Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூய்மை இந்தியா திட்டம் எனும் தீண்டாமை திட்டம்!

'நடைபாதை  நடக்கத்தான் படுத்து தூங்குவதுக்கு இல்ல' என்று பிரகாஷ்ராஜ் கூறியதும் “ஐயா பிளாட்ஃபார்ம் துாங்குவதற்கு இல்லைதான்; ஆனால் அங்க படுக்கறவங்க யார்  தெரியுமா ?”-  சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் திரைப்படத்தின் காட்சியில் இடம்பெற்ற வசனம்தான் இது. 

நடைபாதையில் உறங்குபவர்கள்,  அதை தங்கள் பாக்கியமாக கருதுவதில்லை. சந்தர்ப்பமும்,  காலத்தின் கோலமும்தான் அவர்களை அங்கு கொண்டு சேர்த்தவை. அதற்காக இவர்கள் பிச்சைக்காரர்களும் அல்ல; தங்கள் பசியை பாதியளவுக்கு கூட போக்கிக்கொள்ள முடியாத அப்பாவி ஜீவன்கள். நடைபாதையை தங்களுடைய வீடாகக் கருதி வாழ்கிற அன்றாடங்காய்ச்சிகள். 

நடைபாதை உள்ள எல்லா மாநிலங்களிலும் நடைபாதைவாசிகள் உள்ளனர். நாட்டில் உள்ள எல்லா நடைபாதைவாசிகளைப் பற்றியும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமாக மும்பை நகரைக் எடுத்துக்கொள்ளலாம்.

சுமார் 1.9 கோடி ஜனத்தொகை கொண்ட மும்பை பெருநகரத்தில்,  57,000 நபர்கள் வீடற்று சாலையோரம், பொது இடம், சுரங்கப்பாதை, பூங்கா, வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிறுத்தங்கள், நடைபாதை மற்றும் கடைகளின் வாசல் போன்றவற்றில் தங்களது  வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இவர்கள் திருடர்கள், பிச்சைக்காரர்கள், போதை அடிமைகள், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான்   அவர்களைப்பற்றிய  மற்றவர்களின் கணிப்பு. உண்மையில் இவர்கள் பெரும்பாலானோர் மகாராஷ்ட்ராவின் பிற பகுதியை சேர்ந்தவர்களும், பீகார், உத்தரபிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். பிழைப்பிற்காக மும்பையில் கூலிவேலை செய்யும் எளிய மனிதர்கள். ஒருநாளைக்கு 14 மணிநேரங்கள் கூட உழைக்கும் இவர்களுக்கு அதிகபட்சமாக கிடைக்கும் கூலி 150 ரூபாய்  மட்டும்தான். இதனை வைத்துதான் இவர்கள் தங்களுடைய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

இரவு நேரங்களில் தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்த இரவு விடுதி, கேளிக்கை விடுதி, மதுபானம் அருந்தும் கூடம் என சுற்றித்திரியும் 'பெரிய' வீட்டுப் பிள்ளைகள் குடித்துவிட்டு தூக்கி எறியும் பாட்டில்களை சேகரித்தும், நகர வாசிகள் வீசும் குப்பைகளை (என்னதான் துப்புரவு பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தாலும் அதனை மீண்டும் குப்பையாக்கும் நகரவாசிகள் இரவு நேரங்களில்தான் அதிக குப்பைகளை வீதியில் வீசுவார்கள்.) சேகரித்து, தேவைப்படும் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு,  தேவையில்லா பொருட்களை குப்பைக் கிடங்கில் போடும் நடைபாதைவாசிகள், சுகாதார பணியிலும் தங்களை மறைமுகமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

அன்றாடம் புதிய புதிய பிரச்னைகளை சந்திக்கும், நிரந்தர நிலவுரிமை அற்ற சமூகமாக வாழும் இவர்கள், ஒரு நாளைக்கு ஓர் இடம் என்று மாறிக்கொண்டே இருகின்றனர். பெருகிவரும் நகரமயமாக்கம், மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணிகளால் காலியிடங்களும் பொது இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதனால் இருக்க ஒரு இடமும் இன்றி, இரவு முழுவதும் உறங்குவதற்கு இடம் தேடி முழு  இரவையையும் கழிக்கின்றனர்.

திறந்தவெளியில் உறங்கும் நடைபாதைவாசிகளுக்கு மழை, பனி போன்ற பருவங்களில் மிக சிரமமாகவே இருக்கும். தாங்க முடியாத குளிரினால் மரணித்த நடைபாதைவாசிகள் ஏராளம்.

சாலையோரத்தில் வாழும் இவர்களுக்கு எந்தவொரு உயிர் பாதுகாப்பும் , உடைமைகள் பாதுகாப்பும், அந்தரங்க பாதுகாப்பும் கிடையாது. அடிக்கடி தங்கள் வசிக்கும் கடை வாசல்,பொது இடங்கள், பூங்கா,  நடைபாதை, சுரங்கப் பாதை போன்ற இடங்களில் படுக்கக் கூடாது என்று வலுக்கட்டாயமாக மிரட்டி, சில மனிதர்கள் இவர்களை அப்புறப்படுத்துகின்றனர்.

சமீபகாலங்களில் இவர்கள் அதிகமாக வெளியேற்றப்பட்டது எப்படி தெரியுமா? பாரத பிரதமர் மோடியின் 'Clean India Mission' என்ற திட்டத்தினால்தான்.

இதனால் நடைபாதைவாசிகள்,  முக்கிய ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, துணிகள், பாத்திரங்களை பறிகொடுத்து எல்லா உரிமைகளையும் இழந்தவர்கள் வட்டத்திற்குள் மீண்டும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இழந்ததை மீண்டும் பெற, அரசு அலுவலங்களின் படிகளில் ஏறினால், இவர்களின் தோற்றத்தை பார்த்து தீண்டத்தகாதவர்களாக துரத்தியடிக்கின்றனர் அரசு அலுவலர்கள். சில இடங்களில் இவர்களை பொது இடங்களில் தங்க அனுமதித்து, அதற்கு லஞ்சமாக மாதம் 1500 ரூபாய் கேட்கின்றனர்.

இப்படி தொடர் நெருக்கடியை சந்திக்கும் நடைபாதைவாசிகள்,  ஒரு கட்டத்தில் சோர்ந்து, தங்களுடைய ஆவணங்களை மீட்கும் முயற்சியை கைவிட்டு விடுகின்றனர். இதனால் இன்று அவர்களை சட்ட விரோதமாக குடியமர்ந்தவர்களாக அரசு கருதுகின்றது. சிலர், பிச்சை எடுத்தல் தடுப்பு சட்டத்தின் ( Bombay Prevention of Begging Act ) கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

இவர்களுடைய பிள்ளைகள் கலவர காலத்திலும், பதற்றமான சூழ்நிலையிலும் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுடைய வாழ்க்கையை சிதைத்து, அவர்கள் தீய வழியில் செல்வதற்கான உந்து சக்தியாகவும் இருக்கின்றனர் காவல்துறையினர்.

சாலையோரத்தையும் சுரங்கப்பாதையையும் வீடாகக் கருதி வாழ்பவர்களுக்கு இரண்டாவது பிரச்னையாக இருப்பது குடிநீர் மற்றும் கழிப்பறை. சுத்தமான குடிநீரை 40 ரூபாய் வரை கொடுத்து குடிக்கும் அளவுக்கு இவர்களது நிலை இல்லை. திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நடைபாதைவாசிகள், கட்டண கழிப்பறைகளை பயன்படுத்தவும் பொருளாதார வசதி கிடையாது.

மும்பை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின்படி,  நடைபாதைவாசிகளுக்கு குடிநீர் கிடைக்க வழிவகுக்க வேண்டும். அதேபோல் அனைவருக்கும் குடிநீர் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது. இந்த சட்டப்படியான சலுகை கூட தெரியாத அப்பாவிகளான பிளாட்ஃபாரவாசிகளிடம்,  சில சமயங்களில் குடிநீரின் விலையை வியாபாரிகள் உயர்த்தி விற்று,  அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இன்னொரு மிக முக்கியமான பிரச்னை நடைபாதைவாசிகளில் குடும்பத்தோடு அல்லது தனியாக இருக்கும் திருமணம் ஆன பெண்களும் மற்றும் இளம் பெண்களும் பல நேரங்களில் சமூகவிரோதிகளின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது. பெரிய மனிதர்கள் சிலர், தனியாக இருக்கும் பெண்களை கடத்தி கற்பை சூறையாடுவது  தொடர்ந்து மும்பையில் அரங்கேறி வருகிறது. எப்பொழுது பிரச்னை வரும் என்று பயந்து பயந்து பல இரவுகளை கழிக்கிறார்கள் பெண்கள்.

குழந்தை கடத்தல் கும்பலிடம் தங்கள் குழந்தைகள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, எப்பொழுதுமே தங்களுடைய குழந்தையை உடம்பில் துணியை கொண்டு  கட்டிக்கொண்டு செல்கிறார்கள் பெண்கள்.
இரவு நேரங்களில் குடித்துவிட்டு வேகமாக வாகனம் ஓட்டும் பெரிய இடத்து பிள்ளைகள், சாலையோரம் உறங்கிக்கொண்டு இருக்கும் நடைபாதைவாசிகள் மீது ஏற்றி அவர்களுடைய உயிர்களை பறிப்பதும் நடக்கிறது. இதற்கு அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதியப்படுவதில்லை. அப்படியே வழக்கு தொடர்ந்தாலும், தங்களது செல்வாக்கால் வழக்கிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சில நேரங்களில் அவர்களின் உறக்கத்தை கெடுக்கும் வகையில், வாகனத்தின் ஒலியை அவர்கள் அருகே சென்று அதிக சப்தத்தோடு எழுப்புவார்கள். தான் குடித்த மதுபான பாட்டிலை அவர்கள் மீது வீசி, அவர்களை காயப்படுத்தவும் செய்கின்றனர். அத்தனை இளக்காரம் அவர்கள் மீது.

தேசிய நகர்ப்புற வாழ்க்கைத் தர மேம்பாட்டு திட்டத்தின்படி,  நகர்ப்புறங்களில் உள்ள வீடு இல்லாதவர் களுக்கு அந்தந்த மாநில அரசுகள் வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற ஆணை உள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 160  கோடி ரூபாயை மகாராஷ்ட்ரா அரசு பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. குறிப்பாக மும்பை மாநகரம்,  70 கோடி ரூபாயை இன்னமும் பயன்படுத்தாமல் வைத்துள்ளது.

மாடுகள் வதைபடுவதை தாங்கிக் கொள்ளமுடியாமல் அதற்காக போராடி, 2015 ம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்திய மகாராஷ்ட்ரா அரசு, கண்ணெதிரே மனிதர்கள் வதைபடுவதை கண்டும் காணாமலும் இருப்பது மனிதநேய முரண்.

எந்த மாநில அரசுகளுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விலங்குகளிடம் கருணை காட்டும் உங்களை பாராட்டுகிறோம். ஆனால் உங்கள் கருணையை உங்கள் அருகில் வசிக்கும் சக மனிதர்களிடமிருந்து துவக்குங்கள்.

- ஆரூர்.யூசுப்தீன்                     
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

MUST READ

[X] Close