Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்த ஒரு 'சொல்' பெண்ணை என்னவெல்லாம் செய்யும்?

பெண்ணை

சமீபத்தில் வாசித்த ஒரு கவிதை. மனுஷ்யபுத்திரனுடையது. 'வேசிகளிடமும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகள்...' என்ற வரிகள். அதைப்பற்றி இணையம் முழுக்க கேலிகளும் கிண்டல்களும். சிலது சிரிக்கும்படி, சிலது வரம்பு மீறி. அது மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல் என்பதைவிட உச்சபட்சமாக 'வேசி' என்ற பெண்ணினம் மீது கிண்டல், கேலி, அருவருப்பு என தங்கள் மனக்குப்பைகளைக் கொட்டி இருந்தனர். வேசி, தே.., அம்மா, ஆத்தா என்ற வார்த்தைகள் தமிழில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும், ஏன் உலகம் முழுமைக்கும் சொந்தமாக இருக்கின்றன.

என் நெருங்கிய தோழி அவள். அழகான குடும்பம், ஒரே ஒரு குழந்தை என எந்தப் பிரச்னையும் இல்லை. நாற்பதுகளில் தன்னை மேம்படுத்திக்கொள்ள நினைத்து இளைத்து, அழகுபடுத்திக்கொள்ளவும் ஆரம்பித்து இருந்தாள். பக்கத்து வீட்டில் இருப்பவர் இவரின் அந்த முயற்சிகளைப் பாராட்டுவார், 'இப்போ அழகா இருக்கீங்க' என்பார். அதை இவர் புன்னைகையோடு ஏற்றுக்கொள்வார். ஆனால் இது கணவருக்குப் பிடிக்கவில்லை.

கணவருக்கும் மனைவிக்குமான வாக்குவாதம் முற்றிய ஒரு நாளில், வார்த்தைப் போர் நடந்துகொண்டிருந்தது. அதில் ஒரு கட்டத்தில் கணவர் தோற்கும் நிலை வர, அப்போது அவளைத் தாக்க வேறு போர் வகை தெரியாமல் அந்த வார்த்தையை ஆயுதமாக்கினார்... 'தே...'.

'இனியும் என்னால இங்க வாழ முடியாது. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல' என்று கதறினாள் தோழி.  மீண்டும் மீண்டும் கதறினாள்... 'அப்படிப்பட்ட பெண் இல்ல'.  

'தே...' - இந்த வார்த்தைதான் பெண்ணை பலவீனமாக்கும் என்று இந்த சமூகத்துக்கும், ஆண்களுக்கும் நன்றாகத் தெரிகிறது. ஆனால், அதை வாங்கிக்கொண்டு உடைந்துபோகும் பெண்ணுக்குத் தெரிவதே இல்லை.

வேசி என்பவர் யார்? அவர் பெயரைச் சொல்லி ஒரு பெண்ணை அழைப்பதன் மூலம் எந்த விதத்தில் அந்தப் பெண்ணை கேவலப்படுத்திவிட முடியும்? பாலியல் தொழில் என்பதும் ஓர் ஆதித் தொழில். அதை அங்கீகரிக்கவும் வேண்டாம், கீழ்மைப்படுத்தவும் வேண்டாம். அவர்களின் உலகத்தில் நாம் தலையிடாமல் இருப்பதே நல்லது.

 யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத எதுவும் நல்ல தொழிலே என்னைப் பொருத்தவரை. ஆயிரம் பேரை கொல்லும் அணு விஞ்ஞானம், ஆயுத வியாபாரம், தேசபக்தி என்ற பெயரில் அப்பாவிகளைக் கொல்வது, அதிகாரத்தால் அடிமைப்படுத்துவது, ஒன்றுமறியா சிறு வணிகர்களை சட்டங்கள் மூலம் துன்புறுத்தவது, நோய்களை வாரி வழங்கும் கோக், பெப்சி போன்ற உணவுப் பொருட்களை தயாரிப்பது, விற்பது... இவர்களை எல்லாம்விட, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாத இந்தத் தொழில் கீழ்மையானது அல்ல.

பாலியல் தொழிலாளிகளும் ரோஷம், தன் உணர்வு உள்ள, சமூகத்தின் ஓர் அங்கம்தான்.

தமிழ்நாட்டில் தேவதாசி முறைக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. முத்துலட்சுமி, ராமாமிர்ருதம் போன்றவர்கள் முன்னின்று போராடி சிறுமிகளுக்கு பொட்டு கட்டும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். சதிர் ஆட்டத்தில் இருந்து பரதநாட்டியம் உருவானது. நாடக அரங்குகளில் கோலோச்சினார்கள். பிறகு சுந்ததிரப் போராட்டத்தில் நாடகம் மூலம் விழிப்பு உணர்வு கொண்டு வந்து பல தலைவர்களுடன் நெருக்கமானார்கள். இவர்களைக் கொண்டு சுதந்திர தாகத்தை பரப்பினர் தேசிய கட்சிகள்.

தேவதாசி சமூகத்தினர் அரசியல் நீரோட்டம், சினிமா நீரோட்டம் என்று கலந்து நூற்றாண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால் மக்களின் மனநிலை, முக்கியமாக சில ஆண்களின் மனநிலை... 'வேசி', 'தே... போன்ற வார்த்தைகளை விட்டு வெளியே வராமல் சிக்கிக்கொண்டிருக்கிறது.

'தே...' என்ற வார்த்தையால் ஆண்கள் தாக்கும்போது, உடனே பெண் அழுது அரற்றி சொல்லுவது... 'நான் அப்படிப்பட்ட பெண்ணில்லை' என்பதைத்தான். எப்படிப்பட்ட பெண்ணில்லை? ஏன் நாம் ஒரு சமூக அங்கீகாரத்துக்கும், நல்ல பெயர் வாங்கவும் துடித்துக்கொண்டே இருக்கிறோம். யாரிடம் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும்? சக மனிதர்களிடம் இருக்கும் நேசமும், நம்பிக்கையும் போதுமானது நம் நேர்மைக்கு.

சில குடும்ப விஷயங்கள் தவிர, ஓர் ஆண் தன் ஒழுக்கத்தை எங்கும் நிரூபிக்கத் தேவையில்லை. அவனால் தன்னுடைய பாலியல் இச்சைகளை, அது சக பெண்ணை துன்புறுத்தும் வேளையிலும் எளிதில் பகிர்ந்துகொள்ள முடியும். அது இந்த சமூகத்தில் எளிதாய் எடுத்துக்கொள்ளப்படும் விஷயம். அதே சமயம் ஒரு பெண் சகஜமாக பொது இடங்களில் பேசினால்கூட, 'உனக்கு இருக்கும் நல்ல பெயர் போய்விடும்' என்று சொல்லப்படும். ஒரு செக்ஸ் ஜோக்குக்கு சிரித்துவிட்டால்கூட, அவள் நாணமே இல்லாதவள் ஆகிவிடுவாள்.

பெரியார் சொன்ன முக்கியமான விஷயம்... 'கற்பு என்ற விஷயத்தை என்று நாம் சமூகத்தில் இல்லாமல் ஆக்குகிறோமோ அன்றே உண்மையான பெண் சமத்துவம் கிடைக்கும்' என்றார்.

என் தோழியிடம் கூறினேன்.

''இனி உன்னை அவர் அப்படிச் சொன்னால், 'அவர்கள் கேலிக்கோ, கேவலத்துக்கோ உரிய வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல' என்று புரியவை. புரியாவிடில் நீ அந்த வார்த்தையை சலனமின்றி கடந்துவிடு. 'அந்த வார்த்தைப் பிரயோகம் என்னை துளியும் தாக்காது' என்று உணர்த்து. யாரும் மொன்னை ஆயுதங்களால் போரிட மாட்டார்கள். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை மொன்னை ஆயுதங்களாய் ஆக்குவது பெண்கள் கையில் மட்டுமே இருக்கிறது!"

நமக்கு நல்ல பெயர் தேவையில்லை. அந்த விலங்கை நாம் உடைப்பது மட்டுமில்லாமல், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் அதைச் சொல்லிக்கொடுக்கும்போதே, பெண்களின் மிகப்பெரிய மைனஸ் ப்ளஸ் ஆகும்.

இனி பெண் குழுந்தைகளுக்கு, 'சமத்தா இருந்து நீ நல்ல பெயர் வாங்கணும்' என்பதைவிட, 'உனக்கு யாரோட காண்டக்ட் சர்டிஃபிகேட்டும் தேவையில்லை. நல்ல பெயர் வாங்க நீ அடிமை வாழ்க்கை வாழத் தேவையில்லை. யாருக்கும் துன்பம் இல்லா நல்வாழ்வில் இரு போதும்' என்று கற்பிப்போம்.

- கிருத்திகா தரன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ