Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெர்பல் நாப்கின்...  திருச்சி வள்ளியின் ஆச்சரிய கண்டுபிடிப்பு!    


இல்லற வாழ்க்கை இந்த உலகில் வாழும் எல்லோருக்கும் இனிமையாக அமைந்து விடாது. அந்த பட்டியலில் இடம் பிடித்தார் திருச்சி முசிறியைச் சேர்ந்த வள்ளி. சிறுவயது முதல் வறுமையிலேயே வாழ்ந்த வள்ளிக்கு புகுந்த வீட்டிலும் வறுமை. கணவருக்கு போதிய வருமானம் இல்லை. குழந்தைகளுக்காக குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம் வள்ளிக்கு ஏற்பட்டது.

வாழ்க்கையில் எதிர்நீச்சலுடன் போராடிய வள்ளிக்கு இந்த கஷ்டம் பெரியதாக தெரியவில்லை. எல்லோரையும் போல வாழ்க்கையில் முன்னேற வேண்டும். குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியோடு போராடிய வள்ளி, இன்று பெண் தொழிலதிபர். அதுவும் பெண்களுக்கு உதவும் ஒரு சாதனை பெண்மணியாக திகழ்கிறார். ‘

அவரிடம் பேசுகையில், "வாழ்க்கையில் துன்பத்தில் இருக்கும் போது இறைவன் திடீரென ஒரு திருப்பத்தை தருவான். அப்படித்தான் கடவுள் எனக்கும் ஒரு திருப்பத்தைத் தந்தான். கணவனின் ஊதியத்தையும் எதிர்பார்த்து இருக்க முடியாது. குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். என்ன செய்றதுனு யோசிச்சேன். வெளியில் வேலைக்குப் போகவும் விருப்பம் இல்ல. அடுத்தவங்ககிட்ட கைகட்டி வேலை பார்க்கிறதவிட  நாமே சுயமா ஒரு தொழிலை ஆரம்பிச்சா என்ன என தோணுச்சு. ஆனா, ஒரு தொழிலை தொடங்குவதற்கு என்கிட்ட சேமிப்பு எதுவும் இல்ல.

அப்போ திடீர்னு எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. எல்லோரும் பண்றமாதிரி நாமளும் ஒரே மாதிரி தொழிலை செய்ய வேண்டாம். பெண்களுக்கு எது அதிக பிரச்னையா இருக்கோ அதை கையில எடுக்கலாம்னு தோணுச்சு. நாப்கினை தயாரிச்சு குறைந்த விலைக்கு கொடுத்தா நல்ல வரவேற்பு இருக்கும். அப்போதுதான் எனக்கு என்னோட தோழிகள் மூலமா அறிமுகம் ஆனாங்க திருச்சி, தமிழ்நாடு  மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் இயக்குநர் மணிமேகலை. அவங்கதான் இந்த நாப்கின் தயாரிக்கிறதுக்கு தேவையான மிஷின், பொருட்கள் எங்க வாங்கலாம்னு யோசனை சொன்னாங்க. அதன்படி பேங்க்ல லோன் வாங்கி, இதற்கான மிஷின்களை வாங்கிப் போட்டேன். சுத்தமான காட்டன் துணிகள் மட்டுமே பயன்படுத்தி நாப்கின் தயாரிச்சேன். எனக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர்கிட்ட இதைப் பத்தி எடுத்துச் சொல்லி, அவங்களைப் பயன்படுத்த வச்சேன். அவங்க எனக்கு தொடர்ந்து ரெகுலர் கஸ்டமரா மாறினாங்க. அந்த பெண்கள் அவங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் சொன்னாங்க. அவங்க மூலமாகவும் எனக்கு நிறைய ஆர்டர்கள் வந்துச்சு.  


இப்படி என்னோட நாப்கின் சுற்று வட்டார பெண்கள் கிட்ட அறிமுகம் ஆச்சு. எங்க ஊர்லயே இருக்கிற ஒரு அரசு பள்ளிக் கூடத்துல படிக்கிற ஸ்கூல் பிள்ளைகள், டீச்சர் எல்லார்கிட்டையும் சாம்பிளுக்கு நாப்கின் கொடுத்தேன். அதுக்கு அப்புறம், அந்த ஸ்கூல் ஹெச்.எம் தொடர்ந்து ஸ்கூலுக்கு நாப்கினை ஆர்டரா எடுத்துக்கிட்டாங்க. 

ரொம்ப குறைஞ்ச விலைக்கு நாப்கின் விற்பனை செய்ஞ்சதால ஆரம்பத்துல ரொம்ப தடுமாறினேன். நிறைய நாப்கின் ஆர்டர்கள் கொடுத்த ஒரு இடத்துல இருந்து பணம் வராம இருந்தது. கொடுத்திடுவாங்க என விட்டு பிடித்து பார்க்க நெனச்சேன். ஆனா, கடைசியா அந்த கம்பெனிகாரங்க என்ன ஏமாத்திட்டாங்க. அந்த சமயத்துல எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இப்படி இடையில பல நேரத்துல நஷ்டம் ஏற்பட்டுச்சு. மிஷின் வாங்கினதுலயும் பிரச்னை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என்னை போட்டியா நினைச்சவங்க 'எப்படியும் பிசினஸூல ஃபெயிலியர் ஆகிவிடுவா'னு நினைச்சுட்டு இருந்தாங்க. 

ஆரம்பத்துல நான் இந்த பிசினஸ் செய்றதால என்னோட கணவர் என்னை விட்டு பிரிஞ்சிருந்தார். அது ஒருபக்கம் வேதனையாக இருந்தது. என்னோட முயற்சி, உழைப்பு எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு என்னோட கணவரும் திரும்பி வந்தார். இரண்டுபேரும் சேர்ந்து பிசினஸ் செய்யும் போதும் பல தடைகள் வந்தன. அதனால என்கிட்ட வேலைப் பார்த்த ஆட்களும் நிற்கும் நிலையும் வந்தது. இந்த நேரத்துல நம்மோட முயற்சியை கைவிடக்கூடாதுனு முடிவு செஞ்சேன். நமக்கு போட்டியா பல பேரு வந்தாலும் சரி, அவங்ககிட்ட இருந்து வித்தியாசத்தை நாம காண்பிக்கணும். அப்படி ஒரு நாள் எனக்கு தெரிந்த ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, இப்போ பெண்கள் பலரும் கர்ப்பப்பை பிரச்னை புற்றுநோயால பாதிக்கப்பட்டுட்டு வராங்க. அதிகமாக வெள்ளைப்படுதலாலும் அவதிப்பட்டுட்டு வராங்க. இதுக்காக எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டாலும், ஒரு கட்டத்துக்கும் மேல பலனில்லாமப் போகுதுனு வேதனையா சொல்லிட்டு இருந்தார். 


சித்த மருத்துவர்களோட ஆலோசனைப்படி, வீட்ல தையல் மிஷின் வாங்கிப் போட்டு, நாப்கின் தயாரிக்கும் போது, அதில் துளசி, வேப்ப இலை, சோற்றுக் கற்றாழை இந்த மூன்றையும் சம பங்கு சேர்த்து, சுத்தமான காட்டனை பயன்படுத்தி நாப்கின் தயாரிச்சேன். வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கிற பெண்களுக்கு இந்த நாப்கின்களை கொடுத்தேன். அவங்க பயன்படுத்தி பார்த்துட்டு, ரொம்ப சந்தோஷத்தோட அடுத்தடுத்த மாதங்களுக்கும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இதுதான் நம்மோட அடுத்தபடினு இப்போ வேலை ஆட்கள் யாரையும் வச்சுக்காம, என் பிள்ளைகள், கணவர் என நாங்க மட்டுமே இந்த நாப்கின்களை தயாரிச்சு விற்பனை செய்துட்டு இருக்கோம். ஒரு நாப்கின் பாக்கெட்டின் விலை 60 ரூபாய் தான்.

துளசி இலை, வேப்பிலை இலை, கற்றாழை இந்த மூன்றையும் பயன்படுத்தி நாப்கின் தயாரிப்பதால அந்த வாசனை கர்ப்பைக்குள் போகும் போது, அத்தனை நோய்களும் குணமடைகிறது. இதை இன்னும் பெரிய அளவில் பல பெண்களிடம் கொண்டு போகணும். அதுதான் என்னோட அடுத்தகட்ட முயற்சி" என்கிறார் வள்ளி திடமாக. 

-வே. கிருஷ்ணவேணி

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close