Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஞ்சறைப் பெட்டிக்குள் ஒளிந்திருக்கும் அரசியலையும் அறிந்து கொள் தோழியே...!

 

கோடை வெப்பத்தையும் மீறி தேர்தல் களத்தில் தகித்துக்கொண்டிருக்கிற தமிழகம்.
 
தேர்தல் நேரங்களில் பெருவாரியான ஆண்கள்தான் கட்சிகளை கடும் விமர்சனம் செய்கிறார்கள். பெண்களுக்கு அதை எதிர்கொள்கிற துணிச்சல் இல்லாமல் போய்விட்டது. அல்லது, 'அரசியலைப் பற்றி தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது. யாரும் சரியில்லைங்க. சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை' என சலித்துக் கொள்கிறார்கள்.

 

யார் ஆட்சி செய்தால் என்ன? கணவரை அலுவலகம் அனுப்பி வைப்பதும், குழந்தையை ஸ்கூல் வேனில் ஏற்றுவதும், மீதமுள்ள நேரங்களில் தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பதும்தான் பெண்களின் பிரதானக் கடமைகளாக இருக்கின்றன. வேலைக்குப் போகும் பெண்கள்கூட,'சே... எலெக்‌ஷன் டியூட்டி போட்டுவிட்டார்களே' என்று புலம்புகிறார்கள். 

 உலக அரசியலை உற்றுப் பார்க்க வேண்டிய அவசியம் வேண்டுமானால் பெண்களுக்கு இல்லாமல் போகலாம். யாரோ சொல்லிக் கொடுத்த ஆங்கில வரிகளையோ, சமூக அரசியல் புத்தகங்களுக்குள் முகத்தை உயர்த்தி, செல்ஃபிகளை அரசியல் அறிவாக அப் லோடு செய்யவோ தேவையில்லை. ஆனால், அடுக்களையே வாழ்க்கை என முடங்கிக் கிடக்கும் குடும்பப் பெண்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளின் முரண்பாடுகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலே போதுமானது. 

 

பருப்பு, உளுந்து, உப்பு என அத்தனை மளிகைப் பொருட்களின் விலையிலும் ஏற்றம், நகராட்சி குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை, முன் அறிவிப்பு இல்லாத மின்தடை, தனியார் பள்ளிக் கூடத்தின் கல்விக்கட்டண உயர்வு.  

'அண்ணே... 50 மில்லி நல்லெண்ணெய் கொடுங்க' என டானிக் பாட்டிலை நீட்டிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் எள்ளுப் புண்ணாக்கை பிட்டு வாயில் போடுவோமே... அந்தக் காலம் இனி வருமா? ஒரு புண்ணாக்கும் இல்லை என்பது உண்மைதான். 

மாலை நேரங்களில் காடா விளக்கின் ஒளியில் கொல்லையில் காய்த்த வெண்டைக்காயையும், சுண்டைக்காயையும் சீனிச்சாக்கில் கூறுகட்டி உட்காந்திருக்கும் பாட்டியை, அன்ஹைஜீனிக் என அருவருப்பாகத்தானே கடந்து போகிறோம்.

பளபளவென வேக்ஸ் பூசி, ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிளையும், திராட்சையையும் பெரிய பெரிய மால்களில் இருந்து வாங்கி,  விருந்தினர் வீடுகளுக்குப் பெருமையாக எடுத்துச் செல்கிறோமே… விவசாய நாட்டில் அந்த மால்களுக்கான தேவை என்ன இருக்கிறது? பழங்களில் விதை இருக்கிறதா? தக்காளியும் கத்திரிக்காயும் அழுகுவதில்லை. வதங்கிய ரப்பர் போல் மிதக்கிறது. என்னவாக இருக்கும் என யோசிக்க வேண்டாமா? 

திடீர் திடீரென ஒருபக்கம் உணவுப்பொருட்களின் பதுக்கல், மறுபக்கம் கச்சா எண்ணையின் விலை உயர்வு. குழந்தையை தத்துக் கொடுப்பது அந்தக் காலம். இன்றைக்கு பெற்ற தாயை தத்துக் கொடுப்பதுபோல் மண்ணை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டோம். நம் மண்ணிற்கான விதையை நாம் தீர்மானிக்க முடியாது. இதைவிட துரோகம் வேறென்ன வேண்டும்.

 மழைக்காலங்களில் பொழியும் நீரை சேமிக்கும் கொள்கலன்களான ஏரியும், குளங்களும், குட்டைகளும் இருந்ததே எங்கே போயிற்று? மண், மலை என எல்லாவற்றையும் அரித்து அரித்து எங்கு கொண்டுபோய் சேர்க்கிறார்கள்? ஒட்டு மொத்தமாக தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது. அப்பா, கணவன், மகன் எனத் தலைமுறையே டாஸ்மாக்கால் தள்ளாடுகிறது. வால்மார்ட் தரித்திரம் நம்மை விழுங்கும் அளவிற்கு விவசாயிகளின், சிறுவணிகர்களின் இயலாமைக்கு என்ன காரணம்? 

நான்ஸ்டிக் பாத்திரங்களும், பதப்படுத்தப்பட்டு பேக்கிங்கில் தொங்கும் பரோட்டாவும் நமக்கான உணவா? நுகர்வுப் பொருட்களின் பயன்பாட்டில் 90 சதவீதம் பெண்களை மையப்படுத்தியே சந்தைக்கு வருகின்றன. விற்பனைக்கான கவர்ச்சி இலவசங்களுக்கு அடிமையாகிவிட்டோம். அரசியல் தெளிவை பெண்கள் பெற்றுவிடக் கூடாது என சூழ்ச்சி செய்யும் கார்ப்பரேட் உள் அரசியலில் இருந்து முதலில் விடுபட வேண்டும். தாலி அறுப்பில் இருந்தும், பாலியல் வன்கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றிக் கொள்ள,  கட்சி வாக்குறுதிகளின் எந்த வரிசை எண்ணை தேர்ந்தெடுப்பது?

காதலும் வீரமும் இரு கண்கள் என போற்றப்பட்ட நம் வரலாறு, பெண்கள் காதலிப்பதை பெருங் குற்றமாக்கி நடுரோட்டில் வெட்டி வீசியெறிவது ஏன்? இத்தனை கேள்விகளுக்கும் பதில் ஒன்றாக இருக்கலாம் அல்லது பலதரப்பட்டவையாக இருக்கலாம். ஆயினும் அத்தனையும் நமக்கான அரசியலுக்கு உட்பட்டது.

சரித்திரப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சுதந்திரப்போராட்ட பெண் போராளிகளின் பெயர்களை மனப்பாடம் செய்து, பரீட்சை எழுதுவதல்ல பெண்களுக்கான அரசியல். அவர்களிடம் இருந்த, பாரதி நமக்கு பழக்கிய, சுய ரௌத்திரம் வேண்டும். குறைந்தபட்சம் அடிப்படை அரசியலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும். 

இன்றைய நிலையில் யார் எந்தக் கட்சி, எந்த சின்னம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற கூட்டணிக் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. தங்களின் நீண்ட நாள் கொள்கைப் பிடிப்பில் இருந்து சற்றும் யோசிக்காமல், தேர்தலின் முதல்நாள் வரை மாற்றுக் கட்சிகளை உருவாக்கி தலைவர்கள் போராடி வருகிறார்கள். அத்தனையும் மக்களின் நன்மைக்காகவா...? குறிப்பாக பெண்களின் நலனிற்காகவா என யோசித்தால் அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது.

வாக்களிக்க வேண்டியது ஜனநாயகக் கடமை. குடும்பப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் இதை ஒருபோதும் தவறவிடக் கூடாது? கருத்து உரிமை வேண்டுமானால் நமக்கு கைவர தாமதப்படலாம். ஆனால், வாக்குரிமை நமக்கானது. அடுக்களையில் புதைந்து கிடக்கும் பெண்கள் நீர் அரசியலை, நில அரசியலை  புரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கைகள்தான் அதிகம். 

அரசியல் களத்தில் இறங்கும் பெண்கள், ஆண்கள் இயக்கும் தோல்பாவையாக இல்லாமல் தனித்த அரசியல் அறிவுடன் துணிச்சலோடு செயல்படவேண்டும். இதுநாள்வரை, யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் எனக் கேட்டு, கண்மூடித்தனமாக பொத்தான்களை அழுத்தியது போதும். நம் கண்ணியம் காக்கப்படவேண்டும். இலவச போதையிலிருந்து ஒரு இனம் தலைநிமிர வேண்டும். 

 அரசியல் தேர்வில் பெண்களின் பங்கீடு மிக அவசியம். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. உங்களுக்கான முடிவில் தீர்மானமாக இருங்கள். மனதில் புகைந்து கொண்டிருக்கும் கோபம், நல்ல அரசியலை புடம்போடட்டும். அடுக்களையில் விழித்திருக்கும் அஞ்சறைப் பெட்டிகளுக்குத் தெரியும் உண்மை அரசியல். நம்மை நாம்தான் இனி மீட்டெடுக்க வேண்டும்.

 
- அகிலா கிருஷ்ணமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்