Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்வு பயம் இனி தேவையில்லை! #ExamTips

தேர்வு

ப்ளிக்  எக்ஸாம்ன்னா என்ன பீரங்கியா? பெற்றோர் அதை வைத்தே மிரட்டுவதும், குழந்தைகள் மிரள்வதும். நின்னா, நடந்தா, பேசினா, யோசிச்சா என எல்லா விஷயத்திலும் பப்ளிக் எக்ஸாம் பயத்தை ஏற்றி படுத்தும் பாடு அப்பப்பா?  தேர்வு பயத்தில் இருந்து மீள்வது எப்படி?

''மதிப்பெண் முக்கியம்தான். அதற்காக குழந்தைகள் வீட்டை விட்டே ஓடி விடலாமா என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு படுத்தியெடுக்கத் தேவையில்லை. அவர்கள் ரிலாக்ஸாக படித்தாலே பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்" என்கிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா. 

* 9ம் வகுப்பிலேயே பப்ளிக் எக்ஸாம் சாட்டையை சுழற்ற வேண்டாம். வளர் இளம் பருவத்தில் குழப்பங்களையும் மனதில் சுமக்கும் இந்த வயதுக்கு குழந்தைகளிடம் நட்புப் பாலத்தை பலப்படுத்துங்கள்.  

* மதிப்பெண் இலக்கை நோக்கி குழந்தைகளை விரட்டவிரட்ட, அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளை பறிக்கிறோம். மதிப்பெண்ணை மட்டுமே நம்பியிருக்கும் அவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியாதபோது தோல்வியை உணருகின்றனர். மதிப்பெண்ணைத் தாண்டியிருக்கும் வாழ்வின் ருசியை, வாய்ப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள அனுமதியுங்கள். கல்லூரிப் படிப்பில் எந்தத் துறையில் நுழையப்போகிறாய், உன் கனவு இப்போது என்ன என்று கனவை விரிவுபடுத்துங்கள். அதற்கான தேடல் அவர்களது பள்ளிப் படிப்பில் நாட்டத்தை அதிகரிக்கும். 

* பயமற்ற மனதால் அதிக விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்கு பிடிக்கும் விஷயம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வழிகாட்டுங்கள். புரிதலும், தேடலும் படிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும். 

* குழந்தைகள் கவனம், உள்வாங்கும் திறன் அடிப்படையில் படிக்கும் போது சிறு சிறு இடைவெளிகள் அவசியம்.

* மூளையை சுறுசுறுப்பாக்கும் ஜூஸ் வகைகள், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஸ்நாக்ஸ் வகைகள், இரும்புச் சத்து மற்றும் சிங்க் அதிகம் உள்ள உணவு வகைகள் என உணவு ஆலோசகரின் உதவியுடன் தேர்வுக்கால டயட் வழங்கலாம்.

* தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் விரும்பும் நேரத்தை அவர்கள் ரிலாக்ஸ் செய்துகொள்ள அனுமதிக்கலாம். ஷாப்பிங், விளையாட்டு, பிடித்த உணவு என குழந்தைகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம்.  

தேர்வு

* குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளுக்கு பெற்றோர் ஒத்துழைக்கலாம். பாடங்களின் ஈக்வேஷனை எத்தனை எளிதாக நினைவுக்கு கொண்டு வர முடியும் என்பதை இருவருமாக சேர்ந்து கண்டுபிடியுங்கள். 

* படிக்க வேண்டிய பாடங்களை சேர்த்து வைக்காமல் அவ்வப்பொழுது முடித்து விட உதவுங்கள். படிப்பது உன் கடமை. அதைச் செய்ய தவறாதே என்பதை அவர்களுக்கு பக்குவமாக புரியவையுங்கள்.

* படிக்கும் போது முக்கிய வினாக்களை மன வரைபடமாக மாற்றி வீட்டில் பார்க்கும் இடங்களில் தொங்க விடலாம். படித்து முடிக்க வேண்டிய இலக்குகளையும் இது போல் டேபிளாக மாற்றி பார்வையில் படும்படி வைக்கலாம் படித்து முடிக்கும் போது உற்சாக பரிசுகள் வழங்கலாம். 

* குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது என தடுக்கும் பெற்றோர், அவர்கள் இருக்கும் போது வீட்டில் தொலைக்காட்சியை ஓடவிடக்கூடாது. வீட்டில் வயதானவர்கள் இருப்பின், குழந்தைகள் பள்ளி சென்ற நேரத்தில் மட்டும் தொலைக்காட்சி பார்ப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். 

* காலை அல்லது மாலை நேரத்தில் குழந்தைகளோடு பெற்றோர் வாக்கிங் சென்றால் அவர்கள் மனதில் உள்ள பிரஷரை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளோடு மனம் விட்டு பேச பல பிரச்னைகள் காணாமல் போகும். 

* எதிர்பார்த்த மதிப்பெண் வந்தாலும் வராவிட்டாலும், வாங்கிய மதிப்பெண்ணை வைத்து வாழ்வைத் தொடர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். 

* உடல் நலத்தை பாதுகாப்பதில் கவனம் தேவை. அலர்ஜியான விஷயங்களைத் தவிர்க்கலாம். ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவது, செயற்கை குளிர்பானம், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம். 

* தேர்வு குறித்த மன அழுத்தம், மதிப்பெண் பெறுவதற்கான டிப்ஸ், தேர்வு பயம் தவிர்க்க என தேர்வு தொடர்பான எந்தப் பிரச்னைக்கும், அரசாங்கம் கொடுத்திருக்கும் 104 என்கிற இலவச எண்ணில் அழைக்கலாம். மருத்துவம், தேர்வு தொடர்பான ஆலோசனைகள் நிபுணர்களைக் கொண்டு இந்த எண்ணில் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. 

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை! 

-யாழ் ஶ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close