Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சம்பிரதாயங்கள் சங்கடப்படுத்துவதற்கு அல்ல!

 

 

பெண்களின் மாதவிடாய் என்றாலே அது ’தீட்டு’ என்றுதான் வழக்கத்தில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ‘தீட்டு’ என்றும் தீண்டத்தகாத விஷயம் என்றும் எதுவும் இல்லை. 

அந்தக் காலங்களில் வசதியற்ற நிலையில் நாம் சிக்கிக்கொண்டிருந்த சமயங்களில், 'வீட்டு விலக்கு' என்று சொல்லி பெரியவர்கள், பெண்களை ஓய்வெடுக்க வைத்தனர். அதுவே நாளடைவில் வீட்டுக்குத் தூரமாக இருக்கவேண்டும் என மாறிவிட்டது.
 
உடலில் ஏற்படும் பருவ மாற்றத்தை 'தீட்டு' என்று சொல்வது தவறான சொல். பழங்காலங்களில் கோயில்கள் சற்று தூரமாகவும், பாறைகளாலும் உயரமான மேட்டுப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளரீதியாகவும், உள்ளரீதியாகவும் சோர்வடைந்து போயிருப்பர். அப்படிப்பட்ட காலங்களில் நெடுந்தூரம் நடந்தோ, பயணம் செய்தோ கோயில்களுக்குச் செல்ல இயலாததால், கோயிலுக்குப் போகவேண்டாம் என்றும், வீட்டில் ஓர் ஓரமாக இருந்து ஓய்வெடுக்கவும் பணிக்கப்பட்டனர்.
 
மேலும் போதுமான தண்ணீர் வசதியும்,  தற்போதைய நவீன (உள்ளாடைகள்) வசதிகளும் அந்தக் காலங்களில் இல்லை. ஆகவேதான் விசேஷங்களிலும், கூட்ட நெரிசல்களிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. தற்போது, நவீன வசதிகள் இருக்கும்போது ஏன் இன்னும் அதேபோன்ற காரணங்களில் சிக்குண்டு கிடக்க வேண்டும்? இறைவனுக்கு முன்னால் யாரும் விலக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. 
 
அதேபோலத்தான் கர்ப்பமாக இருக்கும் மகளோ, மருமகளோ அல்லது நெருங்கிய உறவுப் பெண்களோ ஈமக்காரியங்களில் சாங்கியம் செய்யக்கூடாது என்பதுவும் தவறான விஷயமே. கர்ப்பமான பெண்ணின் உடல்நிலை, கூட்ட நெரிசலில் நெடுநேரம் நின்றுகொண்டிருக்க முடியாததால் அவர்கள்,  சாங்கியங்கள் செய்யவேண்டாமென்று தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.
 
 
 
அந்தப் பெண்ணின் உடல் நிலையை பொறுத்து, அவளால் முடியும் என்ற பட்சத்தில் அவள் எல்லா சாங்கியங்களையும் தாராளமாகச் செய்யலாம். தன் நெருங்கிய உறவுக்கு அவள் செலுத்தும் இறுதி மரியாதை அதுவே. அதையும் தடைச் செய்யலாமா?
 
இப்படி பல்வேறு விஷயங்கள் பழக்கத்தில் இருந்து வழக்கத்துக்கு வந்து, அவற்றுக்கு விளக்கம் அளிக்கப்படாமல் கிடக்கின்றன. ஆகவே தடை, ஆகாது, கூடாது என்று சொல்லும் ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த விளக்கங்களை கொடுத்தால் நாமும் நாலு விசயம் தெரிந்துகொள்ளலாம், பிறருக்குத் தெரியப்படுத்தலாம். 
 
விளக்கம் கொடுக்காத கேள்விகள்தான் வீண் சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் இட்டுச் செல்கிறது! 
 
- சுசித்ரா சீத்தாராமன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ