Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலைவாய்ப்புகளை பறிக்கும் ஆட்டோமேஷனும் கடன் பொருளாதாரமும்..!

Chennai: 

"தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கே அதிகளவில் செலவு செய்துவருகிறார்கள். மேலும், இவர்கள் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதால், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் எட்டாக்கனியாகும்" என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்ஸ்டியூடிட் ஃபார் நியூ எக்னாமிக் திங்கிங் (Institute for New Economic Thinking) அமைப்பின் தலைவரும், இங்கிலாந்து நிதி சேவை அமைப்பின் முன்னாள் தலைவருமான அட்வைர் ​​டர்னர்.

வேலை வாய்ப்பு

பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாடியபோது இந்தத் தகவலை தெரிவித்து இருக்கிறார். 

"இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் பெரிய அளவில் ஆட்கள் தேர்வு இருக்காது. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 17.7 மில்லியன். இதுவே, 2017-ம் ஆண்டில் 17.8 மில்லியன், 2018-ம் ஆண்டும் 18 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணக்கிட்டிருக்கிறது ஐ.நா. சபையின் தொழிலாளர் நலப் பிரிவு. 

2017-18 நிதி ஆண்டில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 3.4% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவருகிறது. 2050-ம் ஆண்டில் வேலை செய்யத் தயாராக உள்ளவர்களின் எண்ணிக்கை 740 மில்லியனில் இருந்து 1.3 பில்லியனுக்கு உயரக்கூடும். எதிர்காலத்தில் இந்தியாவில் வேலை தேடுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை ஏராளமான வேலைவாய்ப்பினை வழங்கி இருந்தாலும், ஒரு சமநிலையற்ற சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறது" என்கிறார் அட்வைர் ​​டர்னர். 

"வளர்ந்த நாடுகளில் சம்பள பணவீக்கம் அசாதாரணமான அளவுக்குக் குறைவாகவே இருக்கிறது. அங்கு சம்பள அழுத்தம் எதுவும் இல்லை. ஆனால், இந்தியா வளரும் பொருளாதாரத்துக்கும், அதிகரித்து வரும் பணியாளர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறது. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவில் பாதிப்பு அதிகமாகவே இருக்கும்" என்று வேலைவாய்ப்புச் சந்தையின் நிலை குறித்து பேசிய அட்வைர் டர்னர், உலகப் பொருளாதார நிலை குறித்தும், இந்தியப் பொருளாதார நிலை குறித்தும் விரிவாகப் பேசி இருக்கிறார்.

"இந்தியாவில் பெரிய இன்டஸ்ட்ரியல் நிறுவனங்களே அதிகளவில் கடன் வாங்குகிறார்கள். இது முன்நோக்கிய பொருளாதார நிலையைக் காட்டுகிறது. மேலும் நம்பகத்தன்மையும் அதிகம். இந்திய வங்கிகள் இதர விஷயங்களுக்கு எல்லாம் நல்லது கெட்டது என்று முடிவெடுக்கும் வேளையில் ரியல் எஸ்டேட் அபரிதமான வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை கண்டுகொள்ளவில்லை. வங்கித் துறையில் கடன் சார்ந்த அடிப்படை விஷயங்களுக்குத் தீர்வே இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் பெரிய அளவில் கடன் திருப்பிச் செலுத்தாமல் போனால் பிரச்னை பெரியதாகும். மேலும் இந்த பிரச்னைக்கு திறந்த வெளிச் சந்தையால் தீர்வு காணமுடியாது. திறந்தவெளி சந்தையில் கடன்பெறுபவர்களும், கடன் வாங்குபவர்களும் ஒரு குழுவாகச் செயல்பட்டு அவர்களுடைய சொந்தத் தூண்டுதலின் பெயரில் பிரச்னையை ஒரு மாதத்துக்கோ அல்லது ஒரு வருடத்துக்கோ தள்ளிப்போடுகிறார்கள். இந்த நிலையைத் தவிர்க்க வேண்டும். 

அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருக்கிறது. 1950-ம் ஆண்டில் இருந்ததைவிட 2007-ம் ஆண்டில் உலக ஜிடிபி 170% வளர்ச்சி அடைந்திருந்தது. ஆனால், 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஐந்து சகாப்தங்களுக்கு முந்திய நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது. 

ரியல் எஸ்டேட் துறைக்குக் கடன்மேல் கடன் கொடுத்தது அதன் மதிப்பைப் பெரிய அளவில் உயர்த்தியதே இந்த வீழ்ச்சிக்கு  முக்கிய காரணம். ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியைப் பார்த்த மக்கள் அதிகளவில் கடன் வாங்கினார்கள். மதிப்பு உயர்கிறதே என்று வங்கிகளும் கடன் கொடுத்தன. ஆனால், ஒரு கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறி, வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

கடன் சந்தை பொருளாதாரத்தை எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறித்து உலகளாவிய பார்வை அவசியம். உலக பொருளாதாரத்தில் கடன் அளவு குறையவில்லை. ஆனால், கடன் மூலம் ஜி.டி.பி-யின் பங்களிப்பு அதிகரித்து இருக்கிறது. குறைந்த வட்டி விகிதம்தான் நிலைத்த தன்மையை ஏற்படுத்தும் என்றாலும் மிகக்குறைந்த வட்டி விகிதம் மக்களை மேலும் கடன் வாங்கவும், இதன்மூலம் எதிர்காலத்தில் பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 

தற்போது அமெரிக்க ஃபெடரல் வங்கியும், பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஆனால், ஜப்பானில் வட்டி விகிதம் குறைந்து வருகிறது. 2020-ம் ஆண்டில் ஜப்பானில் வட்டி விகிதம் பூஜ்யமாக மாற வாய்ப்பு இருக்கிறது. 

தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 2.5% யும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் 1% என்றும் இருக்கிறது. இது வரலாற்றிலேயே குறைந்த வட்டி விகிதம். வட்டி விகிதத்தை உயர்த்துவது பொருளாதார மந்த நிலையில் வெளியே வருவதற்கு உதவும் என்று சொல்லமுடியாது. ஆனால், எப்படி பொருளாதார மந்தநிலையை இனிவரும் காலங்களிலும் சமாளிக்கப்போகிறோம் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் இருக்கிறோம் என்பதுதான் நிதர்சன உண்மை. 

அதிக முதலீடு இல்லாமல் அதிக பொருளாதாரத்தைச் சேர்க்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பெரிய அளவில் ரியல் எஸ்டேட் அல்லது நுகர்பொருளுக்காக கடன் வாங்குகிறார்கள். இது ஆச்சர்யப்படவேண்டிய விஷயமில்லை என்றாலும், பொதுமக்கள் ஆபத்துகளை அங்கீகரித்தும், கடன்களை நிர்வகிக்கவும் தெரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய அடிப்படை வருமானம் குறித்தும், பொதுத்துறையான சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் நகர மேம்பாடு குறித்தும், எல்லாவிதமான ஊதியம் பெறுபவர்களும் வாழ்க்கைக்குத் தகுந்தாற்போல் என்ன செய்கிறோம் என்பது குறித்தும் இளைஞர்கள் சிந்தனை செய்ய வேண்டும்" என்கிறார் அட்வைர் ​​டர்னர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close