Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் புகார்: சமூக வலைதளங்களை விட்டு வெளியேறினார் ‘ஸ்கூப்வூப்’ இணை நிறுவனர்!

ஸ்கூப்வூப்

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வக்கிரம் பிடித்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேதான் போகிறது. அதற்கு உதாரணம், பிரபல ஆங்கில வலைத்தளமான ‘ஸ்கூப்வூப்’ (ScoopWhoop) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சுபர்ண் பாண்டே. 

இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், அவருக்கு எதிராகக் காவல் துறையில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் வெளியாக, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார். மேலும், இந்த வழக்கில் அவர் கோரியிருந்த இருந்த முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அந்தப் பெண், சுபர்ண் பாண்டே தனக்கு ஆபாசமான வீடியோக்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியும், பாலியல் ரீதியில் பெயர்கள் வைத்து அழைத்ததாகவும் புது டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் (Vasant Kunj) காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தை, நிறுவன மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, உடல் ரீதியாகத் தன்னை காயப்படுத்தியிருக்கிறார் என்றும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து முதல் தகவலறிக்கை பதிவுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. 

இதுகுறித்து அந்தப் பெண் குறிப்பிடுகையில், ”எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை, நிறுவனத்தின் மற்ற உரிமையாளர்களான ஸ்ரீபர்ணா டிகேகர் மற்றும் சத்விக் மிஸ்ராவிடம் கூறியபோது, இதுபோல மீண்டும் நடக்காது என்று உறுதியளித்தனர். ஆனால், பாண்டேவுடன் நான் தனியாக பணி செய்யும் சூழலையும் உருவாக்கினார்கள். நான் காவல் துறையினரிடம் புகார் அளித்திருப்பது தெரிந்தும், என்னுடைய கேரியரை ஒன்று இல்லாமல் செய்துவிடுவதாக மிரட்டினர்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், குற்றத்துக்குத் துணைபோனதற்காக, ஸ்ரீபர்ணா டிகேகர் மற்றும் சத்விக் மிஸ்ரா மீதும் புகார் பதியப்பட்டுள்ளது. 

இதுகுறித்த 'ஸ்கூப்வூப்’ நிறுவனம், அளித்துள்ள விளக்கத்தில், ”பணியிடத்தில் நடக்கும் எந்தவிதமான பாலியல் துன்புறுத்தலையும் ‘ஸ்கூப் வூப் நிறுவனம்‘ வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் 40 சதவீதம் பெண்கள்தான் பணிபுரிகிறார்கள். பாலியல் புகார்களை விசாரிப்பதற்காகவே, தேர்ந்த உறுப்பினர்களைக்கொண்ட குழு எங்கள் நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் அவர் காவல் துறையில் புகார் அளித்துவிட்டார். எங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. 

இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டில், மற்றொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘தி வைரல் ஃபிவர்’ என்ற இணையத்தள தொலைக்காட்சி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் சிக்கியது. அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி அருணாப் குமார் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு, அருணாப் பதில் கூறுகையில், ‘நான் ஓரினச்சேர்க்கையாளர். ஒரு பெண் செக்ஸியாக இருந்தால், ‘நீங்கள் செக்ஸியாக இருக்கிறீர்கள்’ என்று கூறுவேன். நான் அந்தப் பெண்ணை பாராட்டுகிறேன். இதில் என்ன தவறு?” என்று கூறி, பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இத்தகைய புகார்கள் எழுவது, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

- எம்,.ஆர்.ஷோபனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close