Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 வயது மகனுக்கு ஐஐடி கோச்சிங் பற்றி கேட்ட தந்தை...கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்கள்! #IITcoaching

ஐஐடி

து தேர்வு காலம். பெற்றோர்களின் முழுகவனமும் பிள்ளைகள் மீதுதான் இருக்கும். பிள்ளைகளைவிட இவர்களுக்குத்தான் அதிகமாகத் தேர்வு டென்ஷன் இருக்கும். சரி, அதன் பிறகாவது குழந்தைகளை ஆசுவாசப்படவிடுவார்களா என்றால், 'மூச்! பேசக்கூடாது. சம்மர் க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், யோகா க்ளாஸ், பாட்டு க்ளாஸ் என ஓய்வில்லாத விடுமுறை காலமாகத்தான் இருக்கும். தங்கள் குழந்தை என்ன படிப்பு படித்தால், அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும், எந்த பல்கலைக்கழகம் சிறந்தது என இணையத்தில் தேடி தகவல்களையும் சேகரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இதன் உச்சம்தான் இந்தச் சம்பவம். 

’கோரா’ என்ற தகவல் பரிமாற்ற இணையத்தளத்தில், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தனது மகனுக்கு, ஐஐடியில் படிக்கவைக்க எந்தப் பயிற்சி மையம் சிறந்தது என்று ஒருவர் கேட்டிருக்கிறார். இதற்கு, நமது நெட்டிசன்கள், “பத்து வயது சிறுவனுக்கு ஐஐடியில் பயிற்சி கேட்பதா?’ எனக் கொந்தளித்து, காரசாரமாக கலாய்ந்து தள்ளியிருக்கின்றனர். அந்த கலாய்ப்பு கமென்ட்டுகளில் சில... 

”உங்கள் மனைவி அடுத்த முறை கருவுற்றால், அவரை ஹெச்.சி.வர்மா, டி.சி.பாண்டே (இருவரும் கல்வியாளர்கள்) இவர்கள் அளிக்கும் கடினமான கணக்குகளுக்குத் தீர்வுகாண சொல்லுங்கள். கருவில் இருக்கும்போதே, சக்ரவியூகத்தை அபிமன்யு எவ்வாறு கற்றுக்கொண்டானோ, அவ்வாறு உங்கள் மகனும் கற்றுக்கொள்ளட்டும்” என அபிஷேக் என்பவர் கூறியிருந்தார். 

”உங்களின் பேரன் பிள்ளை வேண்டுமானால், ஐஐடியில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மகனுக்குக் காலம் தள்ளிப்போய்விட்டது. மன்னிக்கவும்! உண்மையில், உங்கள் மகனுக்காக, நீங்கள்தான் 2007-ம் ஆண்டே பயிற்சி எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், அறிவியலின்படி தந்தையின் அறிவு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவுதான் பிள்ளைக்கு இருக்கும்” - இது விகாஸ் என்பவரின் அறிவியல் கலாய். 

ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பரவலாக நடக்கிறது. இதற்குக் காரணம், பெற்றோர்கள் பிள்ளைகள் மீது இதுபோன்ற அழுத்தங்களைத் தருவதுதான்” என்று பல எடுத்துக்காட்டுகளுடன் அயூஷ் பன்சால் என்பவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். 

இதையெல்லாம், படித்த அந்தப் பெயரில்லாத தந்தை, மிகவும் காட்டமாக, ”நான் என் பிள்ளைக்கு கனவுகளை உருவாக்க வேண்டும். அவனுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என எனக்கு அறிவுரை கூறுபவர்களுக்கு எல்லாம் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அவன் குழந்தை. நல்லது கெட்டது என்ன என்று தெரியாது. அவனுக்கு எது சிறந்தது என்று பெற்றோரே தீர்மானிக்க வேண்டும். மேலும், ஐஐடி என்று சொன்னாலே, அது மிகப்பெரிய கெளரவம். அது எங்கள் குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கும்” என்று கொதித்தவர், “எனக்கு இந்த இணையத்தைப் பற்றி அதிகமாகத் தெரியாது. நன்றி” என்று கூறி விடைபெற்றிருக்கிறார். 

பெற்றோர்கள், பிள்ளைகளின் மேல் தங்களின் கனவுகளைத் திணிப்பது, அது அவர்களுக்கு பெரும் பாரமாக மாறி, அவர்களின் மனநிலையும் உடல்நிலையும் பாதிக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் கண் முன்பு நிகழ்ந்துள்ளன. ஆனாலும், இந்த நவீன உலகத்தின் வேகத்துக்குத் தனது பிள்ளையும் ஓடவேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள், பிள்ளைகள் கனவு காண்பதற்கு முன்பே, அவர்களின் கண்ணைகட்டி, ‘கல்வி காட்டில்’ ஓடவிடுவது கவலை அளிக்கிறது.

- எம்.ஆர்.ஷோபனா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close