Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணமாகா பெண்களுக்கு கருக்கலைப்பு அனுமதி....என்னதான் சொல்கிறது சுகாதாரத்துறை!

திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது தற்போது சட்டத்துக்குப் புறம்பான செயலாக இருக்கிறது. ஆனால், அதையும் மீறி கருக்கலைப்பு செய்யும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் திருமணமான பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும், தாங்கள் பயன்படுத்திய கருக்கலைப்பு மருந்துகள் பயன்தராதபோது, அவர்களுக்கு கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி அளிக்கலாம் எனவும், இதற்காக கருக்கலைப்பு மருத்துவம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் சமீபத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

இப்பரிந்துரையின் அவசியம் குறித்துச் சொல்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா. 

''ஏன் இந்தப் பரிந்துரை என்ற கேள்விக்கு, திருமணம் ஆகாத இளம்பெண்கள் பலர் கருத்தரிப்பதும், பின்னர் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்துகொள்வதும் தற்போது அதிகரித்துகருக்கலைப்பு வரும் சூழலே பதில். அவர்கள் அப்படி நாடிச் செல்லும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் பெரும்பாலும் போலியானவர்களாகவே இருக்கின்றனர். இதனால் கட்டணக் கொள்ளை, தவறான சிகிச்சை, அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சமயத்தில் மரணம்வரை என அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் வீரியம் மிகவும் அதிகமானதாக இருக்கிறது. 

இதையெல்லாம் கருத்திக்கொண்டுதான், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இப்படி ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளது. இதை இளம் பெண்களுக்கு நேரும் தவறான சிகிச்சை மற்றும் மரணங்களைத் தடுக்கும் செயல்பாடாகத்தான் பார்க்க வேண்டும். அதை விடுத்து, திருமணத்துக்கு முன்பாக பெண்கள் கருவுறுவதை அரசே ஊக்குவிக்கிறது என்று புரிந்துகொள்வது தவறு. 

திருமணத்துக்கு முந்தைய உடலுறவு என்பது நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம்தான். இருப்பினும் இது தவறானது, இப்படி யாரும் செய்யக்கூடாது என இது சட்டத்தின் மூலம் தடுக்கக்கூடிய விஷயமல்ல. இன்னொரு பக்கம், இதுபோன்ற செயல்கள் சமூகத்தில் பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்ற நிதர்சனப் புரிதல் அவசியம். மேலும், இதைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும், விழிப்பு உணர்வையும் இளம் பெண்களிடம் ஏற்படுத்தலாம். அதன் ஒரு அங்கமாகத்தான், 'கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்துங்கள்' என அரசே அடிக்கடி விளம்பரப்படுத்துகிறது. அதனால், கருக்கலைப்பு தொடர்பான சிபாரிசும் தவறில்லையே?

நாம் விவாதமாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ளும் முன்பாக, அந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். இந்தக் கருக்கலைப்பு விஷயத்தைப் பொருத்தவரையில், தவறான சிகிச்சையால் பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு திருமணம் ஆகாத பெண்களுக்கு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக அனுமதித்தால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்லமாட்டார்கள். அரசு மருத்துவமனைகளிலேயே அனுபவம் பெற்ற அரசு மருத்துவர்களால், அப்பெண்களுக்கு எவ்வித உடல்நலக் கோளாறுகளும், பின்விளைவுகளும் ஏற்படாதவாரும், இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் நிலையையும் தவிர்த்து கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும். எனவே இந்த சிபாரிசினை, நிச்சயமாக வரவேற்கலாம்.

முன்பு விவாகரத்துச் சட்டம் கொண்டுவந்தபோது, 'இச்சட்டம் தம்பதிகளைப் பிரிக்கும் செயல், இதை சட்டப்பூர்வமாக்குவதா?' என பல எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இச்சட்டம் சொல்வது, கணவன்-மனைவி மகிழ்ச்சியாக இல்லறத்தை நடத்த வேண்டும்; ஒருவேளை  அவர்களுக்குள் தீர்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டு இருவரும் மனம் ஒத்துப் பிரிவது என முடிவெடுக்கும்போதுதான், இச்சட்டம் தன் கடமையைச் செய்யும். இதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறான பொருள்படத்தான் செய்யும். அதுப்போலத்தான் கருக்கலைப்பு தொடர்பான சிபாரிசும். 

பெண்களின் இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களிடம் பணம் பறித்து, முழுமையற்ற சிகிச்சையால் அவர்கள் உடல்நலனுக்கும் கோளாறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், திருமணமாகாத பெண்களின் சட்டப்பூர்வ கருக்கலைப்பு தொடர்பான சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை வரவேற்கலாம். அதே வேளையில், இளம் வயதினருக்கு திருமணத்துக்கு முந்தைய உடலுறவு தவறானது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டுசேர்க்கவும் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், போலியான மருத்துவர்களையும் களைய வேண்டும்" என்றார், வழக்கறிஞர் அஜிதா.

- கு.ஆனந்தராஜ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close