Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம்: ஜப்பானுடன் இந்தியா கூட்டு சேர்வது தவறு என்கிறது சீனா!

பெய்ஜிங்: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதற்காக ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுடன் இந்தியா கூட்டுச் சேர்வது மிகப்பெரிய தவறு என்று சீன அரசுப் பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' நாளிதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன. சுழற்சி முறையில் 15 நாடுகள் தாற்காலிக உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தங்களுக்கு நிரந்தர இடம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சீன அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஷாங்காய் பன்னாட்டு கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் லீ ஸாங்கி குளோபல் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள கட்டுரையில், ''ஐ.நா. அமைப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 70 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்தச் சூழலில் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் பலமாகவே ஒலிக்கின்றன. குறிப்பாக, ஜி-4 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் முனைப்பாக உள்ளன.

கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தின்போது, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை மாற்றி அமைப்பது தொடர்பான வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கேட்கும் இந்தியாவின் முயற்சிக்கு ஊக்கம் கிடைத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மையைச் சொல்வதானால், அந்த வரைவில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் விவாதத்துக்கு வருவதற்கே நீண்ட காலமாகிவிடும். அதே நேரம், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு சீனாதான் மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்று இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் முயற்சிக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதும் இந்தப் புகாருக்கு காரணமாகும். ஆனால், பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுடன் இந்தியா கூட்டுச் சேர்வதுதான் மிகப் பெரிய தவறாகும். ஏனெனில், அந்த 3 நாடுகளும் பிராந்திய அளவில் மிகப் பெரிய எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன. அதேவேளையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என அமெரிக்கா ஒருமுறை வலியுறுத்தியது. சீனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் அமெரிக்கா தங்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்பதை இந்தியாவும் உணர்ந்திருந்தது" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்