Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மிஸ்டர். மோடி... வெல்கம் டூ சிலிக்கான் வேலி!'- யு டியூப்பில் சுந்தர்பிச்சை வெளியிட்ட வீடியோ

பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா சபையில் நடைபெற்ற நிலையான பொருளாதார வளர்ச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே பேசிய அவர்,  மீடியா ஜாம்பவான் ராபர்ட் முர்டோக் உள்ளிட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். 

              
இந்த சந்திப்புக்கு பிரபல 'ஃபோர்ச்சூன்' இதழ் ஏற்பாடு செய்திருந்தது. இதில், அமெரிக்காவின் 50  நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். போர்ட் நிறுவனத் தலைவர் மார்க் பீல்ட்ஸ், ஐ.பி.எம். தலைமை செயல் அதிகாரி ஜின்னி ராமட்டி, பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி உள்ளிட்டவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

இவர்களிடையே பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் தொழில் தொடங்கவுள்ள எளிதான வாய்ப்புகள், விரைவான முடிவு எடுக்கும் திறமை வாய்ந்த வெளிப்படையான அரசு காத்திருப்பதாக தெரிவித்தார். உலகம் முழுக்க வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் வெளிநாட்டு முதலீடு 40 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும்  அவர் கூறினார்.

இந்நிலையில் மோடி,  நாளை கலிபோர்னியாவிலுள்ள சிலிக்கான் வேலி பகுதிக்கு செல்கிறார். அங்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாஸ் ஐகானிக் நிறுவனத் தலைவர் எலான் முஸ்க் ஆகியோரை சந்திக்கிறார்.

இவர்கள் தவிர மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதள்ளா, அண்மையில் கூகுள் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை , அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசுகிறார்.

மோடியின் சிலிக்கான் வேலி வருகையை முன்னிட்டு, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, அவரை வரவேற்று யு டியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சுந்தர்பிச்சை  கூறியிருப்பதாவது:

'' பிரதமர் மோடியின் சிலிக்கான் வேலி வருகை  இந்தியர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும். இந்தியாவுக்கும், சிலிக்கான் வேலிக்குமிடையேயான உறவு வலுவானது. இந்தியாவின் ஐ.ஐ.டி உற்பத்தி செய்யும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகள், உலகில் மறுமலர்ச்சிக்கு வித்திடக் கூடியவை. உலகின் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான மூளையை உற்பத்தி செய்யும் திறமை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மோடியின் கனவை நனவாக்குவோம் '' எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிலிக்கான் வேலி அமைந்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களின் பலவற்றின் தலைமையகங்கள் இங்குதான் உள்ளது. அமெரிக்காவின் 2வது பெரிய நகரான 'ஹாலிவுட் புகழ்' லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரங்கள் இந்த மாகாணத்தின் முக்கிய அடையாளங்கள்.

கலிபோர்னியா மாகாணத்துக்கு இதற்கு முன் இந்திய பிரதமர்கள் இருவர் சென்றுள்ளனர். 1978ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாயும், 1982 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழித்து இப்போது பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 27ஆம் தேதி, இங்குள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அதன் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க்குடன் இணைந்து டவுன்ஹால் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் பயனாளர்களிடையே உரையாற்றுகிறார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ