Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறவினர்களைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குத் தெரியுமா? மினி சர்வே!

 

 

பாட்டி வீட்டுக்குப் போய் ஆற்றில் குளிப்பது, ஆல மரத்தில் விழுது கட்டி ஊஞ்சல் ஆடுவது, பெரியம்மா வீட்டு முற்றத்தில் பம்பரம் விளையாடுவது, மாமாவோடு சென்று மீன் பிடிப்பது, சித்தியோடு திருவிழா பார்ப்பது, அண்ணி வீட்டில் கைமுறுக்கு சாப்பிடுவது என உறவுகளுடனான சுகானுபவங்கள் இல்லாமல் பிணைப்பற்று வாழ்கிறார்கள் இன்றைய குழந்தைகள். நம் தலைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் உறவுகளைப் பற்றி பெயர் அளவில்கூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதா? இப்படியே போனால் நாளை நமது பேரக் குழந்தைகளுக்கு, நாம் யாரென்பதுகூட தெரியாத நிலை வரக்கூடுமா?

குடும்ப உறவுகளை நம் குழந்தைகள் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை, முதலில் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

கீழே உள்ள 5 கேள்விகளுக்கு உங்கள் பதிலைக் குறிப்பிடுங்கள். இந்த சர்வேயின் முடிவின் மூலம் இதற்கான தீர்வைத் தொடர்ந்து விவாதிக்கலாம்.

குடும்ப உறவுகளை நம் குழந்தைகள் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை, முதலில் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
கீழே உள்ள 5 கேள்விகளுக்கு உங்கள் பதிலை குறிப்பிடுங்கள்.

 

உறவுகள் என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகிவிட்ட நிலையில்  இன்றைய குழந்தை வளர்ப்பும் உறவுகளை விட்டு தனித்திருப்பதையே பிரதானப்படுத்துகிறது. உறவினர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும்? உறவுகள் பலம் இழந்ததன் காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? காரணங்களைப் பற்றி பேசுகிறார் மனநல மருத்துவர், திருநாவுக்கரசு. ‘'உறவுகள் தேவை என்றால் அதற்கு குடும்பம் இருக்க வேண்டும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் அவர்களின் வாரிசுகளுக்கு மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் கிடைக்க முடியும். தனியொரு குழந்தையாக இருக்கும்போது, உறவுகள் எப்படி விரியக்கூடும்? திருமணத்தையே 'ஏன், எதற்கு?' என்று கேள்விக்கு உள்ளாக்கும் சமூக அமைப்பு நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், குடும்பங்களில் உறவுகளைப் பெருக்குவது சற்று கடினம்தான்.

*  தனிகுடித்தனம்
* பொருளாதாரச் சூழல்
* ஒரே குழந்தை
* சமூக மாற்றம்
* டெக்னாலஜி வளர்ச்சி

இப்படியான காரணங்களாலேயே இன்று உறவுகள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் மிக முக்கியப் பங்கு, டெக்னாலஜிக்கு இருக்கிறது. என்னதான் டெக்னாலஜியின் மூலமாக எங்கோ இருக்கும் உறவுடனும் பேச முடியும் என்றாலும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சி,  நாம் உறவினர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை அபகரித்துக்கொள்கிறது என்பது உண்மை.

மனித உணர்வுகளை சக மனிதர்களிடம் பகிர முடியுமே தவிர இயந்திரத்திடம் பகிர்ந்துகொள்ள முடியாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்களின் அனுபவத்தை அவர்கள் சொல்லிக் கேட்டு அதை பின்தொடர்ந்து வாழ்கிற வாய்ப்பையும் இன்றைய தலைமுறையினர் இழந்துவருகிறார்கள்.

சரி இதற்கான தீர்வுதான் என்ன?

* தனிமனிதனாக வாழ்ந்துவிடலாம் என்கிற எண்ணம் துறந்து உறவுகளைப் பேணுவதில் கவனம் கொள்ள வேண்டும்.
* உணவு, உடை, உறைவிடம், தூக்கம், போலவே உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும்போதுதான் மனிதாபிமானம் நிறைந்த சமூகம் உயிர்ப்புடன் இருக்கும்.
* அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.
* பொருளாதாரத்தை உயர்த்துவதில் காட்டும் முனைப்பைவிட, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
* குழந்தைகளுக்கு உறவினர்களிடம் பழகும் வாய்ப்பை தொலைபேசியில் மட்டுமில்லாமல் நேரிலும் வாய்க்கும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

ஆக, குடும்பம் என்கிற மரம் தழைக்கும்போதுதான் உறவுகள் கிளைகளாகச் செழித்திருக்கும்!'' என்கிறார் நிறைவாக!

- பொன்.விமலா

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ