Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதாவுக்காக ஐ.நா சபை முன் போராடிய உலகத் தமிழர்கள்!

அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் நீட்டுக்கு எதிராகவும் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பு அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

அனிதாவின் மரணத்துக்குக் காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், அனிதாவுக்கு நீதி கேட்டும், நீட் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசின் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளுடன்கூடிய போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்த நிலையில் தற்போது, உலகம் முழுவதும் நடந்து வருகிறது.

புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும் தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்னைகளின்போதும் தங்களது ஆதரவையும் அதற்கான முன்னெடுப்பையும் அமெரிக்கத் தமிழர்கள் செய்துகொண்டே வருகின்றனர். ஈழம், ஜல்லிக்கட்டுப் போராட்டங்களைப்போல அனிதாவின் மரணமும் அமெரிக்கத் தமிழர்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியது. இதன் விளைவாக அமெரிக்கத் தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் முதல்கட்டமாக அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில், அனிதாவுக்கு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்கள் அஞ்சலியைச் செலுத்தியதோடு நீட்டுக்கு எதிரான முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர். நினைவஞ்சலிக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் வாஷிங்டன், சிகாகோ, நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, அட்லாண்டா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் முன்பு அமைதிப்  போராட்டங்கள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பு நீட்டுக்கு எதிரான அமைதிப் போராட்டம் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்போராட்டம் நடைபெற்றது. நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, டெலவேர், விர்ஜினியா போன்ற மாகாணங்களிலிருந்து ஏராளமான தமிழர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்திய தேசியக் கொடியுடன், அனிதாவின் முகச்சுவடு அணிந்துகொண்டு நீட்டுக்கு எதிராகவும் உயிர் துறந்த அனிதாவுக்கு நீதி வேண்டும் என்றும் பல கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.

"அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும் வலிந்து திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை அறவழியில் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தோழர்களுக்கு ஆதரவாக நிற்போம்" என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

முன்னதாக, "நீட் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்; கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்" போன்ற முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை செப்டம்பர் 22-ம் தேதி வாஷிங்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரக அதிகாரியை அமெரிக்கத் தமிழர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். வரும் நாள்களில் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளிடமும் அவர்கள் மனு அளிக்கவுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close