Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டீன் ஏஜ் நட்பு... பெற்றோர் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?!

நட்பு

தின் பருவத்தில் மலரும் நட்பு, மற்ற வயது நட்புகளைவிட உணர்வும் வேகமும் சேட்டையும் சீற்றமும் அதிகமாக இருக்கும். 'ஃப்ரெண்டுகளைப் பார்த்துட்டா போதும்... ஏதோ மந்திரிச்ச கோழி மாதிரி அப்புடியே எந்திரிச்சுப் போயிடுறான்... அப்படி இவனுங்க எல்லாம் சேர்ந்து எங்கதான் போவானுங்க, என்னதான் பேசுவானுங்க' என பெற்றோர்களின் சலிப்பு அதிகமாகும். இதனாலேயே வீட்டில் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் பனிப்போர் எழ ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் பெரிய மதில்சுவரே எழுந்து நிற்கும். குறிப்பாக, அப்பாவும் மகனும் வீட்டுக்குள்ளேயே புறமுதுகு காட்டும் அவலங்கள் அரங்கேறும். இவர்களுக்கு இடையில் கிடந்து உருளும் அம்மாவின் பாடு பாவம். இதுவே பெண் பிள்ளையாக இருந்தால், கடுகடுப்புடன் சேர்ந்து அடக்குமுறைகளும் அரங்கேறும். 

டீன் வயதில் ஏற்படும் நட்பில் அப்படி என்னதான் தப்பு இருக்கிறது? யோசித்துப் பார்த்தால் நம் அனைவரது வாழ்விலும், அந்த வயது நட்பு மிக முக்கியமானதாகவே இருந்திருக்கிறது. வாழ்வின் சுழற்சியை மாற்றிப் போட்டதில் அதன் பங்கே அதிகம் இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதின் பருவ நட்பை இன்றைய பெற்றோர் எப்படிப் புரிந்து கொள்ளலாம்? ஆலோசனைகள் தருகிறார் உளவியல் ஆலோகர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவிப்பிரியா. 

* ''முகம் பார்த்து சிரிக்கத் துவங்கும் சூழலில் பாலின வேறுபாடு இன்றி குழந்தைகள் தங்களது அருகில் இருப்பவர்களுடன் நட்பாவார்கள். இந்த நட்பில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. 

* தனது எண்ணங்களோடு ஒத்துப்போகும் நண்பர்களிடம் நட்பு நெருக்கம் அதிகரிக்கும். பள்ளி, பயிற்சிமையம் என செல்லும் இடம் எங்கும் நட்பு கூட்டமாக இந்த வயதில் சுற்றுவார்கள். 

* சிறு வயதுதான் என்றாலும்கூட, சக நண்பர்களின் நடத்தையும், விருப்பமும் குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்தும். 

* பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நட்புப் பாலம் கட்டாயம் அவசியம். குழந்தைகளின் உலகத்தில் தினமும் என்ன நடக்கிறது, அவர்களது நட்பு வட்டத்தில் யார் இருக்கிறார்கள் என்பதில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். 

* ஒருவேளை தவறான நபர்களுடன் பிள்ளை நட்புக்கொண்டிருந்தால், 'கூடவே கூடாது' என்று அதிகாரத்துடன் அதை மறுக்காமல், அந்த நட்பின்  சாதக, பாதகங்களை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு கால அவகாசம் அளிக்கலாம். 

* ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கூடா நட்பின் இயல்பை குழந்தைகள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. 

* குழந்தைகள் வளர்ந்து வளர் இளம் பருவத்தை எட்டும்போது நட்பு அவர்களது உலகத்தில் அதிமுக்கியத்துவம் பெறும்.  

* எதிர்பாலினத்தவரின் மீது ஈர்ப்பு ஏற்படும், எதிர்பாலின நட்பைக் கொண்டாடும் போக்கு உருவாகும்.

* பெற்றோருடன் பகிர்வது குறைந்து டீன் வயதினர் தங்களது நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்து கொள்வார்கள். 

* ஹார்மோன் மாற்றங்கள் தரும் எண்ணங்கள் மற்றும் அந்த வயதுக்குத் தேவைப்படும் பகிர்வு, தனக்கான நட்பு வட்டத்தை தேர்ந்தெடுத்து இணைய வைக்கும். சிந்தனை, விருப்பம், ஆளுமைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பைத் தேர்ந்தெடுக்கத் தூண்டும்.  

* குழந்தைகள் எந்த விஷயத்திலும் நண்பர்களின் கருத்துக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். இதை வெறுக்கும் பெற்றோர், அவர்களிடம் இருந்து வெகுதூரம் விலகிவிடுவார்கள். ஆனால், அது முழுமையாக அவர்களின் போக்குக்கு விடுவதாகிவிடும். ஆராய்ந்து முடிவெடுக்கும் மனநிலை குழந்தைகளுக்கு இருக்காது என்பதால், விட்டுத்தான் பிடிக்க வேண்டும். 


* துவக்கத்தில் இருந்தே குழந்தைகளிடம் நட்பான அணுகுமுறையைக் கையாளும் பெற்றோர்களுக்கு அவர்களின் நட்பு வட்டம் பற்றி தெரிந்துகொள்வதில் சிரமம் இருப்பதில்லை. 

* நண்பர்கள் பற்றி குழந்தைகள் சொல்லும்போது காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை கண்காணித்தாலும் அதை அவர்கள் உணர்ந்துவிடாமல் இயல்பாக இருக்க வேண்டும். 

* தவறான நட்பு என்று தெரிந்தாலும் மற்றவர்களிடம் அது குறித்து விசாரிப்பது தவறு. குழந்தைகளின் நட்பு வட்டம் பற்றி அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. 

* இன்றைய தகவல் தொழில்நுட்ப வட்டத்தில் அவர்களது பகிர்வு எப்படியிருக்கிறது என்பதிலும் ஒரு கண் இருக்கட்டும். முடிந்தவரை பெற்றோர் குழந்தைகளுடன் பேசுவது, விவாதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் அவர்களது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். 

* பதின் பருவ நட்பை பெற்றோர்கள் காரணமின்றி  எதிர்க்கும்போது, அதன் மீதான ஈர்ப்பு குழந்தைகளிடம் இன்னும் அதிகரிக்கும். பெற்றோர்கள் நண்பர்களாக மாறிவிடுவதே இதற்கு முதல் தீர்வாக அமையும்!" பெண்கள் டீன் ஏஜ் பருவத்தை கடக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா

- யாழ் ஸ்ரீதேவி 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close