Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சுகமான குரல்... அது பி.சுசீலாவின் குரல்...' - பி.சுசீலா பிறந்ததினம்

பி சுசீலா

 

'தமிழுக்கும் அமுதென்று பேர்...' எனப் பாடியவர் பி.சுசீலா. அவர் பாடிய அத்தனை பாடல்களுமே நமக்கு அமுத கானங்கள்தான்.

 ‘சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்... எனக்கும் அந்தக் குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்...’  & இது 'யூத்' படத்தில் 'சர்க்கரை நிலவே...' பாடலின் இடையில் வரும் வரிகள்.

சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா?

'உயர்ந்த மனிதன்' படத்தில் 'பால் போலவே' பாடலுக்காக பின்னணிப் பாடகருக்கான முதல் தேசிய விருதை பெற்றவர். அதன் பிறகு 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

பத்மபூஷண் விருது இவரால் பெருமை அடைந்திருக்கிறது. 

தனிப்பாடல், டூயட், கோரஸ் என எல்லாம் சேர்த்து  மொத்தம் 17,695 பாடல்களைப் பாடிய சாதனையாளர் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் இவரை சமீபத்தில் கவுரவித்திருக்கிறது.
இந்தக் கணக்கு முழுமையானதல்ல. 

‘‘துலு, ஒரியா உள்பட 12 மொழிகளில் பாடியிருக்கிறேன். அத்தனை மொழிகளிலும் நான் பாடிய பாடல்களின் பட்டியலைத் தயாரிக்கிற வேலையை என் ரசிகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் நான் பாடிய தனிப்பட்ட ஆல்பங்களும் அடக்கம். 30 ஆயிரத்தைத் தாண்டிவிடும் எனச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் என் வேலை வெறுமனே பாடுவது மட்டும்தான் என்பதால் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை...’’ அடக்கமாகச் சொல்கிறார் குரலரசி. 

இத்தனைக்கும் இவரது தாய்மொழி தெலுங்கு. அட்சர சுத்தமான தமிழில் அவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் பாடகர்களுக்கு தமிழில் எப்படிப் பாட வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் பாலபாடங்கள்!

''ஒரு பாடகருக்கு உச்சரிப்பு எத்தனை முக்கியம் என்பதை நான் சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன். ஒரு பாடலின் வெற்றிக்கு இசையும், வரிகளும் மட்டுமல்ல, வரிகளை சரியாக உச்சரிப்பதுகூட அவசியம் என்பது என் கருத்து...'' என்கிற சுசீலா, பாடகியான பிறகே தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

''ஏ.வி.எம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியரையும் வைத்தார். மலையாளத்தில் பாட வாய்ப்புகள் வந்த போது, அந்த மொழியும் எனக்குப் பரிச்சயமில்லாததாகவே இருந்தது. இசையமைப்பாளர்கள் எனக்கு பாடல் வரிகளை மொழி பெயர்த்துச் சொல்வார்கள்...'' தன்னடக்கத்துடன் சொல்கிற சுசீலா, விஜயநகரத்தில் இசையில் டிப்ளமா முடித்தவர். தனது 14 வயதில் முதல் கர்நாடக சங்கீத கச்சேரி செய்தவர். ஆதிநாராயண ராவ், ராஜேஸ்வரராவ், பெண்டியாலா மாதிரியான ஜாம்பவான்களிடம் ஹிந்துஸ்தானி பாணி கற்றுக் கொண்டவர்.

''அந்தக் காலத்தில் டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, கண்டசாலா, பி.லீலா எல்லாருக்குமே இருந்த தனித்தன்மை பாராட்டத்தக்கது. ஒருவரின் நிழல்கூட மற்றவரின் மேல் படாது. இப்போது சில  கலைஞர்களிடம் மட்டுமே அதைப் பார்க்க முடிகிறது... பாடகர்களுக்குத் தனித்தன்மை தேவை...'' என்கிற சுசீலா, 'பி.சுசீலா டிரஸ்ட்' என்கிற பெயரில், சத்தமின்றி சேவையில் ஈடுபட்டு வருவது பலரும் அறியாதது.

''அது நலிந்த இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்படுவது. ஒவ்வொரு மாதமும் கலைஞர்களுக்கு பென்ஷன் கொடுக்கப்படுகிறது. வருடா வருடம் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி, முக்கியமான கலைஞர்களை கவுரவித்து அதில் வரும் பணத்தை டிரஸ்ட் கணக்கில் சேர்த்து விடுகிறோம். பல கலைஞர்களுக்கு மருத்துவ வசதியும் செய்து கொடுத்திருக்கிறோம்...’’ என்பவர் அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பமின்றி வியக்க வைக்கிறார்.

தனக்கு குறையொன்றும் இல்லை என்கிற சுசீலா, இந்தத் தலைமுறை இசைக் கலைஞர்களைக் குறை சொல்லவும் விரும்பாதவர்.
''அந்தக் காலத்து இசையை, இந்தக் காலத்து இசையுடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லா கலைஞர்களுமே உழைக்கிறார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் போன்ற இசை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுகிற மிகப் பெரிய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இதையும்விட சிறப்பாக ஏதேனும் செய்திருக்கலாமோ... தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்கிற இந்தத் தலைமுறையில் பிறந்திருக்கலாமோ என்றெல்லாம் நான் நினைத்ததுகூட இல்லை.  அந்தக் காலத்து இசையமைப்பாளர்கள் அத்தனை சுலபத்தில் திருப்தி அடைய மாட்டார்கள். எங்களால் இவ்வளவுதான் முடியும் என நாங்கள் நம்புவதைப் போல பத்து மடங்கு அதிகமாக எங்களிடமிருந்து வேலை வாங்குவார்கள். அவர்கள் நினைத்தது வருகிற வரை ஓயமாட்டார்கள். 

தனது சக இசைக்கலைஞர்களுடனான நட்பு, ரசிகர்களை சந்திப்பது, டிவோஷனல் ஆல்பம் தயாரிப்பது, ஃபேஸ்புக்கில் பாடல்களைக் கேட்பது என இந்த வயதிலும் பிசியாகவே இருக்கிறார் பி.சுசீலா. அந்த நட்புப் பட்டியலில் ஜேசுதாஸும், ஜெயச்சந்திரனும் முக்கியமானவர்கள். எம்.எஸ்.வி உயிருடன் இருக்கும்வரை அடிக்கடி அவரை சந்தித்துப் பேசி, மலரும் நினைவுகளில் மூழ்குவது சுசீலாவுக்குப் பிடித்தமான செயலாக இருந்திருக்கிறது.


- ஆர்.வைதேகி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close