Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்கள் சம உரிமை நாளில் ஆண்களுக்கு பத்து கேள்விகள்!


1920-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் நாள், அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாள். அதை நினைவுகூரும் விதமாகவும், ஆண்களுக்கும் பெண்களும் இணையானவர்கள் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26ம் தேதி, 'பெண்கள் சம உரிமை' நாளாகக் கொண்டாடப்படுகிறது.
 
95 வருடங்களாக 'பெண்கள் சம உரிமை நாள்' கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த 10 கேள்விகளை இன்று ஆண்களின் முன்வைப்போம்!

1. ஒரே வீட்டில் வளரும் ஆண், பெண் பிள்ளைகளில், உணவில் இருந்து உணர்ச்சிகள்வரை இருவரும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெற்று வளர்கிறார்களா?

2. பெண்களின் பள்ளிக் கல்விக்கான தடைகள் இன்று பெரும்பகுதி விலகியுள்ளன. மேற்கல்விக்கான உரிமை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வழங்கப்படுகிறதா?

3. 'வேலைக்குப் போகணும்' என்று ஒரு பெண் சொல்லும்போது, ஆண் மகன்களைப் வழியனுப்பிவைக்கும் அதே உவகையுடன் பெண் பிள்ளைகளையும் வழியனுப்பிவைக்கும் குடும்பங்கள் எத்தனை?

4. அலுவலகங்களில் ஆண்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அதே அங்கீகாரம் பெண்களின் உழைப்புக்கும் தரப்படுகிறதா?

5. ஓர் ஆண் தான் எந்த வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை தானே தீர்மானிப்பவனாக இருப்பதுபோல, பெண்களால் முடிவெடுக்க முடிகிறதா?

 

6. கரு உருவான நாளில் இருந்து குழந்தை பிறக்கும்வரை, எந்த வெளிக் காரணிகளின் பங்கும் இன்றி நூறு சதவீதாம் தன் உயிரால் மட்டுமே இன்னொரு உயிரை வளர்க்கும் பெண்ணுக்கு, அந்தக் குழந்தையை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவெடுக்கவோ ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்குமான இடைவெளியைத் தீர்மானிக்கவோ உரிமை தரப்படுகிறதா?

7. பத்து மாதங்கள் அளவற்ற அவஸ்தைகளுக்கு உட்பட்டு, தியாகங்களுக்குத் தன் உடல் தந்து பெண் கருவில் வளர்த்தெடுத்த தன் குழந்தைக்கு, பெயர் வைக்கும் உரிமையாவது அவளுக்கு இருக்கிறதா?

8. அப்பா, கணவன், மகன், மருமகன் என்று எல்லா வயதுப் பெண்களும் ஏதாவது ஓர் ஆணின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்கிற சமுதாயத்தில், அரிதினும் அரிதாக அந்த விலங்குகளில் இருந்து தங்களை விடுவித்து வாழும் பெண்களை இந்த உலகம் மனதார ஏற்கிறதா?

9. பெண்களுக்கான சம உரிமை என்பது, குடும்பம், கல்வி, அரசியல், கலை, நிர்வாகம், விளையாட்டு என்று ஏதாவது ஒரு தளத்திலாவது குறைந்தபட்சம் 50% கிடைக்கப்பெற்றிருக்கிறதா?
 
10. 'பெண்கள் சம உரிமை நாள்' என்பதை இன்னும் எத்தனை ஆண்டுகள் பெயரளவில் கொண்டாடப்போகிறோம்?!

- வெ. வித்யா காயத்ரி(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ