Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்காளதேசத்தில் ஜப்பானியர் சுட்டுக்கொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு!

டாக்கா: வங்காளதேசத்தில் ஜப்பானியர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஐ.எஸ். தீவிரவாத குழு பொறுப்பேற்று உள்ளது.

வங்காளதேசத்தில் சமீபகாலமாக தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. இணையதள கட்டுரையாளர்கள் 4 பேர் ஒருவர் பின் ஒருவராக அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28 ஆம் தேதி, தலைநகர் டாக்காவில் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இத்தாலியை சேர்ந்த தொண்டு நிறுவன மேலாளர் செசாரே டாவெல்லா (50) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் அங்கு ஜப்பானியர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹோசி குனியோவை மார்பு, கை, கால்களில் சரமாரியாக சுட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்த்தி விட்டு தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். ராங்க்பூரில் தங்கி இருந்திருக்கும் நண்பரை பார்ப்பதற்காக ஹோசி குனியோ வந்தபோது இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹோசி குனியோ பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளது என்று அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. ஆனால், வங்காளதேசம் அரசு இதனை மறுத்துள்ளதுடன், இது தனிப்பட்ட சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஐ.எஸ். மோகம் கொண்டவர்களை இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வங்காளதேச அரசு மறுக்கவும் இல்லை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ