Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாய்ப்பால் கொடுக்காததால் 45 சதவிகித குழந்தைகள் இறப்பு - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !


‘’தாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகளின் அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இதனால் நம் நாட்டில் 45 சதவிகித குழந்தைகள் இறந்து விடும் கொடுமை நிகழ்கிறது’’ என்று மதுரையில் நடந்த கருத்தரங்கில் யுனிசெப் பிரதிநிதி தீபக்ராஜ் பேசினார். 

மேலும் அவர் பேசும்போது, ‘’கருவுற்ற நாட்கள் முதல் இரண்டு வயது வரையிலான ஆயிரம் நாட்கள், குழந்தைகளின் வளர்சிக்கு மிகவும் முக்கியமான நாட்கள். இந்த ஆயிரம் நாட்களில் குழந்தைக்கு என்னவெல்லாம் கட்டாயமாகச் செய்ய வேண்டுமென்று 21 பகுதிகளாகக் கூறப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது முக்கியமானது, இதன் மூலம் பிறந்த உடன் குழந்தைகள் இறப்பை தவிர்க்கலாம். அடுத்து, ஆறு மாதம் தாய்ப்பால் தவறாமல் கொடுக்க வேண்டும். எழாவது மாதத்தில் ஊட்ட உணவுகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது குழந்தையை மருத்துவரிடம் காட்டி சோதனை செய்யவேண்டும். குழந்தைக்கு ரத்தசோகை இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும். ரத்த சோகை வராமல் இருக்க கர்ப்பகாலத்தில் பெண்கள் இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரை பிரவுன் நிறத்தில் இருப்பதால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்று பெண்களிடம் அறியாமை இருக்கிறது. அது தவறு.

முன்பெல்லாம் வளைகாப்பு என்பது நம் சமூகத்தில் முக்கிய நிகழ்வாக இருந்தது. இது கர்ப்பிணிக்கு நல்லது. இப்போது அது குறைந்து விட்டது. மேலும், குறைப்பிரசவம், எடைக்குறைந்த குழந்தை பிறப்பதை தடுக்க முயற்சிக்க வேண்டும். ஊட்டசத்து குறைபாட்டால், குழந்தைகளின் அறிவுத்திறனில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கற்றலில் குறை ஏற்படுகிறது. ஒரு வயதிற்குள் தடுப்பூசி போடவேண்டும். நிமோனியா போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும். பிறப்பிலேயே இதய நோயுள்ள குழந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். விட்டமின் ஏ மாத்திரைகளை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தாலாட்டு பாட்டுபாடிக் கதைசொல்லி தூங்க வைக்க வேண்டும். வாட்ஸ்அப்பை கண்டுபிடித்த மார்க் தனக்குக் குழந்தை பிறந்தபோது, குழந்தையிடம் குவாண்டம் பிசிக்ஸை படித்துக் காட்டினாராம். இதைக் குழந்தை புரிந்துகொள்ளுமா என்று கிண்டல் செய்தார்கள். ஆனால், இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அறியும் திறன் கூர்மையாக இருக்கும் என்பதால் அதை உள்வாங்கிக் கொள்ளும்’’ என்று விரிவாக பேசினார். 

குழந்தைகளின் உரிமையில் மீடியாக்களின் பங்கு பற்றி பேசிய தோழமை இயக்குநர் தேவநேயன், ‘’மக்கள் தொகையில் 45 சதவிகிதம் குழந்தைகள் இருக்கிறார்கள். இது உலகஅளவில் ஐந்தில் ஒரு பங்கு. ஆனால், இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை ஊடகங்கள் மையப்படுத்துவதில்லை. சிலநேரம் சமூக ஊடகங்களின் மூலம் தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. 

சமூகத்தால், சாதியினால், காவல்துறையினால், பாலியல் கொடுமையினால், கொடூர மனிதர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஊடகங்கள்தான் வெளிப்படுத்துகின்றன. அதேநேரம் அப்படி வெளிப்படுத்துகிற செய்தியை கவனத்துடன் வெளியிடவேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கல்வி உதவி செய்த கலெக்டர் ஒருவர், அந்த செய்தியை போட்டோவுடன் வெளியிடப்போகிறார் என்று கேள்விப்பட்டு, அந்தச் செய்தியை வெளியிட வேண்டாம், உங்கள் மீது குழந்தைகள் உரிமைச் சட்டப்படி வழக்குப் போடுவோம் என்று எச்சரிக்கப்பட்டது. பின்னர் அந்த செய்தி வெளியிடப்படவில்லை. நிர்பயா வழக்கை மட்டும் வைத்துக் கொண்டு குற்றம் செய்பவர்களின் வயதைக் குறைத்து, ஒட்டுமொத்த சிறார்களுக்கான நீதியை மறுக்கக்கூடாது. 

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, சிறுவர் சிறை என்று சொல்வதே தவறு, அது கூர்நோக்கு இல்லங்கள்தான். சிறார் மீது போலீஸ் பதிவு செய்யும் வழக்குகளில் சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர் போன்ற விளிம்பு நிலை மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். சர்வதேச அளவிலும், நம் நாட்டிலும் போட்டப்பட்டுள்ள சட்டங்கள் அடிப்படையிலும் குழந்தைகளுக்கான உரிமையையும், நீதியையும் பெற்றுகொடுக்க ஊடகங்கள் பங்களிப்பு அவசியம்.’’ என்றார்


- செ.சல்மான்
படம் : விக்னேஷ்வரன். (மாணவ பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ