Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார விஷயங்களில் இணைந்து செயல்பட மோடி, ஒபாமா முடிவு!

நியூயார்க்: இந்தியா, அமெரிக்கா இடையே பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார விஷயங்களில் இணைந்து செயல்பட பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முடிவு செய்துள்ளதாக கூட்டாக அறிவித்து உள்ளனர்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நியூயார்க்கில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது பயங்கரவாத அச்சுறுத்தல், சர்வதேசப் பொருளாதார மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின் இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, ''ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஒபாமாவிற்கு நன்றி. தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் சூழ்நிலையில், அதன்மூலம் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்வதிலும் நிபுணத்துவம் பெற வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், இணையவழிக் குற்றங்கள், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது என இந்தச் சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ராணுவம், ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஆகிய துறைகளில் தற்போது இருந்து வரும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டும் வகையில், கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களின் மறுவாழ்வுக்கு உதவுவதிலும் அமெரிக்காவும், இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படும்" என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது, ''அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் உலகளாவியக் கண்ணோட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். பொதுவான கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு பாராட்டத்தக்கது. இதுதவிர பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பு அளிப்பதை உறுதிப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஒருங்கே எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது பருவநிலை மாறுபாடு. இதனை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது குறித்தும் விரிவாகப் பேசினோம். சுத்தமான எரிசக்தி குறித்து இந்தியா கொண்டுள்ள உறுதி அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ