Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை வளர்க்க இந்தியர்களுக்கு இலவச உணவு!

ந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவவும், நல்லுறவு தொடரவும், பலர் பல வழிகளில் முயன்று வருகின்றனர். ஆனால் சில அரசியல் அமைப்பினரோ பாகிஸ்தானை இந்தியாவின் எதிரியாகவே, இந்திய மக்களுக்கு சித்தரித்து வருகின்றனர். ‘பாகிஸ்தானை சேர்ந்தவர்’ என்றாலே அவர் ‘இந்தியாவுக்கு எதிரானவர்’ என்ற எண்ணம் பல இந்தியர்களின் மனதில் ஆணி வேராக பதிந்திருக்கின்றது.

இதை தகர்க்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபரான இக்பால் லத்திஃப், ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். பாகிஸ்தானை சுற்றிப் பார்க்க குறுகிய கால விசாவில் வருகை தரும் அனைத்து இந்தியர்களுக்கும், தனது ‘டங்கின் டோனட்ஸ்’ உணவகத்தின் அனைத்து கிளைகளிலும் உணவும், டோனட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இக்பால் விடுத்துள்ளார். பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத், லாகூர், பேஷாவர் ஆகிய நகரங்களில், உலகப் புகழ் பெற்ற டோனட் உணவகமான டங்கின் டோனட்ஸின் 26 கிளைகளின் உரிமையாளரான இக்பால், இந்த அறிவிப்பை விடுத்த சில நாட்களில் 2400 க்கும் அதிகமான இந்தியர்கள், தனது உணவகங்களில் உண்டு மகிழ்ந்ததாக கூறி பெருமை கொள்கிறார்.



மும்பையில், கராச்சியை சேர்ந்த பாகிஸ்தானிய குடும்பத்தினருக்கு, விடுதி உரிமையாளர்கள் விடுதிகளில் தங்க இடமளிக்காமல், அவர்கள் சாலையில் படுத்து உறங்கிய செய்தியை அறிந்த இக்பால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானார். இதன் காரணமாகவே இக்பால், இந்த இலவச உணவளிக்கும் முடிவுக்கு வந்துள்ளார். “இது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் காந்தியின் போதனைகளான அன்பையும், சகோதரத்துவ வாழ்வு முறையையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் ஓர் சிறிய முயற்சி” என்கிறார் இக்பால்.

சிவசேனா கட்சியின் பாகிஸ்தானிய எதிர்ப்புக் கொள்கையை விமர்சித்துள்ள இக்பால், “நாம் அவர்களிடம், முற்போக்கு சிந்தனையாளர்களாக மாறும்படி வலியுறுத்த வேண்டும். அன்பு உலகிலுள்ள எல்லாவற்றையும் வீழ்த்திவிடும்” எனக்கூறியுள்ளார். இச்செயலுக்காக,  பாகிஸ்தான் ராணுவத்தில் இருக்கும் தனது நண்பர்கள் தன்னை பாராட்டியுள்ளதாகவும் இக்பால் கூறியுள்ளார்.

“இந்திய எல்லையை கடந்து வாழும் நாங்கள் அனைவரும் இந்தியாவின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளோம். இந்தியா-பாகிஸ்தானைச் சேர்ந்த 140 கோடி மக்களும் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். இரு நாட்டிலும் உள்ள சில அன்பை விரும்பாத வெறியர்களின் செயல்களால்தான் நாம் பிளவுபட்டுக் கிடக்கின்றோம்.

டங்கின் டோனட்ஸின்  இந்த இலவச அறிவிப்பினை போல், மக்களை இணைக்கும் செயல்களில் நாம் ஈடுபட்டால், நம்மிடையே பலமான உறவுப் பாலத்தை உருவாக்கலாம்” என இக்பால் கூறியுள்ளார்.

  மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இக்பாலின் இந்த அறிவிப்பு, இந்தியா-பாகிஸ்தான் இடையே அன்பு கலந்த நல்லுறவை வளர்க்க நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.

-ஜெ. விக்னேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ