Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலையில் குழந்தைகளை சிணுங்காமல் எழுப்புவது எப்படி?!

தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை

திருமாலையே பள்ளி எழுச்சி பாடித்தான் எழுப்ப வேண்டியுள்ளது. இந்த மார்கழிக் குளிரில் நம் பட்டுச் செல்லங்களை தட்டி எழுப்புவது அத்தனை எளிதில்லை. டிவி, வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற வலையில் இரவுத் தூக்கம் சிக்கித் தவிக்கிறது. லேட்டாய் கண் மூடி ... அவசரமாய் எழுந்து.. வீடுகளில் காலை நேர அலைபாய்தல் ஒரு போர்க்களமாய் வளர்ந்து நிற்கிறது. அத்தோடு நில்லாமல் அவசரத்தில் எதையாவது மறந்து, நாள் முழுவதும் அந்த டென்ஸனாய் கழிந்துவிடும். இனி மேல் வரும் காலைகளை குழந்தை எல்லோரும் இனிக்கும் காலைகளாக கொண்டாட என்ன செய்யலாம். 

 நம் குட்டிச் செல்லங்களை துயில் எழுப்ப ஆலோசனை அளிக்கிறார் கல்வியாளர் மற்றும் குழந்தைகளுக்கான பயிற்சியளார் ஹெலிக்ஸ் செந்தில்குமார். 

குழந்தைகள் நல ஆலோசகர் செந்தில்குமார்
‘‘குழந்தைகள் தூங்கும் நேரமே அவர்கள் எழும் நேரத்தை தீர்மானிக்கிறது. 10 வயது வரை உள்ள குழந்தைகள் குறைந்த பட்சம் 9 மணி நேரம் தூக்கம் அவசியம். இன்றைய பெற்றோர் நள்ளிரவு வரை விழித்திருப்பதால் அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இரவு வரை விழித்திருக்க...குழந்தைகளின் தூக்கத்துக்கான நேரம் அதிகபட்சம் 6 மணி நேரமாகக் குறைந்துள்ளது. பெற்றோர் காலையில் அவசரகதியில் எழுந்து குழந்தைகளையும் அதே வேகத்தில் எழுப்புது காலை நேரத்தை நரகமாக மாற்றியுள்ளது. 

இயல்பான தூக்க நிலையில் இருந்து குழந்தைகள் விடுபட அரை மணி நேரம் கட்டாயம் அவசியம். மொட்டுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்க்காற்றை தென்றல் மெல்லத் தட்டி...இதழ் விரிய உயிரில் அள்ளிச் சேர்ப்பது போல அந்த துயில் எழுப்புதல் இருக்க வேண்டும். குழந்தையின் காது வருடி, காதில் மெல்ல கொஞ்சி, செல்லம் எழுந்திரு என கால்பிடித்து விட்டு...விரல்களுக்கு சொடுக்கெடுத்து ..கூந்தல் கோதி...வருடி...துயில் கலைந்த பின்னும்...என்ன கனவு கண்டாய் என்ற விசாரிப்புகளில் வியந்து...அவர்களை பேச வைத்து....மெல்ல எழுப்பி கட்டிக் கொண்டு முத்தமிட்டு...இப்படித்தான் ஒரு குழந்தையை  துயில் எழுப்ப வேண்டும். இதற்கான நேரத்தை பெற்றோர் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

காலை நேர துயில் எழுப்புதல் இவ்வளவு அழகாக இருக்க வேண்டுமெனில் அதற்கு முதல் நாளே திட்டமிட வேண்டும். மாலை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளிடம் நாளை என்னென்ன பணிகள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோருக்கான வேலைகளை முன் கூட்டியே திட்டமிடலாம். வீட்டுப் பொறுப்புகளை ஒட்டுமொத்தமாக பெண்ணின் தலையில் திணிக்காமல்...ஆண், பெண் இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். குழந்தைகள் பள்ளி செல்வதற்கு தேவையான தயாரிப்புகளை இரவே முடித்துவிடலாம். குழந்தைகளின் புத்தகத்தை பையில் எடுத்து வைப்பது, டிபன் பாக்ஸ்களை கழுவி ஒரிடத்தில் வைப்பது, ஷூக்களை சரியான இடத்தில் எடுத்து வைத்தல் போன்றவற்றை இரவே சரியாக, சரியான இடத்தில் எடுத்து வைத்துவிட்டால் மறுநாள் காலை டையை காணோம், என் சாக்ஸ் எங்க, ஹோம் வொர்க் நோட்ட காணோம் என்று குழந்தைகள் டென்ஷனாகி, உங்களையும் படுத்தியெடுத்து விடுவார்கள்.


குழந்தைகள் எழுவதற்கு முன்பே சமையல் உள்ளிட்ட மற்ற பணிகள் முடித்து விட்டால், அவர்களை எழுப்ப நேரம் கிடைக்கும். ஒருநாள் காலை நேரம் கழித்து எழுந்தாலும், அந்த நாள் கசக்க ஆரம்பித்துவிடும் குழந்தைகளுக்கு.  

குழந்தைகளை எழுப்பும் போதே ஸ்கூல் போகனும், அவசரம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசி எழுப்பலாம். அப்போதே அவர்கள் மனதில் டென்சன் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. காலை நேரத்தில் குழந்தைகள் தாமதமாக எழுவதால் சரியாக சாப்பிடாமல், திட்டு வாங்கியும், அழுதபடியும் பள்ளி செல்கின்றனர். வகுப்பில் தூங்கி வழிந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்க நேரிடும். இது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். அவர்களது தனித்திறனை வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது இந்த விஷயத்துக்கு பொருந்தும். எனவே இனிக்கும் காலை நேரத்தை நம் குட்டிச் செல்லங்களுக்கு பரிசளிக்க வேண்டியது இன்றைய தேவை. நீங்கள் தென்றலாக மாறி மொட்டுகளை எழுப்பவது போல உங்கள் குழந்தைகளை துயில் எழுப்புங்கள், ’’ என்கிறார் செந்தில்குமார். 

- யாழ் ஸ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close