Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்க 9 வழிகள்!

 
ந்த வருடத்தின் அதீத வெயில் தாக்கத்தால், வீட்டின் மொட்டை மாடியில் ஆம்லேட் போடும் அளவிற்கு அனல் பறக்கிறது. இதனால் உடலில் சூடு அதிகரித்து நீர்வறட்சி உண்டாகிறது.  உடல் சூட்டை தணிக்காவிட்டால் மயக்கம், நீர் வறட்சியின் காரணமாக  உடல் உறுப்புகளின் செயற்திறன் குறைபாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்...!
 
இந்த பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் இங்கே...

உடற்பயிற்சி:

அதிகப்படியான  உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இதனால் உடலில் நீர்வறட்சி உண்டாகலாம். முடிந்த வரை விளையாட்டின் மூலம் பயிற்சி செய்யுங்கள். இதனால், உடலில் வியர்வை நன்கு சுரந்து,  உடலை சுறுசுறுப்பாக்க உதவும். அதே நேரம், 'கோடை காலத்தில் உடற்பயிற்சி எதற்கு?' என ஒத்திப் போட வேண்டாம்.

நீராகாரம்:

கடினமான உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கலாம். இதற்கு பதிலாக நீராகாரம் நிறைய உட்கொள்ளுங்கள். பழைய சோறு, இளநீர், பதநீர், நுங்கு,வெள்ளரிப்பழம், நன்னாரி போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள். கோடைகாலத்தில் கூடுதலாகவே நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
 


குளிர்பானங்கள்:
 
வெப்பம் அதிகமாக இருக்கிறது, தாகமாக இருக்கிறது என, பாட்டிலில் அடைத்த குளிர் பானங்களை பருக வேண்டாம். உண்மையில் குளிர்பானம் குடிப்பதால் உடல் வெப்பம் அதிகரிக்கதான் செய்யுமே தவிர குறையாது. எனவே இயற்கை பானங்கள், பழங்களை தேர்வு செய்து உண்ணுங்கள். பழங்களை பெரும்பாலும் ஜூஸாக சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு,  கடித்து மென்று சாப்பிடுவது நல்லது. 
 

பானை நீர்:

'சில்'லென தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, மண் பானையில் நீர் சேமித்து குடித்து வாருங்கள். இது உடல் சூட்டை தணிப்பதோடு, உடலுக்கும் நன்மை பயக்கும். 

காட்டன் உடைகள்:

சுட்டெரிக்கும் வெயிலில் ஃபேஷன் என்ற பெயரில் ஜீன்ஸ், பாலியஸ்டர் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம். அதேபோல, இறுக்கமான உடைகளை அணிவதையும் தவிருங்கள். இறுக்கமான ஆடைகளை அணியும்போது உடலில் 'ரேஷஸ்' போன்ற பிரச்னைகள் அதிகமாக வரக்கூடும். முக்கியமாக காட்டன் உடைகளை தேர்வு செய்யுங்கள். தளர்வான ஆடைகளையே அணியுங்கள்.

மெத்தை:

தூங்குவதற்கு மெத்தை பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு தவிருங்கள். வெறும் தரையோ அல்லது லேசான போர்வையோ விரித்து அதில் படுத்து உறங்குங்கள். இதனால், இரவில் உடல் வெப்பம்  அதிகமாகாமல் நடுநிலையாக வைத்திருக்க இது உதவும். நல்ல உறக்கம் பெறவும் முடியும்.
 

கயிற்றுக்கட்டில்:
 
சிலர், கட்டிலில் படுத்தால்தான் தூக்கமே வரும் என்கிற பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பார்கள். அவர்கள், பஞ்சு மெத்தை கட்டிலை தவிர்த்து, கயிற்றுக் கட்டிலை பயன்படுத்தலாம். இது, உடலுக்கும் இலகுவாக இருக்கும், உடல் சூட்டையும் அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

காலை, மாலை:

காலை மட்டுமின்றி, மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் இன்னொரு முறை குளியுங்கள். இதனால், வேர்வை காரணமாக உண்டாகும் நச்சு தொற்று, உடல் சூட்டை போக்க முடியும்.
மேலும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
 

சன் ஸ்கிரீன் லோஷன்:
 
அடிக்கிற வெயிலுக்கு, ஆளே ஆதார் கார்டுக்கு  ஃபோட்டோ  எடுக்க போஸ் கொடுக்கிற மாதிரி மாறிப் போயிருப்போம். இதை தடுப்பதற்கு, வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் லோஷனை முகம் மற்றும் கைகளில் அப்ளை செய்து கொள்வது நல்லது. 

- வே. கிருஷ்ணவேணி, குமார்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ