Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இல்லத்தரசிகள் பணத்தைச் சேமிக்க 15 மந்திரங்கள்! #HomeMakerTips

Save money

தேவைகள் அதிகரித்து, செலவுகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலைமையை எப்படி இல்லத்தரசிகள் கையாண்டால், பணத்தை சிக்கனமாக செலவழிக்க முடியும் என்பதை சொல்கிறார் நிதி ஆலோசகர் கே.முகைதீன் மாலிக்.

1. முதலில், குடும்பத்தின் வரவு, செலவுகளை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் அனைத்துச் செலவுகளும் சேர்ந்து வருமானத்தில் 70 முதல் 80 சதவிகதத்துக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

2. குறைந்தது 20 முதல் 30 சதவிகித வருமானத்தை சேமிக்கப் பழக வேண்டும். இதில் 10 சதவிகிதம், அவசரத் தேவைகளுக்கு உதவும் வகையில் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தும் விதமாக வங்கியில் தொடர் வைப்பு நிதி (RD) அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund Liquid Fund) திட்டத்தில் சேமிக்கவும்.

3. மீதம் இருக்கும் 10 சதவிகித பணத்தை, நீண்ட கால (10 வருடம்) மற்றும் நடுத்தர கால  (5-7 வருடம்) சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

4. கிரெடிட் கார்டு மூலம் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமல், எளிய முறையில்... அருகிலுள்ள மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்கினால் பெரும் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

5. உங்கள் குடும்பத்துக்குக் கண்டிப்பாக மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளவும். அவை குறைந்தது 1 லட்சம் ரூபாயில் ஆரம்பித்து 5 லட்ச ரூபாய் அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளவும்.

6. நீங்கள் இல்லத்தரசியாக இருந்தால், உங்கள் கணவருக்கு  டேர்ம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மிகக் குறைந்த பிரிமீயத்தில், மிக அதிகமான இழப்பீட்டை தரும் இன்ஷுரன்ஸ் பாலிசிகள்தான் டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசிகள். உங்கள் கணவர் மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால், குறைந்தது 30 முதல் 40 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கிற அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்.

இல்லத்தரசிகள்

7. குழந்தைகள் மேல் உள்ள பிரியம் காரணமாக அவர்கள் பெயரில் இன்ஷுரன்ஸ் பாலிசிகளை  எடுப்பதைத் தவிர்க்கவும். இன்சூரன்ஸ் என்பது சம்பாதிக்கும் நபருக்குத்தான் தேவை.

8. உங்கள் கணவர் ஓட்டும் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் அவர் பெயரில் பதிவாகி உள்ளதா, வண்டியின் இன்சூரன்ஸ் நடைமுறையில் உள்ளதா, கணவரின் ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் உள்ளதா என்பதை சரிபார்த்து முடிவு தேதிக்கு முன்பாக ரெனியூவல் செய்யவும்.

9. 18 வயதுக்குட்பட்ட உங்கள் மகன் மற்றும் மகள்களுக்கு வாகனம் வாங்கி கொடுத்து வீணாகப் பிரச்னையை வரவழைக்காதீர்கள்.

10. இடம் வாங்க, நகை வாங்க மற்றும் வீட்டுக்கான முன்பணம் (Down Payment) இவற்றுக்காக தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இந்த தேவையைப் பூர்த்தி செய்ய சேமிப்பை மேற்கொள்ளுங்கள். 5 வருட கால அவகாசத்தை வைத்து கொண்டு 10 முதல் 12  சதவிகிதம் லாபம் தரும் அதிக ரிஸ்க் இல்லாத மாதாந்திர முதலிட்டு (SIP) திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

11. எதிர்காலத்தில் எந்த ஊரில் குறைந்தது 10 ஆண்டுகள் இருப்போம் என்று தெரியாவிட்டால், வீடு வாங்க வேண்டாம்.

12. திருமணமாகி குறைந்த மாதங்களே ஆன நிலையிலும், கணவர் வேலையில் சேர்ந்து குறைந்த காலமே ஆன நிலையிலும், வீடு வாங்காதீர்கள். குறைந்தது 7 அல்லது 10 வருட காலத்துக்குபின் வீடு வாங்கவும். அதுவரை வீடு வாங்கினால் என்ன மாதாந்திர தவணை கட்டுவீர்களோ, அந்த தொகையை மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் (SIP) முதலீடு செய்யவும். இந்த விஷயத்தில் மற்றவர்கள் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்.

13. குறைந்தது 10 சதவிகிதம் வருமானத்தை ஓய்வு கால தேவைக்காக (Retirement income) 15 வருட காலம் சீராக, சரியான முறையில் வருடா வருடம் அதிகரித்து முதலீடு செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே  ஓய்வு கால தேவையான நிதித் தொகுப்புக்கான இலக்கை எட்டமுடியும். இதற்கு பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் கைகொடுக்கும்.

14. முடிந்தால் உங்கள் கல்வித்தகுதி மற்றும் திறமையின் மூலம் ஏதேனும் வருமானத்தை பெற முயலவும். அதனை முழுவதும் முதலீடு செய்யவும் அல்லது முக்கியமான இன்சூரன்ஸ் பிரிமியங்கள் (மெடிக்கல், வானம், லைஃப் இன்சூரன்ஸ்) கட்டவும். அல்லது சிறிய அளவிலான குடும்ப விசேஷங்களுக்கும் குழந்தைகளின் எக்ஸ்ட்ரா கோச்சிங் கிளாஸ் பீஸ், சிறிய அளவிலான மருத்துவ செலவுகள், விடுமுறை செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

15. நீங்கள் மேற்சொன்ன விஷயங்களை சிறப்பாக செய்யும்போது கண்டிப்பாக உங்கள் கையில் பண இருப்பு அதிகமாகும். அதில் ஒரு சிறு பகுதியை உங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று அனுபவியுங்கள். உங்களுக்கு குடும்ப மருத்துவர் இருப்பது போல், உங்களுக்கான நல்ல நிதி ஆலோசகரையும் தேர்வு செய்துகொள்ளுங்கள் அவருடன் ஆலோசித்து நிதி சார் முடிவுகளை எடுங்கள்.

-கே.முகைதீன் மாலிக், என்.மல்லிகார்ஜுனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close