Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவையற்ற பொருட்களும் கல்விக்கு உதவும்- இந்திராணி பாட்டியின் சேவை!

 

 

சில பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, 'வேஸ்ட்'... எனக் குப்பையில் நாம் எறிந்துவிடுவோம். அவை சென்னையைச் சேர்ந்த இந்திராணி பாட்டியின் கையில் கிடைத்தால் வித்தியாசமான கலை பொருட்களாக மாறிவிடும். 76 வயதிலும் தன் கைப்பட செய்த கலைபொருட்களை நவராத்திரிக்கு சில வாரங்களுக்கு முன்பாக வீட்டிலேயே ஸ்டால் அமைத்து விற்பனை செய்துவருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆண்டுக்கு ஓர் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார் எனும் தகவல் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா!

                                                                      

 

"எனக்கு 16 வயசுல கல்யாணம் ஆச்சு. அப்போலிருந்து என்  இருந்து இப்போ வரைக்கும் வருஷம் தவறாம நவராத்திரிக்கு கொலு வெச்சுட்டு இருக்கேன். எனக்கு விதவிதமான கலைப்பொருட்களை செய்வதில் ஆர்வம் அதிகம். 1969-ல் காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளின்போது அவரை நினைவுபடுத்துற பொம்மைகள், புகைப்படங்களைக் கொண்டு கொலு வெச்சேன். அப்போதில் இருந்து ஒவ்வொரு வருஷமும் வித்தியாசமான முறையில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடுவேன். அப்படித்தான் நாலு வருஷத்துக்கு முன்பு, தேவையில்லைனு குப்பையில எறியுற கப், மூடி, பிளாஸ்டிக், பேப்பர் பொருட்களிலிருந்து கொலு வைக்கவும், கலைபொருட்களைச் செஞ்சு விற்பனை செய்யவும் முடிவெடுத்தேன். அதன்படி என் வீட்டுல வேஸ்டாகும் பொருட்கள், கடைவீதிக்கு போறப்போ கிடைக்கிற பொருட்கள், தெரிஞ்சவங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க கொடுக்கிற பொருட்கள்ல இருந்து கலைபொருட்களைச் செய்றேன். நிறைய பேர் அவங்க வேஸ்ட் பொருட்களைக் குறைஞ்ச விலைக்கு எனக்கு கொடுக்குறாங்க.

                                                              

 

நவராத்திரிக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சேமிச்ச பொருட்களிலிருந்து சின்னதும், பெரியதுமான்னு என் கற்பனைக்கு, விருப்பத்துக்கு ஏற்ப கலைப்பொருட்கள், கடவுள் உருவங்கள், தோரணங்கள், பேனா ஸ்டாண்ட், கொசு விரட்டும் திரவ பாட்டில்களில் விநாயகர் சிலை என  பயனுள்ள பல பொருட்களைச் செய்வேன். இதுக்காக தினமும் ரெண்டு மணிநேரத்தை ஒதுக்குவேன். நவராத்திரிக்கு சில வாரங்களுக்கு முன்னாடியே, பூஜைக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. அதன்படி நானும் இன்னையில இருந்து என் வீட்டுலயே ஸ்டால்ஸ் போட்டு 5 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரைக்கும் நான் செய்த பொருட்களை விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். குறிப்பா பொருட்களை வாங்குறவங்க கொடுக்கிற பணத்தை என் கையில வாங்கமாட்டேன். துணியால் மூடப்பட்ட ஒரு உண்டியல்ல கஸ்டமர் கையாலயே பணத்தைப் போடச்சொல்லிடுவேன். சேல்ஸ், நவராத்திரி முடிஞ்ச பிறகுதான் அந்த உண்டியலை திறப்பேன். கிடைச்ச மொத்த பணத்தையும், எதாவது ஒரு ஸ்கூல் அல்லது காலேஜ் பொண்ணைத் தேர்வுசெஞ்சு கொடுத்து உதவுவேன். அப்புறமா மறுபடியும் வேஸ்ட் பொருட்களை கலெக்ட் செய்ய அரம்பிச்சுடுவேன்.

முதல் வருஷம் கிடைச்ச 20,000 ரூபாயை அப்போ பி.பி.ஏ., படிச்சுட்டு இருந்த ஹேமமாலினிக்கும், அடுத்த வருஷம் கிடைச்ச 18,000 ரூபாயை, பிளஸ் 1 படிச்சுட்டு இருந்த திவ்யாவுக்கும், போன வருஷம் கிடைச்ச 30,000 ரூபாயை பிளஸ் 2 படிச்சுட்டு இருந்த ஜெயசூர்யாவுக்கும் கொடுத்தேன்" எனப் புன்னகை முகத்தோடு சொல்லும் இந்திராணி பாட்டி சைக்கிள், நீச்சல் பயிற்சி இரண்டிலும் திறமைசாளி. இவ்விரண்டு பயிற்சியையும் தவறாமல் தினமும் செய்து வருகிறார். 

                                                                   

 

வயசாகிடுச்சேன்னு சும்மாவே உட்கார்ந்து கதைப் பேசுறதுல எனக்கு விருப்பம் இல்லை. என் மனசும், உடம்பும் ஒத்துழைக்கிற வரைக்கும் என்னோட சொந்த உழைப்பில் கிடைக்கும் பணத்தை, வருஷத்து ஒருத்தர் படிப்பிற்கு கொடுத்து உதவி செய்யணும்னு ஆசை" என மெய்சிலிர்க்க வைக்கிறார், இந்திராணி பாட்டி.

கல்விக்கு உதவும் பாட்டிக்கு... கிரேட் சல்யூட்.

- கு.ஆனந்தராஜ்
படங்கள்: ரா.வருண் பிரசாத்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ