Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோழிங்கநல்லூர் வஞ்சிக்கப்பட்ட தொகுதியா?... கொதிக்கும் வாக்காளர்கள்

ட்டமன்ற தேர்தல் 2016 க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.82 கோடி என்று தெரியவந்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி  உள்ளது.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.2 லட்சம் பேர் என்கிறது பட்டியல். அதேபோல தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1.63 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதிகபட்ச வாக்காளர்கள் 6.2 லட்சம். குறைந்தபட்ச வாக்காளர்கள் 1.63 லட்சம்...கிட்டதட்ட இரண்டு தொகுதிகளுக்கும் வித்தியாசம் 4 மடங்கு. ஏன் இந்த மிகப்பெரும் முரண்பாடு. ஒரு ஜனநாயக நாட்டில்  மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலேயே நலத்திட்டங்கள் செலவிடப்படுகின்றன. தேர்தல் ஆணையத்திற்கு இது தெரியாதா...

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2008 ம் ஆண்டு நடத்திய தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. சில தொகுதிகள் நீக்கப்பட்டும் சில சேர்க்கப்பட்டும் சிலவற்றின் எல்லைகள் மாற்றியும் சில தனித் தொகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டன. அப்போதே இதுபோன்ற அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியையும், குறைந்த வாக்களர்களை கொண்ட தொகுதியையும் முறைபடுத்தி சீரமைக்காதது மிகவும் தவறு.

இன்று சராசரியாக ஒரு தொகுதியில் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரையிலான வாக்காளர்களை பெரும்பாலான தொகுதிகள் பெற்றிருக்கும் போதும், மிகமிக அதிக அளவாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.2 லட்சம் வாக்காளர்கள் என்றால் எப்படி அதனை வரையறை செய்தார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே ஆகும்.

கிட்டத்தட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்காளர்களை கொண்டிருந்தால் ஒரு சட்டமன்ற உறுப்பினரால் அத்தொகுதியின் மக்கள் பிரச்சனைகளை, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? மேலும் அரசு கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் போதுமானதாகவே இருக்குமா? ஒருவருக்கு 3 ரொட்டி, 3 பேருக்கு ஒரு ரொட்டி என்பது சமத்துவமா....

இதனால் ஒரு வேட்பாளருக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது  முதல், சட்டமன்ற உறுப்பினராகிய பின்பும் போராட்டம்தான் மிச்சமாகும். மொத்தத்தில் அந்த தொகுதி புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக தேர்தல் ஆணையத்தாலேயே மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே அடுத்தடுத்த தேர்தல்களிலாவது மக்கள் நலன் கருதி வாக்களர் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு தொகுதியை பிரித்திட தேர்தல் ஆணையம் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி மக்களுக்கு சீரான முறையில் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திட அரசு முன்வந்திடவேண்டும்.

- அ.அப்பர்சுந்தரம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ