Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`என் பாடல்களின் நீண்ட வடிவமே என் சிறுகதைகள்' - நோபல் பரிசு வென்ற கசுவோ இஷிகுரோ!

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள கசுவோ இஷிகுரோவுக்கு ஆறு வயதானபோது, ஜப்பானில் இருந்து அவரின் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. லண்டனில் உள்ள தேசிய கடலியல் கல்லூரியில் வேலைபார்க்க வந்த அழைப்பை, அவரின் தந்தை ஷிஷோ இஷிகுரோ ஏற்றுக்கொண்டதையடுத்து, அந்த இடம்பெயர்வு நடந்தது. அது தற்காலிக வேலை என்றாலும், அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலியல் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அது உதவும் என கசுவோவின் தந்தை நினைத்தார். ஆனால், அந்தக் குடும்பம் நிரந்தரமாக அங்கேயே தங்கியது.  ``நான் ஜப்பானிய கலாசாரம்கொண்ட வீட்டில் வளர்ந்தாலும், என் அளவில் ஆங்கிலேயனாகத்தான் நேர்படப் பேசும் குணங்களுடன் வளர்ந்தேன்" என்று தன் பால்யம் குறித்து பேசுகிறார் கசுவோ. ஐந்து வயதில் பியானோ, 15 வயதில் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கப்பழகிவிட்டாலும், அவற்றை தன் தனிப்பட்ட பொழுதுகளைப் போக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.   

நோபல் பரிசு வென்ற இஷிகுரோ

கசுவோ, பள்ளி முடித்தவுடன் கல்லூரியில் சேரவில்லை. தன் நண்பர் ஒருவருடன் அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். ஒரு வருடம் கழித்து வந்து கெண்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ஓராண்டு படித்தபிறகு, மீண்டும் விடுப்பு எடுத்து சேவை மையம் ஒன்றில் தன்னார்வலராகச் சேர்ந்துவிட்டார். அங்கு சேவை செய்த அனுபவம், இலக்கியப் பணிகளில் அவர் ஈடுபடுவதற்கு உதவியாக இருந்தது. அதன்பிறகு மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பி ஆங்கிலம் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 

படிப்பை முடித்த பிறகு வீடு இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சமூகப் பணியாளராக வேலைசெய்தார். அங்கு சக பணியாளராக இருந்த லோர்னாவை பின்னர் மணந்துகொண்டார். இவர்களின் ஒரே மகள் நவோமி. இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. 

அவரின் இலக்கியப் பணி 1980-ம் ஆண்டு தொடங்குகிறது. `புதிரான சில நேர சோகங்கள்' என்ற அவரின் முதல் சிறுகதை, அந்த ஆண்டுதான் வெளியானது. அதன்பிறகு அவரின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றும், அதிக விருதுகளைப் பெற்றதுமான `மலைகளின் மீதான கண்ணோட்டம்' 1982-ம் ஆண்டு வெளியானது. 

இவரின் இரண்டாவது நாவலான `மிதக்கும் உலகின் கலைஞன்' 1986-ம் ஆண்டில் வெளியானது. புக்கர் பரிசுக்குத் தேர்வான இறுதிப்பட்டியல் வரை இடம் பிடித்தது இந்த நாவல். முதல் நாவலுக்கும் இரண்டாவது நாவலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று டிவி தொடர்களுக்கும் நாடகங்களுக்கும் வசனம் எழுதினார்.  மூன்றாவது நாவலான `ஒரு நாளின் மிச்சங்கள்' 1989-ம் ஆண்டு வெளியானது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது. அதைத் தொடர்ந்து வெளியான அவரின் மூன்று நாவல்களும், சிறப்பான விமர்சனங்களும் எதிர்வினைகளும் பெற்றன; பல்வேறு விருதுகளுக்கும் தேர்வாகின. அதேபோல் இவரின் சிறுகதைகளும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. இங்கிலாந்து ராணியின் உயரிய விருதையும், பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியே விருதையும் பெற்றிருந்த கசுவோ, தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார். பாடல் எழுதும் வழக்கம் உள்ள கசுவோ, தன் பாடல்களின் மற்றொரு வடிவம்தான் தன் சிறுகதைகள் எனத் தெரிவித்திருந்தார். 

உலக இலக்கிய விருதுகளில் மிக உயரிய விருதைப் பெற்றுள்ள கசுவோவுக்குப் பிடித்தது `அகதா கிறிஸ்டி'யின் மர்மக்கதைகள்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close