Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஷ்யா, அமெரிக்க நாடுகள் மீது புனிதப்போர்: ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி!

டமாஸ்கஸ்: சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது நம் இனத்தினர் புனிதப்போர் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது.

மேற்கு ஆசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதே நேரம், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றன. பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக சிரியாவில் ரஷ்யா கடந்த மாதம் 30–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை தொடங்கி உள்ளது.

ஆனால் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குறி வைத்து தாக்காமல், பஷார் அல் ஆசாத் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. மேலும், ரஷ்யாவுடன் அமெரிக்கா உளவுதகவல்களை பகிர்ந்து கொள்வதில்லை. சிரியாவில் தாங்கள் நடத்தி வரும் வான்தாக்குதல்களில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பதில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

சிரியாவில் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா நேற்று முன்தினம் கூறும்போது, ''கடந்த 24 மணி நேரத்தில் 86 தீவிரவாத இலக்குகளை எங்கள் விமானப்படை அதிரடியாக தாக்கி உள்ளது. செப்டம்பர் 30–ந் தேதி வான்வழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து, ஒரு நாளில் நடைபெற்ற அதிகபட்ச தாக்குதல் இதுதான். இவற்றில் பல இலக்குகள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகள் ஆகும்" என்று தெரிவித்து உள்ளது.

ஒரே நேரத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் வான்தாக்குதல்கள் நடத்தி வருவது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முகமது அல் அத்னானி, இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ''சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தோற்கடிக்கப்படும். உலகமெங்கும் உள்ள நம் இனத்தினர் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மீது புனிதப்போர் நடத்த வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது, உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்