Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு விப்ரோ நிறுவனம் மீது பெண் ஊழியர் வழக்கு!

லண்டன்: 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு விப்ரோ நிறுவனம் மீது பெண் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாலியல் ரீதியான மன உளைச்சல், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நியாயமில்லாத பணிநீக்கம் போன்ற காரணங்களால் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் 3வது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. விப்ரோவின் லண்டன் அலுவலகத்தில் விற்பனை மற்றும் சந்தை மேம்பாடு பிரிவின் மேலாளராக ஸ்ரேயா உகில் என்கிற பெண் பணியாற்றினார்.

இந்நிலையில், 10 லட்சம் பவுண்ட் இழப்பீடு (இந்திய மதிப்பு 9 கோடியே 96 லட்சத்துக்கு 84 ஆயிரத்து 789 ரூபாய்) கேட்டு லண்டன் வேலைவாய்ப்பு தொழில் குறைதீர்ப்பு மையத்தில் ஸ்ரேயா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், விப்ரோ நிறுவனம் பெண் பணியாளர்களை கடுமையாக சுரண்டுகிறது என்றும், நிறுவனத்தில் பெண் பணியாளர்களை மோசமாக நடத்தும் கலாச்சாரம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

விப்ரோவில் பாலியல் ரீதியான பாகுபாடுகள், ஆண் பெண் பணியாளர்களுக்கு வேறு பாடான ஊதிய முறை, பாலியல் ரீதியான தொந்தரவுகள் உள்ளதாகவும், விப்ரோ பெண் பணியாளர்களை இரண்டாம் நிலை பணியாளர்களாகவே பார்க்கிறது என்றும் ஸ்ரேயா கூறியுள்ளார்.

மேலும் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை துணைத் தலைவர் மற்றும் சர்வதேச பிபிஓ தலைவராக இருந்த மனோஜ் புஞ்சா மோசடியாக திருமணம் செய்த விவகாரம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

விப்ரோ நிறுவனத்திலிருந்து வெளியேறிய மனோஜ் புஞ்சா, தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோலேண்ட் நிறுவனத்தில் செயல் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக விப்ரோ நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் முதன்மை துணைத் தலைவர் மற்றும் செயல் அதிகாரியாக பணியாற்றினார் மனோஜ்.

வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கருத்து தெரிவிக்க விப்ரோ நிறுவனம் மறுத்துவிட்டதோடு, பணியாளர்கள் விருப்ப தேவைகள் குறித்த மோதல்கள், தனிப்பட்ட உறவுகள் சார்ந்த மோதல்களை நிறுவனத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் விப்ரோவின் கொள்கையாக உள்ளது. தனிப்பட்ட முறையில் இதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிறுவனப் பணியிலிருந்து இந்த இரண்டு பேரும் விலகிவிட்டனர். இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டதாக சந்தேகிக்கிறோம். நிறுவனத்தின் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ