார்த்திகேயன். முதல் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, நந்தினியை அவர் திருமணம் செய்து கொண்டார். நந்தினிக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தினர், கார்த்திகேயனின் குடும்பத்தினரும், தனியாக போலீஸில் புகார் அளித்தனர்.

இந்த தற்கொலை சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சின்னத்திரை மற்றும் திரைப்படத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சுமங்கலி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரதீப்.

இவர், ஏப்ரல் 3-ம் தேதி அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரையில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவான பிரதீப்பின் திடீர் தற்கொலை, இத்துறையில் உள்ள  அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இவருடன் ஏற்கெனவே சீரியலில் நடித்த பாவனி ரெட்டியை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், பிரதீப் திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு சீரியல்களில் நடித்துப் பிரபலமான பிரதீப், தமிழில் 'பாச மலர்கள்' சீரியலில் நடித்தபோது, தன்னுடன் நடித்த பாவனி ரெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரதீப்பின் இந்த சோக முடிவின் பின்னணியில் நடந்தது என்ன என்பது பற்றி ஹைதராபாத்தில் உள்ள சிலரிடம் விசாரித்தோம். ஆரம்பக்கட்ட விசாரணையில் பிரதீப்புக்கு பணப் பிரச்னை இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. குடும்பத்துக்குள் ஏதேனும் பிரச்னை இருந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாவனி ரெட்டிக்கும், பிரதீப்புக்கும் இடையே அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிய வந்தது.

பாவனி ரெட்டிக்கும், பிரதீப்புக்கும் இடையே இருந்த மோதல் என்ன என்பது பற்றி போலீஸார், அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே பாவனி மீது பிரதீப்புக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். அவருக்கும், பிரதீப்பின் நண்பர் ஷ்ரவன் என்பவருக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளார். இதுதொடர்பாக அவ்வப்போது பிரதீப் - பாவனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிரதீப்இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவரின் திருமணத்தை ஷ்ரவன்தான் முன்னின்று நடத்தி வைத்துள்ளார். அந்த அடிப்படையில் பாவனிக்கும், ஷ்ரவனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. அதனை பிரதீப் தவறாகப் புரிந்து கொண்டாராம்.


பிரதீப் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல்நாள் இரவு, அவர் வீட்டில் ஒரு பார்ட்டி நடந்துள்ளது. அந்தப் பார்ட்டியில் பிரதீப்பின் நண்பர்கள், பாவனியின் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் பார்ட்டியின்போது, பிரதீப் - பாவனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காரசாரமான வார்த்தைகளால் பேசிக் கொண்டதை பார்ட்டிக்கு வந்தவர்கள் பார்த்துள்ளனர். இருவருக்கும் இடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் தொடர்ச்சியாகவே பிரதீப் அடுத்தநாள் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹைதராபாத்தில் பிரதீப்புக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதீப்புக்கு பணப் பிரச்னை இருந்ததாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. என்ன காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், மனதளவில் பாதிக்கப்பட்டதாலேயே இதுபோன்ற விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார் என்பது உறுதியாகிறது.

தொலைக்காட்சி சீரியலில் நடிக்கத் தொடங்கியதும் பணம், புகழ் வரத் தொடங்கி விடுகிறது. தொடர்ந்து ஓய்வின்றி பல சீரியல்களில் நடிப்பவர்களும் உண்டு. பணம் மட்டுமே பிரதானமாகக் கொண்டு நடிப்பவர்கள், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட சீரியல்களை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்காக நடிப்பவர்கள் என்று சின்னத்திரை நடிகர்-நடிகைகளில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களைப் பார்க்கிறோம். என்னதான் தொடர்ந்து நடித்து வந்தாலும், குடும்பத்திற்கென நேரம் ஒதுக்கி, வாரம் ஒருநாள், கணவன்-மனைவி அமர்ந்து பேசி, எந்தப் பிரச்னையானாலும் அவற்றுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். அதைவிடுத்து, பிரச்னைகளுக்கு தற்கொலை தீர்வாகாது. தவிர, வருவாய்க்கு ஏற்ப, தங்களின் வாழ்க்கை முறை, தேவைகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம், பணப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டவர்களில் பலர், அளவுக்கு அதிகமாக கமிட்மெண்ட் வைத்துக் கொண்டவர்களே என்று சின்னத்திரை மூத்த நடிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் போஸ் வெங்கட், "தொலைக்காட்சி சீரியல் வருவாய் என்பது நிரந்தரமானதல்ல என்று தெரிந்தும், பல்வேறு முதலீடுகளைச் செய்து பல நடிகர்-நடிகைகள் அகலக் கால் வைக்கிறார்கள். திடீரென பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனதளவில் உடைந்து போகின்றனர்" என்று கூறியிருந்தார்.

மேலும், "தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும்போது சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சிக்கின்றனர். ஓரிரு படங்களில் சின்னத்திரை நடிகர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால், தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராத நிலையில், மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரும்ப அவர்களின் மனம் மறுக்கிறது. சினிமா வாய்ப்புகள் வரும்போது, பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதே நேரத்தில் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பதை கைவிட்டு விடக்கூடாது" என்பதே மூத்த நடிகர்களின் அறிவுரையாக உள்ளது.

சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், இனியாவது முடிவுக்கு வரட்டும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close