Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆபத்தான சுழலை பெண்கள் எதிர்கொள்வது எப்படி?

 

நிர்பயா முதல் சுவாதிவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. முன்னிரவில் மட்டுமல்ல, பகலில் ஆளற்ற சாலைகளில் செல்ல நேரிடும் பொழுதுகளில்கூட, 'இந்தப் பட்டியலில் நான் சேர்ந்துவிடுவேனோ' எனப் பதற்றம் கொள்கிறார்கள் பெண்கள்.

பெண்கள் எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் திருநாவுக்கரசு.

''ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அவர் மூளை எவ்வாறு செயல்படும் என்பது, வேலையில் அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையைப் பொருத்தோ அல்லது அவர் பெற்றுள்ள பட்டங்களின் அடிப்படையிலோ இல்லை. தாக்குதலின் வகை, தாக்குபவர் யார், தாக்குதல் நடக்கும்போது அந்தப் பெண்ணின் மனநிலை போன்ற விஷயங்களைப் பொருத்துதான் அவர் அந்த நேரத்தில் புரியும் எதிர்வினை அமையும்.

தாக்குதல், எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத என இரண்டு வகைப்படும். எதிர்பார்த்த தாக்குதல் நடக்கும்போது, மூளை நிதானமாக யோசித்து சிறப்பாகச் செயல்படும். இவை பொதுவாக வீட்டுக்குள், உறவுகளுக்கு அல்லது பழக்கமானவர்களுக்கு இடையில் நிகழக்கூடியவை.

ஆனால், வீட்டுக்கு வெளியே திருட்டு, பாலியல் தொல்லை என எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தப் பெண்ணின் மூளையில் ஒரு தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கான யோசனையோ திட்டமிடலோ இருக்காது. ஆனால், பெண்கள் தங்கள் மூளையை தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ட்யூன்செய்ய வேண்டிய காலகட்டம் இது.

பெண்கள் எங்கு சென்றாலும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. எந்த நேரத்திலும் தன்னை ஆபத்து நெருங்கலாம் என்ற தற்காப்புநிலையோடு அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நிலைகுலையாமல், அந்த நிமிடம் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று யோசித்து அவர்கள் மூளை சட்டென ரியாக்ட் செய்ய வேண்டும்.

தாக்குதலுக்கு உள்ளாகும்போது பெண்கள் திரும்பத் தாக்க நினைக்கக் கூடாது. தற்காப்புக் கலை தெரிந்து இருந்தாலும், முதலில் அவர்கள் செய்யவேண்டியது, அந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல முயல்வதுதான். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இதே அறிவுரைதான். அந்த நிமிடத்தில் பலத்தைக் காண்பிக்க நினைக்காமல், மூளையைப் பயன்படுத்தவேண்டும்.

 

ஒருவேளை தப்பிக்க முடியாதபடி சிக்கிக்கொண்டால், இப்போது பலத்தை முழு நம்பிக்கையுடன் பிரயோகித்து எதிர் தாக்குதல் புரிய வேண்டும். எந்த நிலையிலும் 'நம்மால் முடியாது'  என்று தாக்குதலை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

ரியாக்ட் செய்யாமல் இருப்பதும், தவறாக ரியாக்ட் செய்வதும் ஒன்றுதான். மூளையை இந்த வழிகளில் எல்லாம் யோசிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை கவனிக்கத் தவறுகிறார்கள். அல்லது, அந்த நபரால் தனக்கு பெரிய ஆபத்து எதுவும் நேர்ந்துவிடாது என்று நினைக்கிறார்கள்.  உதாரணமாக, தன்னைப் பல நாட்களாக தொடர்ந்து வரும் ஒரு வாலிபர், சமூக வலைதளங்களில் இரட்டை அர்த்தத்தில் பேசுபவர் இவர்களை எல்லாம் 'என்ன செஞ்சிடுவாங்க?' என்று அலட்சியமாகக் கடக்கக் கூடாது. அவர்களைத் தவிர்க்க வேண்டும், முழுவதுமாக அந்தத் தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். அல்லது, மனசுக்கு நெருடலாக இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆலோசனை பெற வேண்டும்" என்றார் திருநாவுக்கரசு.

''ஒருவேளை, இந்த முன்னெச்சரிக்கைகளை எல்லாம் மீறி ஒரு தாக்குதல் நடந்துவிட்டது என்றால், குடும்ப கௌரவம், சமூகம் போன்ற காரணங்கள் சொல்லி அதை மறைக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கும் நடக்கும் அநீதியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களை வார்த்தையால் ஒருவர் தாக்கினால்கூட, அதற்கு எதிர்வினை புரியுங்கள். சட்டம் உங்கள் பக்கம் உள்ளது" என்று நம்பிக்கை கொடுக்கும் சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் பிருந்தா கார்த்திகேயன், பெண்களுக்கு பக்கபலமாக இருக்கும் சட்டங்கள் பற்றிச் சொன்னார்.

* ''ஒரு பெண் குழந்தை பிறக்கும் நிமிடம் முதல் இறுதிவரை அனைத்துச் சட்டங்களும் அவளுக்கு ஆதரவாகவே உள்ளன.

* பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2005-ன் படி, ஏழு வருடங்கள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை குற்றவாளிக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.

* இந்திய தண்டனைச் சட்டத்தில் 'பிரைவேட் டிஃபன்ஸ் ஆர்டிகிள் 96 - 106'ன் படி தன்னைத் தாக்க வரும் ஒரு நபரை பெண்கள் தற்காப்புக்காகத் தாக்கி அந்த நபருக்கு சேதம் ஏற்பட்டால்கூட, அது குற்றமாகக் கருதப்படாது. அதற்கான விவரத்தை பெண்கள் காவல்துறையிடம் அளித்தால்  போதுமானது.

* இந்திய அரசியல் சாசனத்தின் 'ஆர்டிகிலள் 21'ன் படி, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் வெளியே வராமல் விசாரணை செய்வது நீதிமன்றத்தின் கடமை. மேலும் பெண்களின் தனியுரிமை காப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

எனவே, பெண்கள் அச்சமின்றி தங்களுக்கு நேர்ந்த அநீதிகளைப் பற்றிப் பேச வேண்டும். அது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதோடு, அவர்களால் மேலும் பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதையும் தடுக்கும்'' என்றார் பிருந்தா கார்த்திகேயன்.

அச்சம் இருக்கும்வரையே பயணம் தடைப்படும். அச்சத்தைக் கலைத்து துணிந்து நடைபோடுங்கள் பெண்களே...

 

- சக்கர ராஜன். ம
படங்கள்: கெசன்ட்ரா இவாஞ்சலின்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ