Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு?

மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில், மலேசிய நாட்டுக் கொடி வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி திடீரென மாயமானது. அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன ஆனது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனாலும், அந்த விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி, மாயமான விமானத்தினுடையதுதான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மின்டானோ தீவில் தெற்கு உபியான் டாவி-டாவி என்ற இடத்தின் அருகே, கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 70 அங்குல நீளமும், 35 அங்குல அகலமும் கொண்ட மலேசிய நாட்டுக் கொடியுடன் கூடிய ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த விமான பாகத்தில் பல எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், சீட் பெல்ட்டுடன் விமானி எலும்புக்கூடாக இருக்கையில் அமர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பறவைகளை வேட்டையாட அந்த பகுதிக்கு சென்ற இருவர், இந்த விமானத்தின் பாகம் கிடந்த தகவலை உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்துசென்ற போலீசார் விமானத்தின் பாகம் விழுந்துகிடக்கும் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக, மலேசியா நாட்டில் உள்ள சபா மாகாண போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கவனித்து விசாரணை நடத்துமாறு அவர்களுக்கு மலேசிய நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் லியோவ் ஐயாங் லாய் உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால், இந்தத் தகவலை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ