Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது இருந்தா போதும்... வார சமையல் ரொம்ப ஈஸி! #EasyCooking

சமையல்


ண்டே செம ஜாலியான நாள் இல்லையா? கடிகாரத்தின் தலையில் தட்டி அலாரத்தை மெளனம் செய்து இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள் புரளலாம். மெள்ள எழுந்து பல் தேய்க்கலாம். டிபனையே 12 மணிக்கு ஆற அமர சாப்பிடலாம். மதியம் மட்டன், சிக்கன் என்று புகுந்து விளையாடலாம். ஞாயிறு இரவு எட்டுமணிக்கு மேல் தான் நாளைய சமையல் திட்டம் பற்றிய ஞானம் பிறக்கும். அடுத்தடுத்த நாளில் காலை டிபன், குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ், வீட்டுக்காரருக்கு பிடித்தது என மனம் பரபரக்கும். அடுத்தடுத்த நாட்களில் என்னென்ன சமைப்பது என்று நினைத்தாலே கிறுகிறுக்கும். 

காலை நேர அவசரத்தில் வடித்த சாதத்தோடு தொக்கு, பொடிவகைகள் என சாதத்தோடு பிசைந்து சாப்பிட முடிந்தால் அந்த நேர அவசரத்தை சமாளித்து விடலாம். வீட்டுக்கு திடீர் விருந்தினர் வந்து விட்டாலும் சமாளிப்பது எளிது. ரெடிமேட் பொடிகள் மற்றும் தொக்கு வகைகளை வெளியில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்வதால் பட்ஜெட்டும் பாதுகாக்கப்படும். 

தக்காளி தொக்கு:

தேவையானவை: 
தக்காளி -1 கிலோ
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - தேவையான அளவு
புளி -  சிறிய எலுமிச்சை அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை: 
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்கலாம். வார விடுமுறை நாளில் இதற்கான நேரம் கிடைக்கும். வாணலியில் பாதி எண்ணெய் விட்டு, மிளகாய், தக்காளி, புளியை நன்றாக வதக்கி ஆறவிடவும். ஆறிய பின் இத்துடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மீதி எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்து விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி கலவையில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும். சுவையான தக்காளித் தொக்கு ரெடி. வாரம் முழுவதும் இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி அத்தனைக்கும் மேட்சாகும். அவசர நேரத்தில் கை கொடுக்கும். 


கறிவேப்பிலை தொக்கு:

தேவையானவை: 
கருவேப்பிலை - உருவியது 2 கப்
உளுத்தம்பருப்பு - கால்கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 10

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - கால் கப். 

செய்முறை: 
கறிவேப்பிலையை கழுவித் துடைத்து துணியில் பரப்பி உலர விட வேண்டும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும், கறிவேப்பிலையை அதே எண்ணெயில் சிறிது, சிறிதாக வதக்கி எடுக்கவும். கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊற விடவும். வதக்கிய பொருட்களோடு உப்பு மற்றும் புளியையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறுதீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கவும். கறிவேப்பிலை தொக்கு ரெடி. 


தோசை மிளகாய்ப்பொடி:

தேவையானவை: 
உளுத்தம்பருப்பு - இரண்டு கைப்பிடி அளவு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, 
பெருங்காயம் - சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விடாமல் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தால் இட்லி தோசைப் பொடி ரெடி. தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். 

மிளகு சீரகப் பொடி:சமையல்

தேவையானவை:
மிளகு, சீரகம் - தலா 100 கிராம், 
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகத்தை வறுத்து பொடித்து இத்துடன் பெருங்காயத் தூள் சேர்க்கவும். இந்தப் பொடியை சாதத்துடன் சேர்க்கும் போது உப்பு போட்டுக் கொள்ளலாம். இத்துடன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். 

ரசப்பொடி:
தேவையானவை:
தனியா - 4 கப்
துவரம்பருப்பு, சீரகம், மிளகு - தலா ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 10

செய்முறை
வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்று சேர்த்து மிக்சியில் பொடித்து வைக்கவும். 

ரசம் வைக்கும் போது புளியைக் கரைத்து இந்த ரசப்பொடியுடன் உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு கொதிக்க விட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்து விடலாம். சிறிதளவு  நெய்யில் கடுகு தாளித்து பெருங்காயத் தூர் சேர்த்தால் ரசத்தின் மணமும் கூடும். 

- யாழ் ஸ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close