Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூமிக்கு காய்ச்சல் வந்தால் என்னவாகும்? ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

புவி வெப்பமடைதல் - இது ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்தும் சொல்லாகத்தான்  காணப்படுகிறது.  படித்தவர்களே கூட புவி வெப்பமடைதல் குறித்து தெளிவுறப் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனை தரும் உண்மை. "அதெப்படிங்க பூமி தானாச் சூடாகும்?" என்று விளையாட்டாகக் கேட்கும் பலருக்கும் இதன் விவகாரம் புரிந்தால் விளையாட்டுத்தனம் காணாமல் போய்விடும்.

புவி வெப்பமடைதல் என்றால் என்ன?

மிக எளிமையாகப் புரியும்படி சொன்னால், நம் உடலின் வெப்ப நிலை 98 டிகிரி ஃபேரன்ஹீட்டைத் தாண்டி அதிகரித்தால் நமக்கு எப்படி காய்ச்சல் ஏற்படுகிறதோ அப்படி பூமியின் வெப்ப நிலை அதிகரித்து, நம் வாழ்விடமான இந்தக் கோளுக்கு ஏற்பட்டுள்ளக் காய்ச்சலே புவி வெப்பமடைதலாகும்.



பூமிக்குக் காய்ச்சலா?

ஆம். பூமி ஓர் உயிருள்ளக் கோள். நாம் சுவாசிப்பதைப் போலவே மிக நிதானமாக மூச்சை இழுத்தும் வெளியேற்றியும் கொண்டிருக்கிறது இந்தக் கிரகம். ஒரு மூச்சை இழுத்து வெளியேற்றுவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டாகிறது பூமிக்கு. விளக்கிச் சொன்னால், பூமி, சூரியனிடமிருந்தும், எரிமலைகளிடமிருந்தும், மற்றும் அண்டக் கதிர்வீச்சுகளின் மூலமாகவும் கரியமில வாயுவை (CO2) உள்வாங்கிக் கொள்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் மரங்களின் மூலம் வெளியேற்றப்படுகிற பிராண வாயுவை(O2)
வெளிக்கொணர்ந்து,  உள்வாங்கியக் கரியமில வாயுவைச் சமன்படுத்துகிறது. நம் நுரையீரலைப் போல, பெருங்கடல்களும் காடுகளும் பூமியின் கரியமில வாயுவைச் சுத்திகரித்து வெளியேற்றுகின்றன.

நம் நுரையீரலால் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவை விட அதிகமாகக் கரியமில வாயுவை உள்ளிழுத்தால், மூச்சுத் திணறி நாம் இறந்துபோவோம். அதேதான் தற்போது பூமிக்கு நடந்து கொண்டிருக்கிறது. பூமியால் உள்ளிழுத்துச் சமன்படுத்தக் கூடிய அளவைவிட மிக அதிகமான அளவு கரியமில வாயுவை நாம் பூமியிடம் தள்ளிக் கொண்டிருக்கிறோம். பூமி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.


இதற்கென்ன ஆதாரம்?

பெருங்கடல்கள் தன்னுள் இறங்குகின்ற கரியமில வாயுவை,  தாதுப் பொருட்களாக மாற்றித் தேக்கி வைத்துக்கொள்கின்றன. பூமியின் வடதுருவத்திலிருக்கும் பனிப்பாறைகளும் அத்தகையத் தன்மை கொண்டவையே. எனவே வட துருவத்தின் பனிப்பாறைகளை அகழ்ந்து ஆய்வு செய்தால்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் சுற்றுச்சூழலில் படிந்திருக்கும் கரியமிலத்தின் அளவு மிகத்துல்லியமாகத் தெரியும்.

அவ்வாறு ஆய்ந்து பார்க்கையில் ஒரு திடுக்கிடும் உண்மைத் தெரிய வந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முன்பு வரை, இத்தகையக் கரியமில வாயுவின் படர்வு, 1/300 விழுக்காடு; அதாவது ஒரு விழுக்காட்டின் முன்னூறில் ஒரு பங்கு. தற்போது அதன் படர்வோ 40 விழுக்காடு. 12000 மடங்கு வேகத்தில் நம் சுற்றுச் சூழலில் கரியமில வாயுவைக் கடந்த 150 வருடங்களாக கலந்து வருகிறோம் நாம்.

சரி. அதனாலென்ன?

இதனால் பூமியின் ஓசோன் கிழிந்து, பசுமையக வாயுக்கள் சுற்றுச்சூழலில் நிறைகின்றன.
பூமி, சூரியனிடமிருந்து பெறுகின்ற ஒளிக்கற்றைகளில், ஆற்றல் தரும் கதிர்களோடு சேர்த்து, ’அல்ட்ராவயலட்’, ‘இன்ஃப்ராரெட்’ போன்ற பல்வேறு தீங்கு விளைவிக்கும் கதிர்களும் இருக்கின்றன. அவற்றை நேரடியாக நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவேதான் இயற்கையின் அமைப்பில் பூமியைச் சுற்றியப் பாதுகாப்பு வளையம் போல ‘ஓசோன்’ படலம் (O3) இருக்கிறது.

இது புற ஊதாக்கதிர் போன்றவறை வடிகட்டி நமக்குத் தேர்ந்த, மிதமான சூரிய ஒளியை அனுப்புகிறது. இப்படி வடிகட்டி அனுப்பப்படுகிற வெப்பத்தைப் பூமி உள்வாங்கியபின், முற்றிலும் பிரதிபலித்து திருப்பி அனுப்பிவிடுகிறது. அவ்வாறு மொத்த வெப்பமும் திருப்பி அனுப்பப்பட்டால் பூமி ஒரு பெரும் பனிப்பந்தாகவேதான் இருக்க முடியும். ஆகவே அவ்வாறு ஆகவிடாமல், பூமி திருப்பி அனுப்புகிற வெப்பத்தில், ஒரு கணிசமான அளவைத் தடுத்து பூமியிலேயே தங்க வைப்பவைதான், கார்ன்டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற பசுமையக வாயுக்கள்.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ - இதுதான் இன்றைய பசுமையக வாயுக்களின்
நிலை. நம் பூமியிலுள்ள அத்தனை எரிமலைகளின் வெடிபொருள் வெளியேற்றத்தைச் சேர்த்தால், 500 மில்லியன் டன் கரியமில வாயு ஆகும் என்று கணக்கிட்டிருக்கின்றனர் அறிவியலாளர்கள். ’இதை விடவா நாம் அதிகக் கரியமில வாயுவை வெளியேற்றிவிடப் போகிறோம்?’ என்ற கேள்வி எழலாம்.

மயங்கி விழுந்து விடாமலிருக்க, அருகிலுள்ள எதையாவது பிடித்துக் கொள்ளுங்கள். ஆம். இந்த 500 மில்லியன் டன் என்பது நாம் வெளியேற்றுகின்ற 30 பில்லியன் டன் கரியமில வாயுவில் 2 விழுக்காடு கூடக் கிடையாது. இதன் மூலம் பருவ நிலைகள் மாறி, பனிப்பாறைகள் உருகி, வெள்ளப் பெருக்கெடுத்து, பூமி வாழ்வாதாரமற்றக் கோளாக, புதனைப் போல், வெள்ளியைப் போல் மாறிவிட அநேக வாய்ப்புகள் உண்டு.

எல் நினோ - ஓர் எச்சரிக்கை

ஸ்பானிய மொழியில், குழந்தை எனப்பொருள்படும் இந்த ’எல் நினோ’ நிஜமாகவே வானுக்கும் கடலுக்கும் பிறக்கும் குழந்தைதான்.

தொடர் கரியமில சேகரிப்புக்காரணமாக, கிழக்குப் பசிபிக் கடலில் ஏற்படும் ஒரு வெப்பச் சுழல் கூட்டலைகளுக்குத்தான் எல் நினோ என்று பெயர். இந்தக் கடல் மாறுபாட்டின் மூலமாக நீரிலிருந்து நிலம் நோக்கி வருகிற காற்றின் அடர்த்தி மாறிப்போய், பருவ நிலைகள் கடுமையான மாற்றத்திற்குள்ளாகும்.

2014, 2015, 2016 ஆம் ஆண்டுகள் பூமியின் வடபாதியில் அதீதக் குளிருடனும், தென்பாதி அதீத வெப்பத்துடனும் காணப்படும். இது கடந்த 72 ஆண்டுகளாகப் பூமி காணாத மாற்றமாகும். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே பசிபிக் பெருங்கடலின் தலையைச் சுற்றி மூன்று பெரும்புயல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலை மாறாது தொடர்ந்தால், பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் 58 மீட்டர் உயரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நம்மால் என்ன செய்ய முடியும்?

இயற்கையை எதிர்த்துப் போரிட்டு, ஒரு போதும் நம்மால் வெல்ல முடியாது. இன்றைய தேதியில் புவி வெப்பமடைதலை இதே நிலையில் நிறுத்தி உயர விடாமல் தடுக்க, ஆண்டொன்றுக்கு, 12 லட்சம் கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள். கவிநடையில் சொன்னால், மரங்கள்தான் ஓசோன் ஓட்டையைத் தைக்கும் ஊசிநூல்.

மேலும், உலக நாடுகளை ஆளுகின்ற அரசாங்கங்கள் எல்லாம், உலகின் இந்த அவசர நிலையைப் புரிந்து கொண்டு, நிலக்கரியையும் மற்ற புராதான எரிபொருள்களையும் எரிப்பதைத் தவிர்த்து, சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி, மின்சாரத்தையும் மற்ற உந்து சக்திகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் ஆள்வதற்கும், வாழ்வதற்கும் இந்த பூமி இருக்காது என்பது காலம் உறுதியாக நிர்ணயிக்கும் விதி.

ச.அருண்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ