Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்ம விருது பெண்கள் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

குடியரசு தினத்தை முன்னிட்டு, 2017ம் வருடத்துக்கான பத்ம விருதுகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் பெண்கள் பற்றிய குறிப்புகள் இங்கே!

மறைந்த சுனிதி சாலமனுக்கு பத்ம விருது


சுனித்தி சாலமன், மருத்துவர், சமூக சேவகி

மகாராஷ்டிராவில் பிறந்த சுனித்தி சாலமன், சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்தவர். அதன்பிறகு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்துவிட்டு சென்னை திரும்பினார் இந்த டாக்டர். சென்னை, பொது மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறையில் மருத்துவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியதுடன், எச்ஐவி குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டார். 1986ஆம் ஆண்டு,  உலக நாடுகளில் எய்ட்ஸ் பற்றிய பேச்சு பரவிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை முதன் முதலாகத் தமிழ்நாட்டில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு பாலியல் தொழில் பெண்களிடம் கண்டறிந்து சுனித்தி சொன்னபோது, அதிர்ந்தது தேசம். தொடர்ந்து, தன் வாழ்நாளை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்தார். 1993-ல் முதன் முதலாக, ஹெச்.ஐ.வி. பரிசோதனைக்கான தனியார் மையம் மற்றும் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கான ஆலோசனை மையமான ஒய்.ஆர்.ஜி கேர் (YRG CARE) சென்டரை சென்னையில் நிறுவி சேவையாற்றி வந்த சுனித்தி, தன்னுடைய 76 வயதில் காலமானார்! 

செல்வி நிவேதிதா

முனைவர் செல்வி நிவேதிதா ரகுநாத் பைட்

விவேகானந்தரின் கருத்துக்களின்பால் கல்லூரி காலங்களில் ஈர்க்கபப்ட்ட நிவேதிதா, தன் வாழ்நாள் முழுவதையும் விவேகானந்தரின் கருத்துக்களை உலகம் முழுக்க பரவ அரிப்பணித்துக் கொண்டார. விவேகானந்தா கேந்திரா பிரக்ஷன் என்கிற அமைப்பின் வைஸ் பிரசிடந்த், விவேகானந்தா கேந்திராவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், விவேகானந்தா பாரத் அமைப்பை இந்தியாவின் 41 இடங்களில் நிறுவி அதன் மூலம் இளைஞர்களுக்கு விவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துரைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்.

மீனாட்சி குருக்கள்

மீனாட்சி குருக்கள், களறியப்பட்டு கலை பயிற்றுநர் 

கேரளாவின் பாரம்பர்ய தற்காப்புக் கலையான களறியப்பட்டுக் கலைவை, தன் 74 வயதிலும்  பயிற்றுவித்து வருகிறார் மீனாட்சி குருக்கள்... இலவசமாக. தன் ஆறாவது வயதில் களறியப்பட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர், இந்தக் கலையில் தனக்குக் குருவான ராகவனை திருமணம் செய்துகொண்டார். தன் கணவருடன் சேர்ந்து 'கடதன்னடன் களறியப்பட்டு' என்ற தன் பயிற்சி அமைப்பை ஆரம்பித்தபோது, அவருக்கு வயது 17. புடவையைச் இழுத்துக் கட்டியபடி அவர் களமாடும் காட்சி, கண்கொள்ளாதது. இந்தக் கலையை அழிவில் இருந்து மீட்க, தன் மகன்கள், மகள்களுக்கும் இதைப் பயிற்றுவித்திருக்கிறார் மீனாட்சி குருக்கள்!

ஆனுராதா கொய்ராலா

அனுராதா கொய்ராலா, சமூக சேவகி 

நேபாளத்தைச் சேர்ந்த சமூக சேவகியான அனுராதா கொய்ராலா, 'மெய்டி நேபால்' என்கிற தன் தொண்டு நிறுவனம் மூலமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பல பெண்களை மீட்டெடுத்து வாழ்வளித்தவர். அப்படி மீட்கப்பட்ட பெண்கள் அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை 'மெய்டி'யில் தங்கிக்கொள்ளலாம். நிரந்தரமாக பெற்றோரால் புறக்கணிக்கபடுபவர்களுக்கு, 'மெய்டி'யே வாழ்வளித்தது. இப்போது அதன் கரங்கள் கிளைகள் பரப்பி எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வு, ஆதரவில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, குழந்தைகள் நலம், பெண்கள் மேம்பாடு என்று செயல்பட்டு வருகிறது. 'சின்என்என் ஹீரோ'வாக தேர்ந்தெடுக்கப்பட்டு நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அனுராதா, இதுவரை இந்திய மற்றும் சர்வதேச அளவில் 38 விருதுகளைப் பெற்றிருக்கிறார். குழந்தைகள் மீது தீராத அன்பு கொண்ட அனுராதாவை, நேபாளவாசிகள் செல்லமாக 'டிஜ்ஜு (அக்கா)'! என்று அழைக்கின்றனர். 


பக்தி யாதவ்


டாக்டர் பக்தி யாதவ், மகப்பேறு மருத்துவர்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் முதல் மருத்துவர், டாக்டர் பக்தி யாதவ். 1948 வருடம் தன் மருத்துவ சேவையைத் தொடங்கிய இந்த மகப்பேறு மருத்துவர், தன் 90 வயதுகளில்கூட அதை நிறுத்தவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களை பத்திரமாக பூமிக்குக்கொண்டுவந்த கைராசிக்கார பாட்டி, இலவசமாகவே அனைத்து சிகிச்சைகளையும் அளித்துவந்தார் என்பது, ஆச்சர்யம் ஆனால் உண்மை!

 

பவுவா தேவி



பவுவா தேவி, ஓவியர்

68 வயதாகும் பவுவா தேவி, மதுபாணி ஓவியத்தில் முன்னோடி கலைஞர். 12 வயதில் திருமணம், அதன்பிறகு குடும்ப வாழ்க்கை என்றிருந்தவர் வருமானத்துக்காக வரைய ஆரம்பித்தார். இன்று இவருடைய பெயின்டிங் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்துக்கு மேல் விலைபோகின்றன. 'என்னுடைய ஓவியங்களுக்கு நான் விலை நிர்ணயிப்பதில்லை. அதை வாங்குபவர்களே அதன் விலையை தீர்மானிக்கிறார்கள்' என்று சொல்லும் இந்த பிஹார் பெண்மணியின் ஓவியங்கள், ஸ்பெயின், ஜப்பான் என உலகம் எங்கும் விரும்பி வாங்கப்படுகின்றன! 

 

சுக்ரி பொம்ம கவுடா
 

சுக்ரி பொம்ம கவுடா, பழங்குடி இனப் பாடகி

கர்நாடகா மாநிலம், அங்கோலாவைச் சேர்ந்த பழங்குடி இனம் பெண், சுக்ரி பொம்ம கவுடா. அந்த இனத்தின் பாரம்பர்யப் பாடல்கள்தான் அவரின் அடையாளம்.  குழந்தை பிறப்பதில் துவங்கி இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் இவர் பாடும் பாடல்கள் உலகம் முழுக்க பிரபலம். 'நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. அதில் எங்களுக்கு சந்தோஷமே நிறைந்திருந்தது. அதனால் அதில் இருந்து எங்களுக்கு நிறையப் பாடல்கள் கிடைத்தன' என்கிறார் சுக்ரி, தன் பாடல்களுக்கான மூலம் பற்றி. கழுத்து நிறைய பாசிமணிகளும் முகம் நிறைய புன்னகையுமாக தன் பழங்குடி இனப் பெண்களுடன் சேர்ந்து சுக்ரி பாட ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ராப்பகலாக. முக சுருக்கங்களில் தன் இன வரலாறு சொல்லும் இசைப் பாட்டி இவர்!

 

பவனா சோமயா



பவனா சோமாயா, பத்திரிகையாளர்

எழுபதுகளில் பத்திரிகையாளராக தன் பயணத்தை தொடங்கிய பவனா சோமாயா, 36 வருடங்களாக சினிமா துறை பற்றிய செய்திகளுக்கு தன் பேனாவை ஓயாது இயங்கவைத்தவர். பத்திரிகை துறையில் மிகப்பெரிய பொறுப்புகள் வகித்தவர். பல பிரபலங்களின் சரிதை உட்பட,   இதுவரை 12 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்ட்ரல் போர்ட் ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேட்டில் உறுப்பினர். தொலைக்காட்சி, அச்சு, பண்பலை, இணையம் என்று அனைத்து ஊடகத் தளங்களிலும் பணியாற்றும் அனுபவம் இவர் சிறப்பு! 

 

அனுராதா பொத்வால்



அனுராதா பொத்வால், பின்னணிப் பாடகி

பாலிவுட்டின் தேன் குரல் பிண்ணனிப் பாடகி, அனுராதா பொத்வால். ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்காக 15 முறை பரிந்துரைக்கப்பட்டு, நான்கு முறை விருது வென்றவர். 5,000க்கும் மேலான இந்திப் பாடல்களை பாடியுள்ளவர், தமிழ் உட்பட 15க்கும் மேற்பட்ட மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் குரலில் வெளிவந்த பக்திப் பாடல்கள் மிகவும் பிரபலம்! 

 

தீபா கர்மகர்



திபா கர்மாகர்

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது திபா கர்மாகர், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. ஆறு வயது முதல் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றுவரும் தீபாவுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே கனவு. அதனால் அதிகப் புள்ளிகளைத் தரக்கூடிய, ஆனால் உயிருக்கே ஆபத்தான ‘புரோடுனோவா’ என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தார். ஒலிம்பிக்கில் 4ம் இடம் பெற்றார். 

ஆரம்பகாலத்தில் திபா பயிற்சி செய்த ஜிம்மில் ஜிம்னாஸ்டிக்குக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லை. மழைக்காலங்களில் ஜிம்முக்குள் தண்ணீர் புகுந்துவிடும்.  ஜிம்னாஸ்டிக்குக்கான பிரத்யேக உடைகள்கூட அவரிடம் இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வளைவுகளே இல்லாத அவரது தட்டைக் கால்கள் ஜிம்னாஸ்டிக்குக்கு பொருந்தாதவை. அனைத்து தடைகளையும் கடந்து வந்து, ஒலிம்பிக்கில் தன் உயிரைப் பணையம் வைத்து விளையாடியவருக்கு கிடைத்தது இந்திய விளையாட்டு வரலாற்றில் நீங்காத இடம்! 

ஆளுமைப் பெண்களுக்கு அரசின் அங்கீகாரம்!

 

- அதிதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close