Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியம் அளிக்க தயார் என்கிறார் சரத் பொன்சேகா!

கொழும்பு: விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்க, சர்வதேச நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டால், அதன் முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க தயார் என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்து உள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அல் உசேன்,  சமீபத்தில் ஜெனீவாவில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கை நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச நீதிபதிகள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசு, உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று கூறி உள்ளது. இந்த வரைவு அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வருகின்ற 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இந்த வரைவு அறிக்கையின் நகலை வடக்கு மாகாண கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவரின் அறிக்கை வரவேற்கத்தக்கது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியின் சிறந்த தொடக்கமாக இந்த அறிக்கை அமைந்து இருப்பதாகவும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இந்த அறிக்கையை படித்துப் பார்த்து, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும்" கூறினார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத்துக்கு தலைமை தாங்கியவர், அப்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா. இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், ''சரண் அடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்ய அப்போதைய அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவரின் அறிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, ''போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டால் அதில் ஆஜராகி நான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளேன்" என்று கூறி உள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு முன் சரத் பொன்சேகா ஆஜராகி சாட்சியம் அளிக்கும் பட்சத்தில், கோத்தபய ராஜபக்சேவுக்கு சிக்கல் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ