Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்து நெகிழ வைத்த 11 வயது மகன்!

நியூயார்க்: பிரசவ வலியால் கதறித்துடித்து கொண்டிருந்த தாயின் அருகில் இருந்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து அவர் குழந்தை பெற்றெடுக்க உதவியாக இருந்துள்ளான் அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியேட்டா பகுதியை சேர்ந்தவர் கென்யார்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வீட்டில், அவருடைய 11 வயது மகனை தவிர யாரும் துணைக்கு இல்லாததால் அவர் வேதனையால் துடிதுடித்துப் போயுள்ளார்.

அந்த நேரத்தில், பிரசவ வலியால் தனது தாய் கதறி துடித்துக்கொண்டிருப்பதை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஜேம்ஸ் டியூக்ஸ் என்ற 11 வயது சிறுவன் பார்த்திருக்கிறான். சற்றும் தாமதிக்காத அந்த சிறுவன், உடனடியாக ஓடிச்சென்று தன் தாய் கென்யார்ட்டாவின் சுகப்பிரசவத்துக்கு உதவி இருக்கிறான். இதையடுத்து கென்யார்டாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து ஜேம்ஸ் டியூக்ஸ் தனது தாய் மற்றும் தம்பிக்கு அரவணைப்பாக இருந்ததோடு மட்டுமின்றி, அவசர சிகிச்சை மையத்துக்கும் போன் செய்து இந்த தகவலை தெரிவித்திருக்கிறான்.

'நாங்கள் புறப்பட்டுவிட்டோம், இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வந்துவிடுவோம். அதுவரை பிறந்த குழந்தையை பத்திரமாக, கதகதப்பாக பாதுகாத்து வைத்திரு' என்று டாக்டர்கள் கூறிய அறிவுரையை கேட்ட ஜேம்ஸ் டியூக்ஸ், வீட்டில் கிடந்த டவல்களை எடுத்து, அதில் தனது தம்பியை கிடத்தி மூடி கதகதப்பூட்டி வைத்திருந்திருக்கிறான். சற்று நேரத்தில் அங்கு விரைந்து வந்த அவசர உதவி மருத்துவர்கள், தாயையும், பிறந்த குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கென்யார்டா கூறும்போது, ''என் மகன் தைரியமானவன். வலியாலும், வேதனையாலும் நான் துடித்தபோது அவன் சற்றும் மனம்தளராமல் அந்த சூழ்நிலையை மிக சரியாக கையாண்டான். அவனை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்" என்று பெருமிதத்தோடு ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்.

அவருக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டாக்டர் எரிக் பிரவுன், "நான் இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தை கேள்விப்பட்டதில்லை. அந்த வகையில் ஜேம்ஸ் சிறப்பானவன் என்றே கருதுகிறேன். குழந்தை நன்றாக இருக்கிறது. குட்டி டாக்டர் தனது தம்பியை மிகவும் அக்கறையாக பார்த்து கொள்கிறார்" எனக் கூறினார்.

வரும்காலத்தில் பெரிய கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்ற தனது எதிர்கால திட்டத்தை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாக கூறும் ஜேம்ஸ் டியூக்ஸ்," நான் நன்றாக படித்து, பெரிய மருத்துவராக வர விரும்புகிறேன்" என்று கூறி உள்ளான்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ