Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஏற்கமுடியாது: ரணில் திட்டவட்டம்!

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஏற்க முடியாது என்று இலங்கை பிரதமர் ரணில் விகரம சிங்கே திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே, கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்தப் போரில், அப்பாவித் தமிழர்கள் சுமார் 40,000 பேரை இலங்கை ராணுவத்தினர் கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இலங்கை அரசின் இந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா விசாரணைக் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையிலும் இதுபோன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எனது அரசு இலங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். எங்கள் அரசியலமைப்பு சாசனப்படி, வெளிநாட்டு நீதிபதிகள் எங்கள் நாட்டை இயக்க முடியாது. வெளிநாட்டு நீதிபதிகள், எங்கள் நாட்டில் செயல்படுவதை அரசியல் சாசனம் அனுமதிக்காது.

அதனால், உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்ய முடியாது என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை அரசு சார்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா எடுத்துரைப்பார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செய்த பெரிய தவறுகளால் சர்வதேச விசாரணையை சந்திக்க வேண்டிய சூழல் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை சரியாக கையாண்டதால், கடந்த ஜனவரி முதல் முன்னாள் அதிபர் ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே ஆகிய இருவரையும் காப்பாற்றி வந்தேன். இலங்கையை சர்வதேச விசாரணை நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது ராஜபக்சே செய்த மிகப்பெரிய தவறு" என்று தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ