Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகப் பெண்ணின் கை துண்டான விவகாரம்: சவூதி போலீஸ் விளக்கம்!

ரியாத்: சவூதியில் வீட்டு வேலை செய்த தமிழகப் பெண் தப்பியோட முயன்ற போது தவறி விழுந்ததில்  கை துண்டானது என்று சவூதி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், சவூதி அரேபியா ரியாத் நகரில் ஒருவரின் வீட்டில் பணிப்பெண் வேலைக்குச்  சென்றார். அண்மையில் அவர் வலது கை துண்டான நிலையில், ரியாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வீட்டு முதலாளியின் தாக்குதலால் கஸ்தூரியின் கை துண்டிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த வீட்டு முதலாளி  கூறுகையில்,  அவர் வீட்டில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும்போது தவறி விழுந்ததால்தான் கை துண்டாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் வீட்டு முதலாளியின் சித்ரவதை தாங்காமல் தப்பி ஓட முயன்றதற்காக, கஸ்தூரியின் கையை வீட்டுக்காரர் வெட்டி விட்டதாக கஸ்தூரியின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தினர்.இச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், முழுமையான விசாரணை சவூதியரசை நடத்துமாறு கேட்டுக்கொண்டது.

மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அறுவைச் சிகிச்சைகளுக்கு பிறகு, கஸ்தூரியின் உடல்நிலை தற்போது சீரடைந்து வருகின்றது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, தப்பியோட முயன்றபோது தவறி விழுந்ததால்தான், கஸ்தூரியின் கை துண்டானதாக ரியாத் நகர போலீசார் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சவூதி போலீஸ் செய்தித்தொடர்பாளர் பவாஸ் அல் மைமான்,

" வீட்டு வேலைக்கு சேர்ந்த கஸ்தூரி, மன உளைச்சலுடனே இருந்துள்ளார். அவர் வேலை செய்யும் வீடு, அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. எனவே, ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்புவதற்காக, அவர் பழைய துணிகளைக் கொண்டு கயிறு ஏணி தயாரித்துள்ளார்.

தப்பிச் செல்வதற்காக, அந்த ஏணி வழியாக இறங்கியபோது, தவறி விழுந்தார். அப்போது, வீட்டின் கீழ்ப் பகுதியில் இருந்த ஜெனரேட்டரின் முனையில் அவரது வலது கை பட்டதால் அந்த இடத்திலேயே கை துண்டானது.

நேரில் கண்ட சாட்சிகளும் இதை உறுதி செய்துள்ளனர். வீட்டுக்காரர், தகவல் அறிந்து வந்து, அப்பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இந்த வழக்கு, புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பிரிவிடம் வழக்கு கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் உள்ள அனைவருமே சமம்தான். சட்டம் அளித்த அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு" என்று கூறியுள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ